கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டு இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம், பன்மடங்காகப் பெருகிவரும் கரோனா தொற்று காரணமாகக் கைவிடப்படுவதாக கூட்டு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ” கொரோனா பேரிடர் ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் . ரூ .5000 / – வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஜுன் -10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்த மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் ஜுன் -2 அன்று அறிவித்திருந்தது .
இந்நிலையில் , போராட்டம் அறிவித்த நாள் முதல் , கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் பன்மடங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி , மருத்துவத்துறையினரும் , மாற்றுத்திறனாளிகள் மீது நல்லெண்ணம் கொண்ட சமூக , ஜனநாயக சக்திகளும் , ஆர்வலர்களும் , பேரபாயம் காரணமாக போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு எமது கூட்டு இயக்கத்துக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர் .
இந்த வேண்டுகோள்களை கணக்கில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைக்க மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டியக்கம் இன்று ஜுன் -9 மாலை நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதை இதன் மூலம் அறிவிக்கின்றோம் .
அதே நேரத்தில் , நீடிக்கும் கொரோனா பேரிடர் ஊரடங்கு காரணமாக அல்லல் படும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க தமிழக அரசு மாதம் ரூ .5000 / – வழங்க மீண்டும் எமது கூட்டியக்கம் வலியுறுத்துகிறது . இந்தக் கோரிக்கையை அனைத்து ஜனநாயக சக்திகளும் வலியுறுத்த வேண்டுமென நமது கூட்டியக்கம் வலியுறுத்துகிறது .
தற்போதைக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் நடத்திட மாற்றுத்திறனாளிகளையும் , ஆர்வலர்களையும் எமது கூட்டியக்கம் வேண்டுகோள் வைக்கிறது . கொரோனா பேரிடர் அபாயம் நீங்கியவுடன் , களத்திற்கு வந்துப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் .” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

