Categories
வகைப்படுத்தப்படாதது

உதவித்தொகை பட்டுவாடா – அரசு வங்கிகளுக்கு பதில் தனியார் வங்கியா? புதிய திட்டத்தை கைவிடக் கோரி முதல்வருக்கு டாராடாக் கடிதம்

taratacg logo

மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் சமூகப்பாதுகாப்பு மாத உதவித்தொகையை, அரசுடைமை வங்கிகளுக்கு பதில் தபால்துறை அலுவலகங்களை பயன்படுத்தும் தனியார் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த முயற்சியினைக் கைவிட வேண்டும் எனவும் முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை 2012 ஆம் ஆண்டு முதல் அரசுடைமை வங்கிகளில் தமிழக அரசு பணம் செலுத்தி, தனியார் சேவை முகவர்கள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.  இந்த தனியார் சேவை முகவர்கள் முறைகேடுகள் செய்வதால், பயனாளிகள், நேரடியாக தொகை எடுத்துக்கொள்ள ATM வசதி கேட்டு, சமூகநலத்துறை அமைச்சர், அதிகாரிகள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர். 11-12-2020 அன்று மாற்றுத்திறனாளி அமைப்புகளுடனான பேச்சுவார்த்தையில்கூட மாநில வருவாய் நிர்வாக ஆணையர் இதனை உறுதிப்படுத்தினார். 

”இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க்(IPPB) எனப்படும் தபால் துறை பெயரில், அதன் அலுவலகங்களை பயன்படுத்தி இயங்கும் தனியார் வங்கி ஆகும்.  மத்திய மோடி அரசின் தனியார் மோகத்தால் 2018ல் தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த வங்கியின் மேலாண் தலைமை நிர்வாக பொறுப்பை தனியார்தான் நிர்வகித்து வருகின்றனர்.

சமூகப்பாதுகாப்பு உதவித்தொகைகளை இனிமேல் இந்த தனியார் வங்கியின் மூலம் பட்டுவாடா செய்யவும், இதற்காக இந்த வங்கியில் புதிய கணக்குகளை துவக்க வேண்டும் எனச் சொல்லி அக்-9 தேதியிட்டு சமூகநலத்துறை அரசாணை(எண்.35) வெளியிட்டுள்ளது லட்ச கணக்கான மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோரை அலைக்கழிக்கும் செயலாகும். 

அரசுடைமை வங்கி மூலம் எவ்வித செலவினமும் இல்லாமல் பட்டுவாடா செய்வதை விடுத்து, இந்த புதிய திட்டத்தில் ஒரு பயனாளிக்கு சமூகப்பாதுகாப்பு உதவித்தொகையை கொண்டு சேர்க்க தமிழக அரசு ரூ.29.50 செலவிட வேண்டுமென்பது தேவையற்ற கூடுதல் செலவை உருவாக்கும்.   பட்டுவாடா செய்வதிலும் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே, தனியார் துறையை ஆதரிக்கும் வகையிலும், பயனாளிகள், சங்கங்களிடம்கூட விவாதிக்காமல் எவ்வித வெளிப்படைத்தன்மை இல்லாமலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மோசடி திட்டத்தை உடனடியாக கைவிட உரிய உத்தரவுகளை தமிழக முதலமைச்சர் பிறப்பிக்க தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்திக் கோருகிறது..” இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.