ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமப சீசன் 3’ இசைப்போட்டியில் பங்கேற்று, இறுதிச் சுற்றுவரை முன்னேறி முதல்ப்பரிசை வென்றிருக்கிற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி புருஷோத்தமனுக்கு தொடுகை மின்னிதழின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சதுரங்கம் மற்றும் இசை ஆகிய இரண்டு துறைகளில்தான் மிகத் துல்லியமாக ஒரு பார்வையற்றவர், பார்வையுள்ள போட்டியாளரோடு சமமாகப் போட்டியிட்டுத் தன் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார். எனினும், கண்களுக்கே பெரும்பாலும் விருந்தாக அமைகிற காட்சி ஊடகத்தின் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பார்வையற்றவர் தொடர்ந்து பங்கேற்பதே பெரும் சவால் என்கிறபோது, அதையே தனது முதன்மை வெற்றியாக மாற்றியிருக்கிற புருஷோத்தமனின் முயற்சியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இதற்குக் களம் அமைத்துக்கொடுத்த Zee தமிழ் தொலைக்காட்சிக்கும், இந்தப் பயணத்தில் அவரோடு தோள்கொடுத்த உறவுகள், நண்பர்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் தொடுகையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.
பார்வையின்மைக்கும் இசைக்குமான தொடர்பு உள்ளார்ந்தது, ஆன்ம வயப்பட்டது. இருள் சூழ்ந்த உலகில் ஒரு பார்வையற்றவருக்கு புதிய தரிசனத்தை வழங்கி, வெறுமையைப் போக்குவது இசையே. எனவே, பார்வையற்ற குழந்தைகளுக்கு அவர்களின் சிறுவயது முதலாகவே இசை கற்பிக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று.
ஆனால், பார்வையற்றோருக்கான கல்வி என்பதே கேலிக்கூத்தாகிப்போன இன்றைய கல்விச் சூழலில், பாடம் சார்ந்த கல்விக்கே பள்ளி வயது பார்வையற்ற குழந்தைகள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
உள்ளடங்கிய கல்வி என்ற பெயரில் சிறப்புப் பள்ளிகளுக்குப் பதிலாக வீட்டுக்கு அருகாமையிலேயே பொதுப்பள்ளியில் சேர்க்கப்படும் பார்வையற்ற குழந்தைகள் அடிப்படையாகப் பெறவேண்டிய கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் திறன்களில் முதல் இரண்டு திறன்களை மட்டுமே பெற்று வளர்கிறார்கள். வகுப்பறையில் புத்தகப் பாடங்களைக் கேட்டல், ஒப்பித்தல் என்ற நிலையிலேயே அவர்களின் தொடக்க மற்றும் நடுநிலைக்கல்வி அமைந்துவிட, தானே எழுதி வாசிக்க ஏதுவான பிரெயில்முறை குறித்து குழந்தைகள் அறிவதே இல்லை. கணிதமெல்லாம் அவர்களுக்கு வெறும் கேள்வி ஞானம்தான். இத்தகைய மோசமான சூழலில், இசைக்கல்வி உடற்கல்வியெல்லாம் அவர்களுக்கு எட்டாக்கனி என்பதே கள எதார்த்தம்.
உள்ளடங்கிய கல்வியின் வரவால் நலிவடைந்துவிட்ட சிறப்புப்பள்ளிகளிலும் கற்றல்சார் நடவடிக்கைகள் அதல பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. அரசால் நடத்தப்படும் பத்து சிறப்புப்பள்ளிகளில், போதிய மாணவர்கள் இல்லை என்ற காரணத்தால் தர்மபுரி மற்றும் கடலூர் தொடக்கப்பள்ளிகள் அதே பகுதிகளில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளிக் கட்டடங்களில் இந்த ஆண்டுமுதல் இயங்கத் தொடங்கியிருக்கின்றன என்ற செய்தியில் ஏதோ சமிக்ஞை அடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.
மாணவர்கள் எண்ணிக்கையில் தன்னிறைவைக் கண்டிருக்கும் தஞ்சை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய சிறப்புப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், அவை ஓராசிரியர் ஈராசிரியர்ப் பள்ளிகளைப் போன்றே காட்சி தருகின்றன.
சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 8 உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களில் 1 மட்டுமே நிரப்பப்பட்டுள்்ளது. இசை ஆசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 10 பணியிடங்களில் 8 காலியாக உள்ளன.
இதற்கிடையில், பள்ளிக்கல்வித்துறையின் பொதுப்பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற இசை ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களால் இயற்றப்பட்ட அரசாணை 151ஐச் செயல்படுத்தித் தங்களுக்கு நிரந்தரப்பணி வழங்கும்படி அரசைப் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தியும் வருகிறார்கள்.
அரசு சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள 8 இசை ஆசிரியர்ப் பணியிடங்களில் அந்தப் பார்வையற்ற இசை ஆசிரியர்களை அவர்களின் வயது மூப்பு அடிப்படையில் நியமிக்க அரசு முன்வர வேண்டும். பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் இசை ஆசிரியர்ப் பணியிடங்களைப் பார்வையற்றோருக்கான பிரத்யேகப் பணியிடங்களாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளில் அரசை இசைவிக்க, முதலில் நமக்குள் வேண்டும் லயம்.
Be the first to leave a comment