பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக” – அன்புமணி வலியுறுத்தல்
Top Tamil News
· 11:19 am · 15 Feb 2024
பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல் செய்திருக்கின்றனர். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நேற்று அவர்கள் சாலை மறியல் மேற்கொண்டனர். இரு நாட்களிலும் மறியல் மேற்கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை அன்று மாலையில் கைது செய்த காவல்துறை, இரவு முழுவதும் சென்னையின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், அதிகாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து 50 கி.மீக்கு அப்பால் உள்ள வல்லக்கோட்டை என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். தங்களை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்ட ராமராஜன் என்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் அடித்து உதைத்துள்ளனர். இவை அனைத்தும் மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்கள் ஆகும்.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை ஆகும். இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அவர்கள் போராடி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் அவர்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் அவர்கள் மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/draramadoss/status/1757998777217229159?t=Ey5zdUwCZ9VhQZ68STnStg&s=08
பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது: டி.டி.வி. தினகரன்*
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு நியமனத் தேர்விலிருந்து விலக்கு, TNPSC மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் தேர்வு, ஊக்கத் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், காவல்துறை மூலம் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வது தமிழக அரசின் அதிகாரப்போக்கையை வெளிப்படுத்துகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தங்களின் போராட்டங்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தங்களை சந்திக்க கூட மறுப்பது ஏன் ? என பார்வை மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகள உடனடியாக நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
https://x.com/TTVDhinakaran/status/1757997549133381837?t=EsRMnconloQzgXW8TMy0Eg&s=08
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி
மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
பார்வை மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுத்தும் கூட கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போல, தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவதுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உரிமை கேட்டுப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சிறிதும் மனச்சான்று இன்றி காவல் துறையை ஏவி, தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..,
அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் ( பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1% உட்பட) மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆராய்ச்சி படிப்புவரை கல்வி மற்றும் தேர்வு கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.
பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தந்து, அனைவரையும் போலவே பார்வை மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
https://x.com/NaamTamilarOrg/status/1758087713264419075?s=08
[மாற்றுத்திறனாளிகளை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்,
சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண்-177-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென்று நானும் எனது அறிக்கைகள் வாயிலாக தி.மு.க. அரசை பலமுறை கேட்டுக் கொண்டேன். ஆனால், இதனை நிறைவேற்ற முன்வரவில்லை. மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு என்ற முடிவினை தி.மு.க. எடுத்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டுமென்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக Vபோராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடியபோது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடைசியாக பூந்தமல்லி அருகே வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் விடியற்காலையில் இறக்கிவிடப்பட்டதாகவும், மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க.,வின் வாக்குறுதிப்படி, தகுதித் தேர்வு முடித்த அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக போட்டித் தேர்வில் தி.மு.க. அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குக்கூட போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது தி.மு.க. அரசின் ஈவுஇரக்கமற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அறநெறி மீறி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டுமென்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be the first to leave a comment