தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:
வீட்டுக்குள் நுழைந்தது யார்?
“வீட்டுவேலைகளில் மிகக் கஷ்டமான வேலை எது? சமைப்பதா? இல்லை. துவைப்பத? இதையெல்லாம்விட மிகக் கஷ்டமான ஒரு வேலை இருக்கிறது. அதுதான் வீட்டைச் சுத்தப்படுத்தித் தூய்மையாகப் பராமரிப்பது. வீட்டின் அளவைப் பொறுத்து இந்த வேலையைச் செய்வதற்கு உரிய கஷ்டமும் அதிகமாகும். இப்படி இருக்கும்போது நீங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுக் கொஞ்சதூரம் ஏதாவது ஒரு வேலையாக வெளியில் போய்விட்டுத் திரும்பி வரும்போது வீடு முழுவதும் பளபளவென்று மின்னுகின்றவிதத்தில் சுத்தப்படுத்தி வைத்திருந்தால் எப்படி இருக்கும்! அதுவும் ஒரு சல்லிப்பைசாகூட செலவு இல்லாமல். எப்படி இருக்கிறது இது? ஆனால், இது இங்கே நடக்கவில்லை. அமெரிக்கா மாசிசூசெட்ஸில் நடந்தது இது.
வெளியில் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த நாப் ரோமன் என்பவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்துகொண்டார். அவருடைய ஐந்துவயது மகன் ரோமன்ட் வீட்டின் பின்வாசல் கதவு திறந்திருப்பதைச் சுட்டிக்காட்டியபோது நாப் ரோமனுக்குப் பதட்டம் அதிகமாகியது. உடனே அவசர அவசரமாக வீடு முழுவதையும் பரிசோதித்தார். ஆனால் என்ன ஆச்சரியம்! எந்த ஒரு பொருளும் திருடுபோனதாகத் தெரியவில்லை. அப்போதுதான் ஒரு விஷயம் அவருக்குப் புரிந்தது. வீட்டிற்குள் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் லோஷன்களின் நறுமண வாசனை அடித்தது. அதுமட்டும் இல்லை. தன்னுடைய வீடு முழுவதும் மிக அழகாகச் சுத்தப்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் உணர்ந்தார். பாத்ரூமும், வாஷ்பேசினும்கூட பளபளவென்று மின்னிக்கொண்டிருந்தது. ரோமன் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொண்டார். தன் மகனுடைய அறையும், சமையலறையும் சுத்தம் செய்யப்படவில்லை என்பதுதான் அது. சுத்தப்படுத்த வந்தவர்கள் ரோமன் வளர்க்கும் பாம்பைப் பார்த்து பயந்து சுத்தப்படுத்தும் வேலையைப் பாதியோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பிறகு தெரிந்தது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள மால்பரோ காவல்துறைக்கு இதைப் பற்றி இன்னும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் ரோமனுக்கு அவருடைய பாத்ரூமில் இருந்து டாய்லெட் பேப்பரில் உருவாக்கிய ஒரு ரோஜாப்பூ கிடைத்துள்ளது. நல்ல உயர்தரமான டாய்லெட் பேப்பர் ஆகும் அது என்று கருதப்படுகிறது. தொழில்ரீதியாக சுத்தப்படுத்தவரும் சில குழுக்கள் சுத்தப்படுத்தி முடிந்தவுடன் இது மாதிரி சில காகித வடிவங்களை உருவாக்கி வைப்பது வாடிக்கை. ஆக மொத்தத்தில் இந்த மர்மத்திற்கு இப்போதைக்கு கிடைக்கும் பதில் தொழில்ரீதியாக வீடுகளை சுத்தப்படுத்துகிற சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முகவரி மாறி வந்திருப்பார்கள் என்பதுதான். இவ்வாறே ரோமனும், அவருடைய குடும்பமும் கருதுகிறது. எப்படி இருக்கிறது இது!”.
புத்தகத் திருடர்கள்
நூல்நிலையத்தில் இருந்து வாசிப்பதற்காகப் புத்தகத்தை எடுத்துப் போய்விட்டு குறிப்பிட்ட தேதியில் திருப்பிக் கொடுக்காமல் அபராதத்துடன் அந்தப் புத்தகத்தைக் கொடுப்பது சாதாரணமாக நடக்கும் ஒன்று. நன்றாகச் செயல்படும் சில நூல்நிலையங்கள் புத்தகத்தை படிப்பதற்காக எடுத்துப் போய்விட்டு தலைமறைவாகும் நபர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடமிருந்து புத்தகத்தை மீட்ட சம்பவங்களும் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால், எடுத்த புத்தகத்தை 82 ஆண்டுகள் கழித்து அபராதம் என்று ஒரு பைசாகூடத் தராமல் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த அதிசயம் சமீபத்தில் நடந்துள்ளது. அயர்லாந்து நாட்டில் தி டொனால்ட் கன்ட் நூல்நிலையத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது.
