-தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 92 விழுக்காடு மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை 4816 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்டு, அவர்களுள் 4395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, 617 மாணவர்கள் தேர்விவ் பங்கேற்று, 599 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம், அவர்களின் தேர்ச்சி விழுக்காடு 97.08 ஆக உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 61 பேரும், தேநீ மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவாக இரண்டு பேரும் தேர்வில் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் தேர்வெழுதிய 1047 செவித்திறன் மாற்றுத்திறனாளிகளில் 863 பேர் தேர்ச்சி பெற்று, அவர்களின் தேர்ச்சி விழுக்காடு 82.43ஆக இருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 112 செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களும், தூத்துக்குடியில் 5 மாணவர்களும் தேர்வெழுதினர்.
மாநிலம் முழுவதும் தேர்வெழுதிய 1232 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 1153 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி விழுக்காடு 93.59 ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 68 பேரும், ஊட்டி மற்றும் காரைக்காலில் முறையே 8 மற்றும் 4 உடல்ச்சவால்கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதினர்.
பிற வகை மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, 1920 பேர் தேர்வெழுதி, 1780 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் அவர்களின் தேர்ச்சி விழுக்காடு 92.71ஆக உள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 129 பேரும், குறைந்த அளவில் சிவகங்கை மாவட்டத்தில் 8 பேரும் தேர்வெழுதினர்.
தமிழக அரசால் நடத்தப்படும் சென்னை, திருச்சி மற்றும் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய 45 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளில் தர்மபுரி மற்றும் தஞ்சை உயர்நிலைப்பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளன.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

