பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் எட்டாம் நாள் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்ட அறிவிப்பு.
நாள் (8): 19/2/2024.
நேரம்: காலை. 9.30.
இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புக்கு: 7449158045, 7904881610.
அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உரிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். தீவிரமாக நடை பெற்று வரும் நம் போராட்டத்தில் பணியில் உள்ளோரும், பணி நாடுனர்களும், மாணவர்களும் பெருந்திறளாகக் கலந்துகொண்டார்கள். எனினும் வரும் நாட்களில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பார்வையற்ற பணி நாடுனர்கள் கலந்துகொண்டால் மட்டுமே நாம் விரைவாகப் போராட்டத்தினை வென்றெடுக்க இயலும். நெஞ்சுறம் நிரைந்த போராட்டம் நம் ஒவ்வொருவரின் செங்குறுதியிலும் நெருப்பாய் வெகுண்டெழட்டும்! போராட்டம் முடியும் வரை நம் அன்றாடக் கடமை இதுவே என உறுதி ஏற்போம். தொடர்ச்சியாக போராட்டத்தில் பங்கேற்போம்.
கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உரிமைகளை மீட்கவும் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற சமூக உறவுகள் பெறும் திரளாக கலந்து கொண்டு இந்த தொடர் போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற வாருங்கள் வாருங்கள் என்று உங்களை சங்க செயற்குழு மற்றும் போராட்டக் குழு இருகரம் கூப்பி அழைக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கஷ்டப்படாமல் இருக்க, கஷ்டப்படுவோம்!
வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்!
பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?
இந்தப் போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!
வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!
உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!
போராட்டம் வென்றிடுவோம்,
வெற்றி வாகை சூடிடுவோம்.
கவிதை: என் அம்மா! – ப. சரவணமணிகண்டன்
அடிக்கடி இந்த அம்மா வேற
போன் பண்ணித் தொலைக்கிறா,
“தம்பி எங்கிருக்கேனு” கேட்டுத்
தாலிய அறுக்கிறா.
ஆனாலும் இப்போ இப்போ
அடிக்கடி அவகிட்ட
பேசணுமுனு தோனுது,
அப்படியே மடி சா்ஞ்சு
தூங்க மனம் ஏங்குது.
“சாப்டியா”னு கேட்கிற
ஒத்தக் கேள்விக்கு
“ஏழு நாளாச்சு”னு
எப்படிச் சொல்றது?
உடைஞ்சிடுவா, உருகிடுவா,
ஊரு தேசம் விசாரிச்சு
ஓடோடி வந்திடுவா.
புள்ள
பெரிய படிப்பு படிக்கிறதா
பீத்திக்கிட்டுத் திரியுறா, – நான்
பேருந்து ரயிலுன்னு
பர்பி வித்து அலையுறேன்.
“அங்க இங்க அலையாதே”னு
அம்மா நீ சொல்லுவியே!
இப்போ நான்
எங்கேயும் அலையலமா,
எதுக்குமே வழியில்லமா,
ஒரே இடத்தில படுத்திருக்கேன்,
ஒருகை பார்த்துட பிழைச்சிருக்கேன்.
குருதி குறையுதும்மா,
உறுதி இடறுதும்மா,
கூட்டாளிங்க அன்பு மட்டும்
கூடிக்கிட்டே போகுதும்மா.
சண்டை போட்டவனும்,
சட்டை பிடிச்சவனும்,
தாயாகத் தாங்குறான்,
“போதும் டா வந்துடு”னு
பொழுதுக்கும் ஏங்குறான்.
தங்கச்சி மகளுக்கு
தண்ணி ஊத்து முடிஞ்சுருச்சா?
தம்பியோட பையனுக்கு
பப்லிக்கு தொடங்கிருச்சா?
புழு நெலிஞ்ச விடுதி சோறா
போயிடுச்சு பிறவி,
போனால் போகட்டும் போடானு
நான்
ஆயிட்டேன்மா துறவி.
போனை எடுக்கலைனு
அடிச்சுக்கிற உன் மனசு
அரசுக்கும் இருந்துச்சுனா
என் ஆயுசும் பெருசு.
தூக்கம் மிரட்டுதும்மா,
தொண்டை பிதற்றுதும்மா,
காதடச்சுப் போனதால எல்லாம்
கனவாவே தெரியுதும்மா.
உள்ளுக்குள்ள உருகுகிற பிண்டம்
ஓடி வருது தண்ணி தண்ணியா,
உன் பாசத்த ஏந்திக்கிட்டு நண்பர்கள்
வாராங்க அணியணியா.
தமிழகமே என்கூட,
நான் தனியாலாம் இல்லம்மா,
தடுமாறாத மனசு வேணும்
தைரியம் கொஞ்சம் சொல்லும்மா.
