
“பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்குத் தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் 10000 பார்வைத்திறனற்ற மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்.”
இது, கடந்த பிப்பரவரி 14ஆம் நாள் தமிழகத்தின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து துணைமுதல்வரும் நிதியமைச்சருமான மாண்புமிகு திரு. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு. அதன்படி, தலா 5000 பார்வைத்திறன் குறையுடையோர் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு ரூ. 10000 மதிப்பிலான திறன்பேசிகள் வழங்கிட தமிழக அரசு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன்பேசிகள், ஏற்கனவே அங்கன்வாடித்துறை, பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சுகாதாரத்துறையில் வழங்கப்படும் திறன்பேசிகளுக்கு இணையானதாக இருத்தல் வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் தெரிவித்திருந்தார். அதன்படி, ரூ. 10 கோடியை ஒதுக்கியிருக்கிற தமிழக அரசு, 5000 பார்வைத்திறன் குறையுடையோருக்கும், 5000 செவித்திறன் குறையுடையோருக்கும் ரூ. 10000 மதிப்பிலான திறன்பேசிகள் வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக செல்ஃபோன்களை வினியோகிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் நேற்று (28.டிசம்பர்.2020)வெளியிட்டார்.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வழங்கப்படும் செல்ஃபோன்களில் 60 விழுக்காடு கடந்த 25.செப்டம்பர்.2020 தேதியன்று 18 வயது நிறைவடைந்த கல்லூரி பயிலும் செவித்திறன் குறையுடைய மாணவர்கள் மற்றும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 விழுக்காடு வேலையின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கும், 20 விழுக்காடு சுய தொழில் மற்றும் தனியார்த்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் எஞ்சிய 5 விழுக்காடு பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் மாற்றுத்திறனாளி அரசூழியர்களுக்கு இது வழங்கப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபோன்கள் வழங்கப்படுவதில் கடும் பாதிப்புக்குள்ளான செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், அரசாணை வெளியிடப்பட்ட நாள்முதல் வந்திருக்கும் விண்ணப்பங்களின் மூப்பினைக் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஃபோன்களை ஒருவர் ஒருமுறை மட்டுமே பெற இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுளுளது.
கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் நிறுவனங்களிலிருந்து படிப்புச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டுமென சில மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ள செய்தித்தாள் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும் எனவும் பயனாளிகளிடையே கேள்வி எழுந்துள்ளது. அதற்கான தெளிவான பதில் மாற்றுத்திறனாளி ஆணையரால் நேற்று வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளிலும் குறிப்பிடப்படாதது ஏமாற்றம் தருவதாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர் மாற்றுத்திறனாளிப் பயனாளிகள்.
வழிகாட்டு நெறிமுறையைப் பதிவிறக்க க்லிக் செய்யவும்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
