தேர்தல் அடையாள மை
“தேர்தல் சமயங்களில் நம் நினைவிற்கு வருவது நாம் ஓட்டு போட்டுவிட்டோம் என்பதை உறுதி செய்வதற்காக நம் விரலில் இடப்படும் அடையாள மை. இந்த மையின் பின்னால் இருக்கும் ரசாயணத்தைப் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா? இதில் சில்வர் நைட்ரேட் என்ற வேதிப்பொருளே அடங்கியிருக்கிறது.
இதைக் கையில் இட்டால் 72 மணிநேரம் முதல் குறைந்தது 2 வாரங்கள் வரை அழியாமல் இருக்கும். கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்க இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் முதல்தான் இது அடையாளமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டுப் போட்டதற்கான அடையாளமாகக் கையில் வைக்கப்படும் இதன் நிறத்தைக் கவனித்ததுண்டா?
கையில் இடும்போது நீலநிறமாக இருக்கும். சிறிதுநேரத்தில் இது கறுப்புநிறமாக மாறிவிடும். இந்த வேதிப்பொருள் நம் உடலில் உள்ள வியர்வைச்சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படும் குளோரினுடன் சேர்ந்து சில்வர் குளோரைடாக மாறுகிறது. இதன்மீது வெளிச்சம் படும்போது மெட்டாலிக் சில்வரின் கொலாய்டு துகள்களாக தோலில் இருந்து ஆக்சிகரணம் அடைந்து சில்வர் ஆக்சைடாக மாறுகிறது. இதுவே மை அழியாமல் இருக்கக் காரணம்.
;நம் நாட்டில் மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம்இராக் போன்ற நாடுகளிலும் தேர்தல் சமயங்களில் மை இட்டு அடையாளப்படுத்துவது உண்டு. அறிவியல் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், எல்லோருக்கும் அடையாள அட்டைகள் பல உள்ள இந்தக் காலத்திலும் இப்போதும் இந்த அடையாளமை அவசியமா என்று யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். என்றாலும், இந்த மையின் மகிமை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது!”.
மிகப்பழைய தொங்கு பாலம்
“இந்தியாவின் மிகப் பழமையான தொங்கு பாலம் எங்கு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? தமிழ்நாட்டையும், கேரளாவையும் இணைக்கும்வகையில் அமைந்துள்ளது இந்தப் பாலம். புணலூர் தொங்குபாலம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் பாலம் இப்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும் இப்போதும் தொல்லியல் பழமை வாய்ந்ததாகக் கருதப்பட்டு இது பாதுகாக்கப்படுகிறது. கேரளா கொல்லம் மாவட்டத்தில் ஓடும் கல்லடை ஆற்றின் குறுக்கே இது கட்டப்பட்டுள்ளது. தொங்கு பாலங்கள் என்பவை பூமியில் இருந்து எழுப்பப்படும் வலிமை வாய்ந்த தூண்களால் தாங்கி நிறுத்தப்படாமல் இரு கரைகளிலும் இழுத்துக் கட்டப்பட்ட வலுவான கம்பிகளால் தூக்கி நிறுத்தப்படுகிறது. இதனால் இவை தொங்கிக்கொண்டிருக்கும் பாலங்கள். ரிஷிகேஷில் ராமர் பெயரிலும், லட்சுமணன் பெயரிலும் உள்ள தொங்குபாலங்கள் பிரபலமானவை.
திருவிதாங்கூர் மாகாணத்தின் அரசராக இருந்த ஆயில்யம் திருநாள் என்பவரின் ஆட்சிகாலத்தில் இது கட்டப்பட்டது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆல்பர்ட் ஹென்றி என்பவரால் இது கட்டப்பட்டது. 1877ல் கட்டிமுடிக்கப்பட்ட இந்தப் பாலம் 1880ல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டது. இதன் நீளம் 400 அடி. இதன் வழியாகச் செல்வதற்கு ஆரம்ப காலத்தில் மக்கள் பயந்தனர். இந்தப் பயத்தைப் போக்குவதற்காக இதை வடிவமைத்து உருவாக்கிய ஆல்பர்ட் ஹென்றி ஒரு காரியம் செய்தார். குடும்ப சகிதமாக ஒரு படகில் ஏறி சென்று பாலத்திற்கு அடியில் போய் நின்றார். பிறகு ஏழு யானைகளை பாலத்தின் மீது நடக்கவிட்டார். இதன் பின்னர்தான் இந்தப் பாலத்தில் நுழைய மக்களுக்கு தைரியம் வந்தது. காளை வண்டிகள், குதிரை வண்டிகள், மோட்டார் வாகனங்கள் பின்னர் இந்தப் பாலத்தின் வழியாக செல்ல ஆரம்பித்தன. 1977ல் புதிய கான்க்ரீட் பாலம் கட்டப்பட்டபின் இந்தத் தொங்குபாலத்தின் வழியாகப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இதைக் கட்டத் தேவையான எஃகு அயர்லாந்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. இப்போது தொல்லியல் துறையின் பராமரிப்பில் இது உள்ளது”.
