தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்ட அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. அரசின் சிறப்புப்பள்ளி ஒன்று 50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது அதுவும் பொருட்படுத்தத்தக்க வெற்றிகளோடு என்பது மேலும் பெருமைக்குரியது.
இந்தப் பெருமிதத் தருணம் நோக்கிப் பள்ளியைப் பின்நின்று ஊக்கியவர்களின் உழைப்பை பேசாமல் விட்டுவிடுவது வரலாற்றுப் பிழையாகிவிடலாம் என்பதால் இதனை எழுதவேண்டியிருக்கிறது.
1960களின் இறுதியில் பல்வேறு மாவட்டங்களில் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகள் தமிழக அரசால் நிறுவப்பட்டன. அவற்றுள் கோணம், உதகமண்டலம் ஆகிய பள்ளிகள் 1990களிலேயே மூடுவிழா கண்டுவிட்டன. உதகமண்டலம் பள்ளி கோவை அரசுத்தொடக்கப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது. திருவாரூர் பள்ளி தஞ்சைக்கு இடம்பெயர்ந்தது. தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக, நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகப் படிப்படியாகத் தரம் உயர்வு பெற்றிருக்கிறது தஞ்சைப் பள்ளி. நிற்க! இங்கு நான் பள்ளி பள்ளி எனக் குறிப்பிடும் இடங்களில் அவை பார்வையற்றோருக்கானவை என்பதைச் சேர்த்துக்கொண்டு படிக்கவும்.
எஞ்சியிருந்த புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட தொடக்கப்பள்ளிகளையும் இழுத்து மூடி, ஓரிரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை மட்டும் இயக்கலாம் என எவருக்குமே தெரியாமல் 2011வாக்கில் அரசு மெல்லத் திட்டமிட்டது. அதை மோப்பம் பிடித்து, அந்தத் திட்டத்தைத் தவிடு பொடியாக்கி, அவற்றுள் பள்ளி தொடங்கப்பட்ட 1975 முதல் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசுத் தொடக்கப்பள்ளிக்கு சொந்தக் கட்டடம் பெற்று, அதனை நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்துவதிலும் வெற்றிபெற்றது எங்கள் குழு.
அரசின் இந்தத் திரைமறைவுத் திட்டத்தின் காரணமாக, அரசு உயர்நிலைப்பள்ளியாக இயங்கிக்கொண்டிருந்த தஞ்சைப் பள்ளிக்கும் ஒரு பெரும் ஆபத்து காத்திருந்தது. அதாவது, அந்தப் பள்ளியில் படித்த பெண் குழந்தைகளைத் திருச்சி பள்ளிக்கு மாற்றி, தஞ்சைப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பது; அதன்மூலம் அதனை நடுநிலைப்பள்ளியளவில் தரம் குறைத்துவிடுவது என்பது துறை அலுவலர்களின் மறைமுக யோசனை. இது எங்கள் குழுவில் வேறு எவரையும்விட அதே பள்ளியில் படித்து, இன்று அந்தப் பள்ளியிலேயே முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றும் திரு. சுரேஷுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியது. அந்தக் கணத்தில் அவரின் மனதில் உதித்ததுதான் தஞ்சைப் பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்துவது என்கிற திட்டம்.
தன் திட்டத்துக்கு மூன்றே ஆண்டுகளில் செயல்வடிவம் கொடுத்தார். திட்டத்தை நிறைவேற்றிட தனக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் முயன்றார். பள்ளியைத் தரம் உயர்த்திட வேண்டி, நாங்கள் பல அமைச்சர்களைச்சந்திக்கப் பல மாதங்கள் அலைந்திருக்கிறோம். அனைத்துவகை மாற்றுத்திறனுடையோர் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டாராடாக்கின் தஞ்சை மாவட்ட பிரதிநிதிகள் இந்த முயற்சியைத் தங்களின் அறவழிப் போராட்டங்கள் வாயிலாகப் பேசுபொருளாக்கினர். இந்தக் கோரிக்கை குறித்துப் பேச தஞ்சை சென்றபோதுதான் அன்றைய பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. பாலாஜி அவர்கள் விபத்தில் சிக்கியதாக ஒரு தகவலும் உண்டு.