எனக்கு
அரசு வேல கெடைக்கணுமுனு
எந்தச் சாமிக்கு நேந்திருக்க,
இன்னும்
ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கிறேன்,
இன்னக்கி
என்னம்மா சமச்சிருக்க?
திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டுக்குழு கண்டன ஆர்பாட்டம்
20/02/2024
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த பட்டதாரி சங்கத்தால் நடத்தப்படும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கண்டு கொள்ளாத தமிழகம் அரசை கண்டித்தும் போராட்டகார்களின் மீது காவல்துறையின் அத்துமீறலை கண்டித்தும் உடனடியாக மாற்றுதினாளிகளின் நல துறையையும் தன்னகம் வைத்திருக்கும் மாண்புமிகு மாநில முதல்வர் அவர்கள் சம்மந்தப்பட்ட நபர்களை நேரடியாக அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தர அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
கோரிக்கைகள்
1. மாநில அரசு வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவிதொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை தனியாக பிரித்து அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500/-ஐ ரூ.3000/-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
2. தமிழகத்திலுள்ள பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் அரசு பொது வணிக வளாகங்கள் போன்றவற்றில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தில் நடத்தப்படும் கடைகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 10 விழுக்காடு கடைகள் ஒதுக்கி கல்வியை தொடர முடியாதவர்கள், பிற நிரந்தர வாழ்வாதார மற்றவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிட வழிவகுக்க வேண்டும்
3. ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து பார்வையற்றோர்களுக்கும் நீண்ட காலமாக அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் பார்வையற்றவர்களுக்கும் உடனடியாக நிரந்தர பணிவாய்ப்பு வழங்கிட வேண்டும்.
4. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார நோக்கத்திற்காக (வியாபாரம், இசைநிகழ்ச்சி)போன்றவற்றிற்கு எடுத்து செல்லும் ஊதுபத்தி, இசைக்கருவிகள் ஆகியவற்றிற்கு அரசு நகர பேருந்துகள், வெளியூர்பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் முற்றிலும் சுமைகட்டணம் விலக்கு வழங்கி சுயதொழில் மேம்பாட்டிற்காக ஆணை வழங்கிட வேண்டும்.
5. தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கீழ் உள்ள போக்குவரத்து கழக அனைத்து பணிமனைகளிலும் பார்வையற்றோர்களின் முக்கிய தொழிலான நாற்காலி பின்னும் பணிகளை நிரந்தரமாக வழங்கிட வேண்டும்.
6. மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை பொது விநியோகம் விற்பனை மூலம் கூட்டுறவு அங்காடிகள் வழியாக அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்ய வழிவகுக்க வேண்டும்.
7. மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு மாநில முதல்வர் அவர்களை எங்கள் அமைப்பு பொறுப்பாளர்கள் சந்தித்து பேசிட வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
நன்றி.
இவன்
தலைவர்
A. மாரியப்பன்
பொதுசெயலாளர்
P. சந்திரசேகர்
9942157248
பொருளாளர்
S. வரதராஜன்
தஞ்சாவூர் போராட்ட அறிவிப்பு.
நாள் இரண்டு.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பாக கடந்த 12/02/2024ம் முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது இதை நண்பர்கள் அனைவரும் அறிவீர்கள்.
இப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் காவல்துறையை வைத்து நம்மவர்கள் மீது அநாகரிகமான அடக்கு முறையை கட்டவிழ்த்து வீதியில் இறக்கி விட்டுச்சென்றதையும் தாங்கள் அறிந்ததே.
ஒரு பார்வை அற்றவராய் பார்வையற்ற சமூகத்திற்கு நடைபெற்ற இந்த அநீதிக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்
ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை
பார்வையற்றோர் என்ற ஏளனமா
இதனால் உங்கள் வாக்கு வங்கி பாதிக்காது என்ற ஆணவமா
இப்படி உங்கள் மனதில் எழும் கேள்விகளையும் குமுறல்களையும் ஒருங்கிணைக்கிறது தஞ்சை மாவட்டத்தில் பார்வையற்றோ மாணவர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் நாளை 20/02/2024 செவ்வாய்க்கிழமை.
நேரம் காலை 9.30 மணி முதல்.
இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் அழைத்து தெரிந்து கொள்க.
அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்.
நண்பர்களே நமக்காக போராடும் நண்பர்களுக்கு தோள் கொடுக்க இயலவில்லை என்றாலும் தூரத்தில் இருந்து குரல் கொடுப்போம்
நமக்காக உறுதியோடு போராடுபவர்களுக்கு ஊக்கம் அளிப்போம்.
இங்கனம் தமிழ்நாடு ஜனவரி நான்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பொதுச் செயலாளர்: அ.மணிக்கண்ணன்
தொடர்புக்கு.
7010838144.
Be the first to leave a comment