
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் நாளை 6 மே லிருந்து 20 மே 2021 வரை பணிக்கு அலுவலகம் வருவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெருகிவரும் கரோனா தொற்றினைக் கருத்தில்கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் அலையின்போதும், இதேபோன்று பணிவிலக்கு வழங்கப்பட்டது. எனினும் உரிய அரசாணைகள் வெளியிடுவதில் ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட தாமதங்களால், பணிவிலக்கு காலத்தின் சரிபாதி நாட்கள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
மே 6ஆம் தேதிமுதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அடுத்த நாளே மாற்றுத்திறனாளிகளுக்குப் பணிவிலக்கு அரசாணை வெளிவந்துள்ளமை மாற்றுத்திறனாளிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சரியான நேரத்தில் விரைவாக முடிவெடுத்த தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவிப்பதோடு, எதிர்வரும் காலங்களில் கரோனா தொடர்பான புதிய அரசாணைகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்த அறிவிப்பும் சேர்த்தே வெளியிடப்பட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அரசாணை பெறுவதற்குப் போராடிய அனைத்து சங்கங்கள், குறிப்பாக இந்த அரசாணையைப் பெறுவதற்காக தினமும் குரல்கொடுத்த டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் அவர்களுக்கும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது சவால்முரசு.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
