பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு.
நாள் (5): 16/2/2024.
நேரம்: காலை. 9.30.
இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புக்கு: 7449158045, 7904751694.
அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உறிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம்.
ஆனால் இன்று உறிமை மீரல்கள் அரங்கேறி இருக்கிறது. நேற்று இரவு காத்திருக்கவும் நமக்கு உறிமை மருக்கப்பட்ட நிலையில். இன்றோ அதிகார போதை தலைக்கேறிய மாற்றுத் திறணாளிகள் ஆணையரக இயக்குனர், வேலை செய்வதைத் தடுக்கிறார்கள் என்ற பொய் குற்றத்தினைக் கூறி, காவட்டுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, உண்ணா நோன்பிருந்த நமது போராளிகளை கைது செய்து தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அதே அலைக்கழிப்பு அதே அத்து மீரல்!
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் நம் உண்ணாவிரத வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
ஞாயங்களைக் கேட்டுப் பெறுவதில் தாமதம் ஏன்?
வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோறிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்!
பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?
இந்த போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!
வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!
உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!
போராட்டம் வென்றிடுவோம்,
வெற்றி வாகை சூடிடுவோம்.
அனைத்தும் சத்தியம்! – சகா
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்ட களம் நாளுக்குநாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. போராட்ட களத்தில் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு செய்திகளும் மனதைப் பிசைகின்றன.
• விளக்கை அணைத்துவிட்டு காவல்த்துறை அடித்தார்கள்.
• மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்.
• அழைத்துப் பேசுவதற்குப் பதிலாக, கைது செய்யும்படி காவல்த்துறைக்குச் சொல்கிறார்.
• பார்வையற்றோர் பிரச்சனை குறித்து தான் சட்டசவையிலே முறையிட்டபோதும், அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அதைக் கண்டுகொள்ளாமல் ஏதேதோ பேசியதாக எதிர்க்கட்சித் தலைவரே சொல்கிறார்.
• போராட்டத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், வணிகம் செய்யும், யாசகம் செய்யும் பார்வையற்றவர்களைக்கூட அவர்கள் முதியவர்கள் என்றாலும் கைது செய்கிறார்கள்.
• முந்தைய ஆட்சியில் போராடிய பார்வையற்றவர்களைக் காட்டில் இறக்கிவிட்டார்கள் எனக் கண்டித்தவர்கள், இன்றைக்கு அதையே பெரும்பாலும் செயல்நகல் செய்கிறார்கள்.
இத்தனை இன்னல்களுக்குமிடையே, ஐந்து பார்வையற்றவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாம் நாளாய்த் தொடர்கிறது. அவர்கள் கேட்பது ஒன்றே ஒன்று.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறையை உள்ளார்ந்த அன்பின் நிமித்தமாக, தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கும் தலைமையை, தங்கள் அமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்கிறார்கள் போராளிகள். இதில் தவறென்ன இருக்கிறது? அப்படிச் சந்தித்தால்தானே சில உண்மைகளை, அவரே அறியாத சில அதிகார சூழ்ச்சிகளை அவரிடமேசொல்ல முடியும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தன்னிடமே வைத்துக்கொண்டதாய் தலைமையும், தலைமையின் நேரடிப் பொறுப்பில் இருப்பவர்கள் என்று மாற்றுத்திறனாளிகளும் பெருமிதப்பட்டுக்கொள்ளலாம் கொண்டாடலாம். அந்தக் களிகூறல் பரணிகளின் சத்தங்களைப் பெரிதாக்கி, சத்தமில்லாமல் பலர் சவுகரியம் அடைகிறார்கள் என்பதை யாரிடம் சொல்வது?
மாற்றுத்திறனாளிகளால் தங்கள் அமைச்சரை அவ்வளவு எளிதாகச் சந்தித்துவிட முடியாது என்பதை ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கும் அதிகார பீடங்கள் குறித்து எங்கே முறையிடுவது?
