நாள் (4): 15/2/2024.
நேரம்: காலை. 9.30.
இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புக்கு: 7449158045, 7904751694.
அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உறிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம்.
ஆனால் இன்று உறிமை மீரல்கள் அரங்கேறி இருக்கிறது. நேற்று இரவு காத்திருக்கவும் நமக்கு உறிமை மருக்கப்பட்ட நிலையில். இன்றோ அதிகார போதை தலைக்கேறிய மாற்றுத் திறணாளிகள் ஆணையரக இயக்குனர், வேலை செய்வதைத் தடுக்கிறார்கள் என்ற பொய் குற்றத்தினைக் கூறி, காவட்டுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, உண்ணா நோன்பிருந்த நமது போராளிகளை கைது செய்து தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளார்.
நேற்று போலவே இன்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சில உதிர்ந்த சருகுகளை ரகசியமாய் பொருக்கி தன்னுள் உண்மைகளாக வைத்துக்கொண்டது. அதே அலைக்கழிப்பு அதே அத்து மீரல்! ஞாயங்களைக் கேட்டுப் பெறுவதில் தாமதம் ஏன்?
வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோறிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்!
பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?
இந்த போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!
வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!
உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!
போராட்டம் வென்றிடுவோம்,
வெற்றி வாகை சூடிடுவோம்.
சில நிமிடங்கள் மட்டும் உங்களுடன் பேசிக்கொள்கிறேன் கொஞ்சம் செவிகொடுங்கள்! – சே. பாண்டியராஜ்
எதற்கு இந்த போராட்டம்?
அன்புடையீர்,
நம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் மகத்துவமும், பார்வையற்ற சமுதாய நலன் மற்றும் உரிமைக்கான போராட்ட வரலாறும் தாங்கள் அறிந்ததே. பார்வையற்றோர் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகிறோம் அல்லது ஒதுக்கப்படுகிறோம். நமக்கான உரிமைகள், பணி வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. இத்தகையச் சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? வேறொன்றும் இல்லை, நம் சங்க தலைமைக்கு ஒத்துழைத்து போராட்டக் களத்தில் கைக்கோர்ப்பதையன்றி வேறில்லை.
போராட்டம் என்றாலே சில நண்பர்கள் அதற்கு எதிர் கருத்துக்களைக் கூறி தவிற்க முற்படுகின்றனர். அதற்கு காரணம் சங்கம் குறித்தும், போராட்டம் குறித்தும், அவர்களுக்குள் இருக்கும் தவறான புரிதலாக இருக்கலாம். அல்லது, போராட்டத்தால் எனக்கு நேரடி பயன் என்ன, உடனடி பயன் என்ன என்ற சில கேள்விகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு போராட்டத்திலும் நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயனடைந்து வருகிறோம் என்பதை நம்மால் மறுக்க முடியாது.
சங்க போராட்டங்களில் தலையான கோரிக்கையாக எப்பொழுதும் இடம்பெறுவது வேலைவாய்ப்பு. இக்கோரிக்கை காலந்தோறும் பல நிலைகளில் முன் வைக்கப்பட்டு வந்தது. அதில் சில பலனளித்தது, சில ஏமாற்றங்களைத் தந்தது. பலனளித்த போராட்டங்கள் வாயிலாக 50, 100, 200 என பலர் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த பணிவாய்ப்புகள் எல்லாம் நமக்கு இட ஒதுக்கீட்டின்படி வழங்க வேண்டிய பின்னடைவு காலிப் பணி இடங்களேயன்றி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டதில்லை. 2013ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணை எண் 260ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பின்னடைவு பணி இடங்களை வழங்க வேண்டும் என்று கேட்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சென்றிருந்தோம். அங்குள்ள அதிகாரி ஒருவர் அந்த அரசாணைக்கு அளித்த விளக்கம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் நடைமுறையில் செய்ய வேண்டியதை புதிதாக செய்வதுப்போல் குறிப்பிட்டு நம்மை ஏமாற்றியது தெரிய வந்தது. இதுவரை தங்களுக்கு போடப்பட்ட 100, 200 பணி இடங்களெல்லாம் பின்னடைவு பணி இடங்களே. இப்பொழுது காலிப் பணி இடங்கள் எதுவும் இல்லை என்று சொல்லி, 2013ஆம் ஆண்டிற்கு முன்பு நிரப்பப்பட்ட பணி இடங்களின் விவரங்களை ஒரு தாளில் படி எடுத்து வழங்கினார். ஆனால் அது தற்போது நம் சங்கத்தில் இல்லை. 2015ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தில் அழிந்துவிட்டது. எனவே கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு என்பது நமக்கு எப்பொழுதும் வழங்கப்படவில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த அதிகாரி குறிப்பிட்டது போல நமக்கான பணி இடங்கள் எல்லாம் அந்த 100, 200 பணி இடங்களோடு முடிந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் நமக்கான ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணை எண் 602 வெளியிடப்பட்ட 14 ஆகஸ்டு 1981 முதல் அமல்படுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு பார்வையற்றோருக்கான அந்த ஒரு விழுக்காட்டினை ஊனமுற்றோர் சட்டம் 1995, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி பார்வையற்றவர்களுக்கு ஒரு விழுக்காடு ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் இருப்பதாக ஒரு செய்தித்தாளில் படித்தேன். மொத்த ஊழியர்கள் 12 லட்சம் என்றால், இட ஒதுக்கீட்டு விதிப்படி 12 ஆயிரம் பார்வையற்றவர்கள் பணியில் இருக்க வேண்டும். அது எப்படி 12 ஆயிரம் என்றும், நம்மால் சில துறையில் பணிப்புரிய இயலாதே என்றும் தங்களுக்கு ஐயம் வரலாம்.
உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவுப் பணி இடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை அடையாளம் காணப்பட்ட பணி இடங்களைக்கொண்டு கணக்கிடாமல், அரசால் அறிவிக்கப்படும் மொத்த பணி இடங்களை இட ஒதுக்கீட்டின்படி கணக்கிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளம் காணப்பட்ட பணி இடத்தில் பணி அமர்த்த வேண்டும். அதாவது, தகுதி உடைய மாற்றுத் திறனாளியால் குறிப்பிட்ட துறையின் பணி இடத்தில், அவருடைய ஊனத்தின் காரணமாக பணி அமர்த்த இயலவில்லை என்றால், அந்த பணிக்கு இணையான மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளம் காணப்பட்ட பணி இடத்தில் பணியமர்த்த வேண்டும். உதாரணமாக ஆசிரியர் பணியில் பார்வை இன்மை காரணமாக பார்வை மாற்றுத் திறனாளிகள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பணி அமர்த்தப்படுவதில்லை. எனவே அந்த பணி இடங்களை இட ஒதுக்கீட்டின்படி கணக்கிட்டு, அதற்கு இணையான தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களில் பணியமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இதன்படி, நம் சங்கம் பணிவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை மீட்டெடுக்க 2015, 2018, 2021 என பல போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், அரசால் 2015ஆம் ஆண்டு அரசாணை எண் 21, 107, 108 மற்றும் 2021ஆம் ஆண்டு உயர்கல்வித் துறை இயக்குனரின் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டன. இந்த அரசாணைகளில் குறிப்பிடப் பட்டுள்ளப்படியாவது பணி இடங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அதிகாரிகளைச் சந்தித்த நம் சங்க பொறுப்பாளர்களிடம் இந்த அரசாணைகள் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் போடப்பட்டது இதன்படியெல்லாம் செய்ய இயலாது அதற்கு சாத்தியமுமில்லை என்று அவர்கள் கூறியது நம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
இதுமட்டுமல்லாமல் நம் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது அல்லது மறைக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு பல அரசாணைகளும், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டங்களும் சான்றுகளாக உள்ளன.
நம் சங்கம் இப்படி மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து பார்வையற்றோரின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி 2012ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட பார்வையற்றோரின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கி, பார்வையற்றோரின் எதிர்காலத்தை செழிப்படையச் செய்வார் என்ற நம்பிக்கையைப் பெற்ற இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2021ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பெடுத்தவுடன் பார்வையற்றோரின் வாழ்வாதாரம் சார்ந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த 20 அம்ச கோரிக்கைகளும் அதற்கான விளக்கங்களும் உரிய ஆவனங்களுடன், உரிய அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் நம் சங்க பொறுப்பாளர்கள் உரிய அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவாக 17 ஏப்ரல் 2023 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையாக கணக்கிட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். 24 ஜூலை 2023 அன்று அரசாணை எண் 20 வெளியிடப்பட்டது. அதில்,
அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள A, B, C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி அப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கையினை அரசின் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசின் பல்வேறுத் துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளின் விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் ஒரு முறை மட்டுமே தளர்வுகள் வழங்கி அக்காலிப்பணியிடங்களை அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மூலம் நிரப்பிட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் தொடர்பாக ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து இப்பணிகளின் காலாண்டு முன்னேற்ற அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சங்க பொறுப்பாளர்கள் உரிய அதிகாரிகளை அனுகிய போது அதிகாரிகள் முறையான தகவல்கள் வழங்காமல் உதாசினப்படுத்தியது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசாணைகளைப் போல இந்த அரசாணையும் பார்வையற்றோரை வஞ்சித்து ஏமாற்றிவிடக்கூடாது என்று தீர்மாணித்தது நம் சங்கம். மேலும், இனி இந்த அரசாணையின்படி இவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு பணி நியமணம் வழங்க பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதால் இட ஒதுக்கீட்டின்படி பார்வையற்றோருக்கு வழங்கப்பட வேண்டிய பல்லாயிரக்கணக்கான பணி இடங்களில் தற்பொழுது சில நூறு பணி இடங்களையாவது வழங்கி பார்வையற்றோரின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று தற்பொழுது ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறது நம் சங்கம்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை தாங்கள் அறிந்திருப்பீர்கள். உரிய கோரிக்கைகளை தக்க சான்றுகளுடன் முன்னெடுக்கும் நம் சங்க போராட்டத்தில் எவ்வித தயக்கமும் இன்றி பங்கேற்க வேண்டுகிறேன். தனிமனித விருப்புவெறுப்பு இன்றி சமுதாயச் சிந்தணையும்,
சங்கப் பற்றும் கொண்டு திரளாக பங்கேற்று, மறுக்கப்படும் உரிமையை நிலைநாட்டிடுவோம்.
