
கரோனா பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும், துறையின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு. அ. மணிக்கண்ணன் அவர்கள் நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்தத் துறையில் இருக்கக்கூடிய சாபக்கேடான சிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் குறித்து எவ்வித புரிதலும் அற்ற, அல்லது அவர்கள் சார்ந்து இயங்குவதற்கான பயிற்சி ஏதும் பெறாத அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி அமர்த்துவதில் இருந்து தொடங்குகிறது எனவும், “அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகள் பாரா முகத்தையே பலவேளைகளில் பரிசாகத் தந்து சட்டப்படியோ மனசாட்சிக்கு உட்பட்டோ இயங்காமல், மாற்றுத்திறனாளிகளுக்கு குறையேதும் இல்லை என்று அரசிடமும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் இடமும் தன்னை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு எடுத்துச் சொல்லி தப்பிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். அவ்வாறு செயல்படுவதால் ஏற்படும் ஆபத்தை இதுபோன்ற நெருக்கடி காலங்களில் அதிகம் உணரத் தொடங்கி இருக்கிறார்கள் பார்வையற்றவர் உள்ளிட்ட இதர மாற்றுத்திறனாளிகள்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “ஆணையராக இருந்து அதிகாரத்தோடு இயங்கவேண்டிய பொறுப்பில், இயக்குனர் மட்டத்தில் அதிகாரியை நியமித்து பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல் இந்த துறையை அதன் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது தான் என்பதை அலுவலக நடைமுறை குறித்த அறிவு கொண்டவர்களுக்கு சொல்லி புரிய வேண்டியதில்லை! மாற்று திறனாளிகளுக்கு என்று உதவி எண் ஒன்றை கொடுத்து, அது மாண்புமிகு நீதிபதிகள் தங்கள் கைபேசியில் இருந்து அழைத்தபோது இயங்கவில்லை என்கிற நிலையில் அதனை வைத்திருக்கிற ஒன்று போதாதா இந்தத் துறை அதிகாரிகள் அலட்சிய போர்வையை போர்த்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு! எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் நடப்பது என்ன? என்ற கேள்வியை முன்வைக்கும் அந்த அறிக்கை,
இந்த துறையின் செயல்பாடுகள் இதற்கு முன்பை காட்டிலும் கடந்த மூன்று மாதங்களாக அதல பாதாளத்திற்கு சென்று விட்டன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆணையர் என்கிற அதிகார மட்டத்தில் இருக்கக்கூடிய இயக்குனர் எப்பொழுது அலுவலகம் வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது. அலுவலக என்னை தொடர்பு கொண்டால் எடுத்து பதில் சொல்ல ஒருவரும் பெரும்பான்மையான நேரங்களில் இருப்பதில்லை. மாற்றுத்திறனாளிகள் ஓடு தொடர்பை வைத்துக்கொண்டு உடனுக்குடன் தீர்வைத் தர வேண்டிய இயக்குனரும், இணை இயக்குனரும் இதர முதல் நிலை அதிகாரிகளும் அதற்காக எவ்வித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. அலட்சியத்தில் உச்சம் தொட்டதர்க்கு சான்றாக இதுவரை அனுப்பப்பட்ட மின்னஞ்சல் எதற்கும் பதில் இல்லை, அவற்றில் சுட்டிக்காட்டப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. அலுவலகத்திற்கு எழுதுகிற கடிதங்களும், அலுவலகத்திலிருந்து உயரதிகாரிகளுக்கு செல்லக்கூடிய கடிதங்களும் அவ்வப்பொழுது பொது வெளிகளில் கசிந்தது என்பதையே பெரு மகிழ்வோடு எடுத்துக்காட்டலாம் இந்தத் துறை அதிகாரிகளின் மெச்சத்தக்க செயல்பாட்டிற்கு! இதில் கொடுமை யாதெனில் பெரும் மதிப்புக்குரிய ஆணையர் பெருந்திரளாக மாற்றுத்திறனாளிகள் தங்களின் இடர்பாட்டை எடுத்துச் சொல்லும் தமிழ்மொழியில் பரிட்சயம் அற்றவராக இருப்பதுதான். இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு இச்சங்கம் ஆங்கிலத்தில் அனுப்பிய கடிதங்களுக்கு கூட இவர் பதில் தர முன்வரவில்லை என்பது வருத்தத்தோடு பதிவு செய்யத் தக்கது. இந்தத் துறை செயல் அற்று இருப்பதாலும், முடங்கிப்போய் இருப்பதில் மூழ்கித் திழய்ப்பதாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பலதரப்பட்ட பிரச்சினைகள் வாழ்வாதாரம் தொடர்பாக அனுதினமும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என்பது கண்கூடு.” என அந்த அறிக்கை நீள்கிறது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.