முதல்வருக்கே கடிதங்கள் எழுதலாம், மனுப்போடலாம் என்றால், அந்தக் கடிதங்கள் வந்துசேரும் கடைசிப் புகலிடமும், அதற்கு உரிய பதில் எழுதி விஷயத்தை முடிக்கும் கடப்பாடும் துறை அதிகாரிகளின் கைகளில் அல்லவா கச்சிதமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது? இது கேள்விகளற்ற ஒரு சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறது என்பதை எங்கே போய்ச் சொல்வது?
முதல்வர்தான் துறையின் அமைச்சர் என்ற பதட்டமோ, பரபரப்போ அதிகாரிகளிடம் தென்படுவதற்குப் பதிலாக, “போ போ எங்கே போய்ச் சுத்தினாலும் இங்கேதான் வரவேண்டும்” என்ற தொனியில் அபிரிவிதமாய் வளர்ந்துகொண்டிருக்கும் அலட்சியங்கள் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கிறது என்பதை எங்கே முறையிடுவது?
நங்கநல்லூரோ, நாகர்கோவிலோ, எப்படியெல்லாமோ அலைக்கழிந்து, எவரெவரிடமோ உதவிகள் வாங்கித் தட்டுத்தடுமாறி ஒரு மாற்றுத்திறனாளி ஆணையர் அலுவலகம் வந்தால், உரிமைத் திட்டம் (Rights) என்கிற பெயரில் ஒரு நிமிடம் தவறாமல் கூட்டம் நடக்கிறது எனக் கோரசாகச் சொல்கிறார்கள். சந்திக்க விரும்பினால், ‘அப்பாயிண்ட்மண்ட் இருக்கா?’ என்கிறார்கள்.
முன்பெல்லாம், ஆணையர் மறுத்தால், செயலரைச் சந்திக்கலாம். செயலரும் மறுத்தால் அமைச்சரைப் போய் பார்க்கலாம். இப்போது எங்கே செல்வது?
உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் என அரசு ஏராளமாய் அறிவித்துச் செயல்படுத்துகிறது என்பீர்கள். ஆனாலும், ஏன் இத்தனை கிளர்ச்சிகள், ஆங்காங்கே போராட்டங்கள்? காரணம், நீங்கள் வழங்கியிருப்பது உணவு. குறைவோ, கூடுதலோ பசி ஆறுகிறது. ஆனால், பறவைக்கு அடையாளம் சிறகல்லவா? தரமான கல்வியும், தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் மட்டும்தான்மாற்றுத்திறனாளி போன்ற விளிம்புநிலை மனிதனின் சிறகு.
அந்தச் சிறகை வளராமல் பார்த்துக்கொள்ளும் வஞ்சகங்கள் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு கேட்கிறார்கள்.
அது டிசம்பர் 31, 2010. சுமார் 70க்கும் மேற்பட்ட உடல்க்குறையுடைய மாற்றுத்திறனாளிகள் தொடர் உண்ணாவிரதத்தில் இருப்பதைக் கேள்வியுற்று, நெஞ்சு பொறுக்காமல், தன் முதுமையைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், களத்திற்கே சர்க்கர நாற்காலியில் வந்து அவர்களைச் சந்தித்துக் கண் கலங்கிய முதல்வரைப் பெற்றது இந்தத் தமிழ்நிலம்.
ஆனால், இப்போது என்ன நடக்கிறது? தன் அரசாட்சிக்குட்பட்ட பெருநிலத்தைக் கண் இமைபோல் காக்கும் அரசன், பரிவும் பாசமும் நிறைந்தவராய்த் தன் பொறுப்பிலே இருக்கிற மாளிகை ஒன்றுக்கு வருகை புரிகிறார். அங்கே வெள்ளையடிக்கப்படுகின்றன, விருந்துகள், உபச்சாரங்கள் வேகவேகமாய் நடக்கின்றன. தூய ஆடையும், முகப்பூச்சும் பளிச்சிட குழந்தைகளை ராஜா முன்னர் நிறுத்துகிறாள்கள் செவிலியர். அவர்கள் பேச்சற்றவர்கள், பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள்.