1937 ஜூலை 23ல் எடுக்கப்பட்ட புத்தகம் 82 ஆண்டுகள் கழித்து 2019ல் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. பிரபல அயர்லாந்து கவிஞரும், நாவலாசிரியருமான ஆனி எம்.பி. ஸ்மித்சன் எழுதிய “ தி வொயிட் அவுல்” (The white owl) என்ற நாவல்தான் திரும்பக் கிடைத்திருக்கும் புத்தகம். 1937ல் இந்த புத்தகம் வெளிவந்தது. புத்தகத்தை எடுத்த நபருடைய சொந்தக்காரர்கள் வீட்டைச் சுத்தப்படுத்தும்போது கண்டுபிடித்து நூல்நிலையத்திற்குத் திருப்பிக் கொடுத்தனர். புத்தகத்தைத்க் கொடுத்தவர்கள் ஒவ்வொருநாளைக்கும் 5 சென்ட் என்ற கணக்கில் 1280 யூரோ அதாவது இந்திய மதிப்பில் லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக அபராதம் கட்டவேண்டும். ஆனால் அயர்லாந்து நாட்டு அரசாங்கம் 2019 ஜனவரிமுதல் நூல்நிலையத்தில் இருந்து வாசிக்கப் புத்தகம் எடுத்துவிட்டுத் தாமதமாகக் கொடுப்பதற்கு உரிய அபராதத்தை ரத்து செய்துவிட்டதால் ஒரு பைசாகூட கொடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அத்துடன் தி வொயிட் அவுல் புத்தகத்தின் நகல்கள் இப்போது உலகில் அதிகம் இல்லை என்று முதிர்ந்த நூலகர் டெனிஸ் மட்கரி சொல்கிறார். அதனால் நாவல் திரும்பக் கிடைத்தது பற்றி அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நாவலின் முதல் பதிப்பிற்கு அமேசான் நிறுவனம் அளித்துள்ள விலை ரூ 41,000.
விதையோடு கருப்பு திராட்சை
திராட்சைப்பழங்கள் வரலாற்றுக் காலம் முதலே நமக்கு நன்கு அறிமுகமானவை. உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோனியத் தோட்டங்களில் கருப்புத் திராட்சை பயிரிடப்பட்டிருந்தது. கிடைக்காததை எண்ணி ஏங்கி வாழாமல் கிடைத்ததை வைத்து மனநிறைவு கொள்ளவேண்டும் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்த நரியின் ‘ச்சீ.. ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்று கிடைக்காமல் போன திராட்சைப்பழத்தைப் பற்றிய கதை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கருப்பு திராட்சையின் பழச்சாற்றை அரசர்கள் அருந்தி மனம் மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் மதுபானம் தயாரிக்க இவையே பயன்படுத்தப்பட்டன. பழங்காலத்தில் பழரசங்களை முன்னோர் பயன்படுத்தினர்.
திராட்சையில் கருப்பு, விதையில்லாத கருப்பு, பச்சை, விதையில்லாத பச்சை திராட்சை என்று பல ரகங்கள் இன்று உள்ளன. ஆனால் இவற்றில் கருப்பு திராட்சையில் அதிக சத்துகள் உள்ளன. நாட்டு வைத்தியர்கள்முதல் ஆங்கில மருத்துவர்கள்வரை அனைவரும் திராட்சைப் பழங்களின் ரசத்தை மருந்து தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். புரோ ஆந்த்ரோசைனின் என்ற வேதிப்பொருள் திராட்சையில் உள்ளது. இந்த நன்மை தரும் அருமருந்து திராட்சை விதைகளில் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ரெட் வைன் என்ற மதுபானம் திராட்சையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. பிரான்சு மக்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க மக்கள் அதிகமான அளவுக்குப் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளில் திராட்சை விதைகள் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளன. பழச்சாற்றைப் போலவே திராட்சை விதையின் சாறும் இயற்கை உணவு என்று ஜப்பானிய மக்கள் நம்புகின்றனர்.
இரத்த அழுத்தத்திற்கு அருமருந்தாக, ரண சிகிச்சையில் காயத்தை ஆற்ற இது பயன்படுகிறது. இரத்தக்குழாய்களில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க இது உதவுகிறது. சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்வதற்கு இது பயன்படுகிறது. நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.
கருப்பு திராட்சையின் சதைப் பகுதியை மட்டும் சாப்பிடாமல் விதையுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். குளிரூட்டப்பட்ட பாட்டில் பானங்களைத் தவிர்த்து இயற்கையான முறையில் அப்போதே பழங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளை அருந்தவேண்டும்.
தொடர்புக்கு: nrvikram19@gmail.com
Be the first to leave a comment