இதே காலகட்டத்தில் எந்தவித முன் கேள்விகளுமின்றி, ஒரு தனியார் தொண்டுநிறுவனத்துக்கு மேல்நிலைப்பள்ளி வரை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்த துறை உயர் அலுவலர்கள், எங்களிடம் மட்டும் பள்ளிக்கான மாணவர் எண்ணிக்கை போதிய அளவில் இருக்கிறதா? இடவசதி இருக்கிறதா? அதுதான் மேல்நிலைக்கல்விக்கென்றே ஆண்களுக்கு பூவிருந்தவல்லியும், பெண்களுக்கு திருச்சியும் இருக்க, தஞ்சைப் பள்ளியின் தரம் உயர்வுக்கான தேவை என்ன இருக்கிறது?” என கேள்விமேல் கேள்வியாகக் குடைந்துகொண்டே இருந்தார்கள்.
எல்லாவற்றையும் கடந்து, தரம் உயர்த்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றானபோது, அன்றைய சிறப்புப்பள்ளிகளின் துணை இயக்குநருக்கு ஈகோவோ எதுவோ தெரியவில்லை. “எல்லாம் நடக்கும், ஆனால் இந்த ஆண்டு (2014) இல்லை” என்று முட்டுக்கட்டை போட்டார். அன்றைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரும் அவரின் கருத்தையே ஆமோதித்தார் அல்லது அப்படி வழிநடத்தப்பட்டார்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வந்துவிட்டபோதும், தங்களின் ஆசிரியர் திரு. சுரேஷ் மீது மாணவர்கள் வைத்த நம்பிக்கையால் அவர்கள் பதினோராம் வகுப்புக்கு வேறு எந்த பள்ளியையும் நாடவில்லை. அவர்களிலும் சிலர், அடுத்த ஆண்டுக்குக்கூட காத்திருக்கச் சம்மதித்தார்கள். ஆனாலும் பெற்றோரின் பதட்டமும் பரபரப்பும் கூடிக்கொண்டே போனது. அவை தொடர் கேள்விகளாக, ஐயங்களாக சுரேஷைத் துளைத்தெடுத்தன.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என மாதங்கள் கடந்துகொண்டே இருந்தாலும் தீர்வு மட்டும் கிணற்றில் போட்ட கல்லாகவே தொடர, சென்னைக்கே போய் அமர்ந்துவிட்டார் சுரேஷ். அப்போது தமிழ்நாட்டில் மிகவும் கொந்தளிப்பான அரசியல் சூழல் வேறு. முன்னால் முதல்வர் ஜெயலலிதா சிறையிலிருக்க, முதல்வராக இருந்தவர் பன்னீர்செல்வம். இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் ஒற்றை ஆளாகத் தலைமைச்செயலகத்துக்கும் ஆணையரகத்துக்கும் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அலைந்து, ஒருவழியாக அக்டோபர் மாதம் 14ஆம் தேதி, தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்வு பெற்ற அரசாணையைக் கையிலேந்தி தஞ்சை வந்தார் சுரேஷ்.
பள்ளித் தரம் உயர்வை விரும்பாதவர்கள், விமர்சித்தவர்கள்கூட பின்னாளில் பல்வேறு நிலைகளில் பதவி உயர்வு பெறக் காரணமாக இருந்ததும் அந்த தரம் உயர்வுதான். தொடர்ந்து தஞ்சைப் பள்ளி அடைந்து வருகிற ஒவ்வொரு வளர்ச்சியிலும் முக்கியப் பின்னூக்கியாக இருப்பவர் சுரேஷ். மேலும், தலைமை ஆசிரியராகக் கூடுதல் பொறுப்பேற்ற நாள்முதல் பள்ளியின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து செதுக்குகிற ஆசிரியர் சோஃபியா மாலதியின் உழைப்பும் பாராட்டுக்குரியது.
பதிவேடுகளை மட்டுமே பராமரித்துக்கொண்டு, எல்லாவற்றையும் காகிதத்தில் சரியாக வைத்துக்கொண்டால் போதும் என ஒவ்வொரு நாளையும் ஒப்பேற்றிக்கொண்டிருக்காமல், தொடர்ந்து செயலாற்றியபடி இருக்கிற அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், விடுதிசார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய பொன்விழா வாழ்த்துகள்.
***ப. சரவணமணிகண்டன்
Be the first to leave a comment