ராஜாவின் தேறுதல் மொழியில் ஒரு நம்பிக்கையும் புத்துணர்வும் அவர்களிடம் பிறக்கிறது. அடுத்தமுறை, அதற்கடுத்தமுறை என இது தொடர்கிறது. ராஜா, செவிலி, குழந்தைகள் என எல்லோரும் இருக்கிறார்கள். புத்துணர்வும் நம்பிக்கையும் மெல்லமாய் நகர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன. ஏன் எனச் சொல்ல குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு வேண்டாமா?
மேலே சொல்லப்பட்ட அனைத்தும் சத்தியம் என்பதை ‘அனைத்தும் சாத்தியம்’ என்கிற வரவேற்பறையைக்கடந்து நடுக்கூடம்செல்லும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் ஒவ்வொருநாளும் உணர்ந்தபடியே இருக்கிறார்கள். அதை உள்ளது உள்ளபடி உரைக்கத்தான் ஒரு வாய்ப்பு கேட்கிறார்கள். மன்னவன்தான் மனசு வைக்கவேண்டும்.
பார்வையற்ற அரசு பணியாளர் நலச் சங்கம் சென்னை-40.
நாள்; 15.02.2024
அறிக்கை.
பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளான 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தர அரசை வலியுறுத்தி அறவழியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை 12.2.2024 அன்று முதல் நடத்தி வருகின்றார்கள். ஆனால் இந்நாள் வரை முதல்வர் அவர்களோ, அமைச்சர்களோ, அரசு உயர் அதிகாரிகளோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளோடு எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கும் செயலாக அமைகிறது.
ஊனம் என்னும் சொல்லை உதிரவிட்டு மாற்றுத்திறன் என்னும் சொல்லை மலரவிட்ட முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழித்தோன்றுதலில் ஆட்சி புரியும் முதல்வர் அவர்கள் தன் வசம் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல துறையை மாற்றான் வீட்டு துறையாக பார்க்கின்றாரோ என்று ஐயம் எழுகிறது. அறவழியில் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர எந்த முயற்சியும் எடுக்காமல் போராட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையை ஏவி விடுவது சரிதானா?, காவல்துறையின் இந்த அராஜக செயல் மிகவும் வேதனை அளிக்கும் விதத்திலும், மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய செயலாக அமைகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகள் என்று கூட பாராமல் அவர்களை துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும் அவர்களை நடுராத்திரியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கிவிட்டு அனாதை போலாக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
எனவே பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்தின் வாழ்வாதார பிரச்சனையில் அரசு உடனடியாக தலையிட்டு அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து செயல்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும், அறவழியில் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகளை கன்னியத்துடனும், மனிதாபிமானத்துடனும் அணுக காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் அவர்கள் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டுமென பார்வையற்ற அரசு பணியாளர் நல சங்கத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுகிறோம். மேலும் அறவழியில் போராடும் பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்திற்கு எங்கள் பார்வையற்ற அரசு பணியாளர் நல சங்கத்தின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம்; சென்னை
நாள்; 15.02.2024
இப்படிக்கு
கி.இன்பராஜ்
செயலாளர்
பார்வையற்ற அரசு பணியாளர்
நல சங்கம், சென்னை.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் படிக்க மற்றும் பதிவிறக்க:
https://drive.google.com/file/d/1DiYHM0SGSsUU8KqLfXEKDib_VBR5jbep/view?usp=sharing
“மாற்றுத்திறனாளிகளை முதல் குடிமகன்களாகக் கருதவேண்டும்” பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை பேட்டி:
https://drive.google.com/file/d/1lUts1fDVH7vXnhR40kg1UMpV5bXfouzU/view?usp=sharing
Be the first to leave a comment