மின்னிதழ் பற்றி

உடல்க்குறைபாடுகளில் அதிக முக்கியத்துவம் தந்து பொருட்படுத்த வேண்டிய ஒன்று பார்வையின்மையும் அதன் சவால்களும். இன்றைய சூழலில், மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலால், பார்வையின்மை அல்லது பார்வைக்குறைபாடு குறித்த சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுச் சிந்தனையைப் பார்வைத்திறன் குறைபாட்டிலிருந்து தொடங்கிய முந்தைய காலகட்டம் ஒன்று இருந்தது. பார்வையின்மையிலிருந்து தொடங்கினாலும், அனைத்துத் தரப்பு ஊனமுற்றவர்களுக்கும் அது பயன்விளைவிப்பதாய் அமைந்தது. காரணம், பார்வையின்மையின் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் முழுக்க அகம் சார்ந்தவை, ஆழ்ந்த சிந்தனைகளைக் கோரக்கூடியவை

இன்றைய துரித காலகட்டத்தில், அகம், ஆழம் என்ற சொற்கள் பொருளிழந்துவிட்டன. இங்கு எல்லாமே ஹாபி, எதுவுமே லாபி என்ற வாசகம் படிப்படியாக ஒரு கோட்பாடாகவே மாறிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய அக இருண்மை சூழ் காலகட்டத்தில், நமக்கான அகல்களை நாம்தான் ஏந்திட வேண்டும். அப்படிப் பார்வைத்திறன் குறையுடையோருக்காக ஏற்றப்பட்ட முதல் ஞானவிளக்கு ‘விழிச்சவால்’. இப்போதும் சுடர்ந்துகொண்டிருக்கும் இரண்டாவது விளக்கு விரல்மொழியர். மூன்றாவதாகவும் ஒரு விளக்கை ஏற்றலாமே என்கிற உந்துதல் திரி, உழைப்பென்னும் நெய்யில் ஓயாது எரிய, ஒளிரத் தொடங்கியிருக்கிறது  தொடுகை மின்னிதழ்.

இது பார்வைச்சவால் குறித்துப் பேசும். பார்வைச்சவாலுடையோரின் குரல்களைப் பிரதிபளிக்கும். பார்வையற்றோர் அல்லது பார்வைத்திறன் குறையுடையோர் தொடர்பான நிகழ்ந்தன, நிகழ்வன குறித்து முடிந்தவரை ஆவணப்படுத்த முயலும்.

பார்வையற்றோர் தமக்குள் உறவாடி, பொதுச்சமூகத்தோடு உரையாடும் களமான தொடுகையின் மாறா விதி ஒன்று உண்டு. அது, பார்வையற்றவர்கள் அல்லது பார்வைத்திறன் குறையுடையவர்கள் எந்த ஒரு பொருண்மை குறித்தும் எழுதலாம், பிறரோ, பார்வையின்மை, பார்வையற்றோர் குறித்து மட்டுமே எழுத வேண்டும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே!

தொடுகையால் தோழமை கொள்வோம்,

தோழமையால் துயர்களை வெல்வோம்.

இதழிலிருந்து