வீரவணக்கம்! – டாக்டர். ஊ. மகேந்திரன்
களம் காணும் வீரர்களை உளமாற வாழ்த்துவோம்!
அச்சுறுத்தல் ஆயிரம் அதைக் கண்டு அஞ்சவில்லை ஒருவரும்!
கொஞ்சமும் சாயவில்லை ஐவரும், அவர் நெஞ்சமெல்லாம் குவிந்திருக்கிறது பெரும் போர் வீரம்!
அடிமேல் அடி விழுந்தாலும், தடை மேல் தடைகோடி குவிந்தாலும், ஒரு நொடி கூட ஓயவில்லை, பிடி உணவும் உடலில் சேரவில்லை, அந்தக் கல வீரர்களை சமூகமே நாம் தவிக்க விட்டிருக்கிறோமே அது நியாயம் இல்லை!
அரசே நாங்கள் வகை உணவு கேட்கவில்லை, உங்கள் பகையாளியா நாங்கள்? இல்லை, இல்லை, நீங்கள் ரேகை தேய அடிக்க நாங்கள் உங்களைப் போல் சமூக கூட்டழிக்கும் பாவி இல்லை!
உலகம் இருண்ட எங்களையும், திரண்டு கைது செய்து, அரண்டு போய் அப்பால் விடும், உங்களின் மிரண்ட காரணம் புரிகிறது, நாங்கள் போராட்ட குணம் கொப்பளிக்க திரண்டால், அடக்குவது கடினம், மடிவதே எனினும் இவர்களைப் பின் வாங்க வைப்பது வலினம் என்று தானே?
எதிர் வரிசையில் இருக்கையில் ஒரு பேச்சு, எட்டின் நாற்காலியைப் பிடித்து விட்டால் அது போச்சு, என்கிற ஆட்சியாளனின் கோழை மாச்சு எங்கள் போராட்டத்தால் அம்பலத்தில் ஏறி ஆச்சு!
ஒன்றிரண்டென நாங்கள் கூடி நடந்தாலும், தேடிவந்து கைது செய்யும், வாடிக்கையை கண்டு, எங்கள் சமூகத்தின் கோடிக்கை கூடுதடா, நிச்சயம் நாளை பார் உனது இந்த வாடிக்கை தலை தெரிக்க ஓடுமடா!
உன் கையில் இருக்கும் சட்டப் புத்தகத்தில் ஓட்டைகள் அதிகம், எங்கள் போராட்ட சட்டகம் கொண்டு அதை அடைப்போம், எங்கள் சமூகத்திற்காக எங்கெங்கிருப்பவர்களும் வந்து நின்று களத்தில் கூடி வெடிப்போம், உன் அதிகார அகம்பாவத்திற்கு சாவு மணி அடிப்போம்!
எங்களின் போராட்ட செல்வமே அன்பு வில்வா, களத்தில் எங்களுக்காய் மடிவேன் என்று சொன்னபோது, அந்தச் சொல் எங்களின் இதயத்தில் இடியென இறங்கியது அந்த நொடியில் எங்கள் நிம்மதி விடு விடு என எங்கோ விரைந்தது, சொல்கிறேன் மனதில் கொள் எல்லா இதயமும் உங்களுக்காய் கரைந்தது, சூழுரைப்போம் நிச்சயம் வேலை எனும் ஓலை பெறுவோம், இல்லையெனில் ஒன்று திரண்டு காலை என சாலை புகுந்து வெற்றி மாலை அணிவோம்!
உன்னா நோன்பு இருக்கும் பஞ்ச சீலரே, இறந்து போகும் எண்ணத்தை இதயத்தில் இருந்து இறக்கி விடுங்கள், போராட்டக் குழுவும் அவரோடு இளைய செல்வங்கள் களம் காணும் தெளிவும், அரசு எந்திரத்தை தெறிக்கவிடும் நமது சங்கம் என்றால் வெற்றி என்னும் வரலாற்று கொடியை உயர விரைவில் பறக்க விடும்!
பிழைக்க நாதியற்ற அதிகார கூட்டமே, இழக்க எதுமற்ற எங்களை வஞ்சிக்காதே, எங்களின் கிழக்கும் ஒரு நாள் விடியும், எங்களை ஏமாற்றியே இருக்கும் உங்களின் வழக்கு நீதியின் முன் மண்டியிட்டு மடியும்!
பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பலநிலை கல வீரர்களுக்கு தியாக வணக்கம் உரைக்கும் இவன்,
முனைவர். உ. மகேந்திரன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏
Be the first to leave a comment