வரையாடுகளின் சொர்க்கபூமி
“தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது என்று கேட்டால் நாம் எல்லோரும் சுலபமாகப் பதில் சொல்லிவிடுவோம் வரையாடு என்று. ஆனால் தமிழ்நாட்டின் மாநில விலங்கான இதைப் பாதுகாப்பதற்கு உரிய தேசீயப்பூங்கா நம் மாநிலத்தில் இல்லை என்று பலருக்கும் தெரியாது. வரையாடுகளுக்கான தேசீயப்பூங்கா கேரளாவில் உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூனாறில் இருந்து 20 கி மீ தூரத்தில் உள்ள இரவிகுளம் தேசீயப்பூங்காதான் அது. இதுவே கேரளாவில் மிக உயரத்தில் அமைந்துள்ள தேசீயப்பூங்கா. கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இது அமைந்துள்ளது. இதன் பரப்பு 97 சதுர கிலோமீட்டர். இன அழிவை நேரிடும் அபாயம் உள்ள நீலகிரி தார் என்ற வரையாடுகளுக்கான பூங்கா இது. நீலகிரி உயிரியல் மண்டலத்தில் மட்டுமே இந்த தனிச்சிறப்பு மிக்க உயிரினங்கள் வாழ்கின்றன. 2005 வரை ஹிமாலயன் தார் என்ற ஆட்டு இனத்தின் ஒரு துணைப்பிரிவாகவே இந்த வரையாடுகள் கருதப்பட்டன. இரவிகுளம் தேசீயப்பூங்கா பகுதியில் இராஜமலை, பந்து மலை, சன்னப் பந்துமலை போன்ற இடங்களில் இந்த வகை ஆடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்திய வனவிலங்கு சட்டத்தில் இது பாதுகாக்கப்படவேண்டிய விலங்குகளின் பட்டியலில் முதல் பிரிவில் உள்ளது. இவை காட்டு ஆடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை தவிர சிங்கவால் குரங்குகள் உட்பட பல இன குரங்குகள், மான்கள், காட்டு எருமைகள் போன்ற வனவிலங்குகளையும் இங்கு காணலாம். கண்ணன் தேவன் கம்பெனிக்கு சொந்தமாக இருந்த பிரதேசத்தை 1971ல் கேரள அரசு தன்வசம் எடுத்துக்கொண்டது. 1975ல் இது வனவிலங்கு பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 1978ல் இது தேசீயப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் மிக உயரமான சிகரமான ஆனைமுடி சிகரம் இங்குதான் அமைந்துள்ளது. இதன் உயரம் 2694 மீட்டர். புல்வெளிப்பிரதேசங்கள், குத்துச்செடிகள், சோலைகள் என்று பலதரப்பட்ட தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. முடிந்தால் நாமும் ஒரு தடவை வரையாடுகளைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமே?”.
புதர் மனிதன்
ஆங்கிலத்தில் bushman என்று அழைக்கப்படும் இவர்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த அதிசயப்பிறவிகள். இவர்கள் ஒரு இடத்தில் நிலையாகத் தங்கி வாழவில்லை. இவர்கள் இயற்கை மணலில் எழுதும் எழுத்துக்களை வாசித்து வாழ்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. வலையைப் பழுது பார்க்கும் சிலந்திகள், புற்றுகளை சரிசெய்யும் எறும்புகள், விலங்குகளின் கால் தடங்கள் போன்றவை இவர்களுக்கு மணலில் எழுதிய எழுத்துக்கள்.
ஆப்பிரிக்காவின் தென் பகுதி முழுவதும் பரவி வாழ்ந்த புராதன மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களைப் பற்றிய ஆய்ந்தறியப்பட்ட விவரங்கள் எதுவும் வரலாற்றுப்பூர்வமாக கிடைக்கவில்லை. என்றாலும் இவர்கள் பாறைகளில் வரைந்த யானை, மான், நடனமாடும் வேட்டைக்காரர்கள் போன்ற ஓவியங்கள் 3000 ஆண்டுகளாக காலங்களை வென்று இன்றும் அழியாமல் உள்ளது.
350ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியேறிய ஐரோப்பியர்கள் இவர்களை விலங்குகள் என்று கருதி கொன்று குவித்தனர். இன்று கலஹாரியில் இரண்டு மூன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே இவர்களைப் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. பூமிக்கடியில் பறவைமுட்டைகளில் தண்ணீரை ஊற்றி சேமித்துவைத்து வாழ்ந்த இவர்கள் நிலமேற்பரப்பு நீரை வீணாக்காமல் பயன்படுத்தாமல் அடுத்தவர்களுக்காக வைத்துவிட்டுப்போன ஒரே மனித இனம்.
பூமிக்கடியில் தர்பூசணி, கிழங்குகள் போன்றவற்றை கண்டுபிடித்து அவற்றில் உள்ள நீரைப் பயன்படுத்தி வாழ்ந்தனர். மற்றவர்களுக்காக தண்ணீரை சேமித்துவைத்த இவர்களின் பண்பாடு இன்றும் நாம் பின்பற்றவேண்டிய ஒரு மனித நாகரீகம் அல்லவா?
தொடர்புக்கு: nrvikram19@gmail.com
Be the first to leave a comment