CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
“தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரி எமது சங்கத்தின் சார்பில் ஜுன் –1 தேதியிட்டு ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது.
பதிலி எழுத்தரைக் கொண்டு தேர்வு எழுதக்கூடிய மாற்றுத்திறன் குழந்தைகள் , தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் காரணங்களால் , ஒருவேளை தேர்வு எழுத முடியாமல் போனால் , அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க ஜூன் –1 அன்று நடைபெற்ற CBSE வாரிய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, அவ்வாரியத்தின் 02.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
மேலும் , கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் மத்திய மாநில அரசு மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு உள்ள சிரமங்களை கணக்கில் கொண்டு , அவர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வயதுவந்த மாற்றுத்திறனாளிகளுக்கே விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளபோது , மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே , அறிவிக்கப்பட்டுள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கோருகிறோம்.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயங்கள் எல்லோர்க்கும் பொதுவானவையே.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.


