சமீபகாலமாக தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படும் ஒரு கண் நோய் மெட்ராஸ் ஐ (Madras Eye) எனப்படும் குறைபாடு. இதைத் தமிழகத்தில் எந்த இடத்தில் யாருக்கு வந்தாலும் அதை இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள். ஏன்? மெட்ராஸ் எனப்படும் சென்னையின் பெயரைத் தாங்கிவரும் இந்தக் கண் குறைபாடு உலகம் முழுவதுமே இந்தப் பெயரில்தான் வழங்கப்பட்டு வருகிறது போலும்! இந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. இந்த நோய் பற்றி நம்மிடம் ஏராளமான தவறான கருத்துக்கள் உள்ளன.
சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இந்தியாவின் மிகப் பழமையான மருத்துவமனை. வரலாற்றில் மற்றொரு பெருமையும் இதற்கு உண்டு. உலகிலேயே இங்குதான் முதன்முதலாகத் தானமாகக் கொடுக்கப்பட்ட கண்கள் மற்றொரு மனிதருக்குப் பொருத்தப்பட்டு முதல் கார்னியா எனப்படும் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்தப் புகழ்பெற்ற மருத்துவமனை 1819ல் தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவமனையின் உயர் அலுவலராக அதாவது சூப்பரிண்டெண்டன்டாக 1918ல் இருந்தவர் கிர்க் பேட்ரிக் என்பவர். இவரே முதன்முதலில் சிவந்த கண்களுடன் வந்த நோயாளிகளுக்கு அப்போது சிகிச்சை அளித்தார். அவர் எந்த வைரசினால் இந்த கண் நோய் பரவுகிறது என்று ஆய்வு நடத்தினார். அடினோ வைரஸ்தான் இதற்குக் காரணம் என்பதை முதல்முதலாகக் கண்டுபிடித்தார். இது சென்னை என்று இப்போது அறியப்படும் மதராஸப்பட்டிணத்தில் நடந்தது. அதனால் இந்தக் கண் நோய்க்கு நகரத்தின் பெயரான மதராஸபட்டிணத்தின் பெயர் சூட்டி மெட்ராஸ் ஐ என்று பெயரிட்டார்கள். பிறகு இந்த பெயரே நிலைத்துவிட்டது.
கோடையில் வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில்தான் இந்த மெட்ராஸ் ஐ என்னும் சிவந்த கண்களுடன் கூடிய கண்நோய் வருகிறது. ஆனால் சில சமயங்களில் பருவமழை காலத்தின்போதும் இந்த நோய் பரவலாக ஏற்படுகிறது. பருவநிலை மாற்றங்களால் மழைக்காலத்திலும்கூட வெய்யில் கொளுத்துவதே இதற்குக் காரணம். சிவப்பாக இருக்கும் கண்கள் எல்லாவற்றிற்கும் இந்த நோய் வந்திருக்கிறது என்று தவறாக நினைத்துவிடக்கூடாது.
கண்ணில் தூசி விழுந்தால், கருவிழியில் நோய் இருந்தால், கண் அழுத்தநோய் இருந்தால்கூட கண் சிவந்துபோகும். பாக்டீரியாக்கள் மூலமும்கூட சிவந்த கண்கள் ஏற்படும். அடினோ வைரஸ் தொற்றினால் கண் சிவப்பாக மாறும். பல்வேறு காரணங்களால் கண் சிவந்துபோகும். அதனால் எதனால் கண் சிவந்திருக்கிறது என்பதைக் கண் மருத்துவரிடம் சென்று காட்டி அதற்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதே நல்லது.
அடினோ வைரஸ் தாக்கத்தால் வரும் இந்த நோய்க்கு சில அறிகுறிகள் உண்டு. கண்ணில் மண் விழுந்ததுபோல உறுத்தல், விழி வெண்படலம் சிவப்பாக மாறுதல், கண் எரிச்சல், வீங்கும் இமைகள், தூங்கி எழுந்திருக்கும்போதே இமைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வது, நீர் வெளிவருவது, கண்ணில் இருந்து அவ்வப்போது அழுக்குகளும் வெளியேறுவது, கண்ணில் வலி இருப்பது, காதுகளுக்கு அருகில் நெறி கட்டிக்கொள்வது போன்றவை இதில் சில.
இந்த நோய் வந்தால் மருந்துக் கடைக்கு நேராகச் சென்று மாத்திரை மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது கூடாது, மருந்தைக் கண்ணில் ஊற்றிக்கொள்ளக்கூடாது. உடல்நலத்தைப் பொறுத்தமட்டும் சுய மருத்துவ சிகிச்சை கூடாது என்று வலியுறுத்தும் இந்த காலத்தில் கண்டிப்பாக கண்ணுக்கு நாமே சுயமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளக்கூடாது.
அலட்சியமாக இருக்கக்கூடாது. தகுந்த சிகிச்சை தக்க நேரத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் கருவிழியில் அதிகமான பாதிப்பு ஏற்படும். பார்வை இழப்பும் ஏற்படலாம். வந்தவுடன் உடனடியாகச் சென்று ஒரு கண் மருத்துவரைப் பார்க்கவேண்டும். சாதாரண டாக்டரைப் பார்ப்பதைவிட இதுவே சிறந்தது. ஒரு வாரத்தில் சிகிச்சைப் பெற்று குனமடைந்துவிடலாம். நோய் வந்தவர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்தால் மற்றவர்களுக்கும் இந்த நோய் தொற்றுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.
கண் நோய் அதிலும் குறிப்பாக இந்த நோய் வந்தவர்களை நேருக்குநேர் பார்த்தால் பார்ப்பவர்களுக்கும் நோய் வரும் என்பது தவறு. ஏனென்றால் இந்த நோய்க்குக் காரணமான அடினோ வைரஸ் காற்றின் மூலம் பரவுவதில்லை. நோய் வந்தவர் உறுத்தும்போது தன் கையால் கண்ணைத் தொட்டுவிட்டு அதே கையால் மற்ற பொருட்களைத் தொட்டால் இது மற்றவர்களுக்குப் பரவலாம். அதேபோல அவர் கண்ணைத் துடைக்க பயன்படுத்தும் கைக்குட்டை அல்லது துண்டை மற்றவர்கள் பயன்படுத்தும்போது தெரியாமல் அடுத்தவர்கள் அந்தத் துணியை கண்களில் வைத்துத் துடைத்தால் அவர்களுக்கும் இந்த நோய் வரலாம். பாதிக்கப்பட்டவர் தொட்ட இடமெல்லாம் அடினோ வைரஸ் அளவில்லாமல் இருக்கும். எல்லோருக்கும் பரவலாம்.
கண் நோய் வந்தவர் தொட்ட பொருளை அது எதுவாக இருந்தாலும் அதை நன்றாக இருப்பவர்கள் தொட்டுவிட்டுத் தெரியாமல் தங்களுடைய கண்களைத் தொடும்போது அடுத்த 24 மணிநேரத்திற்குள் அவர்களுக்கும் இந்த கண் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. இப்படித்தான் மெட்ராஸ் ஐ எனப்படும் இந்தக் கண் நோய் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்புக்கண்ணாடி அணிவது நல்லது. அவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, தலையணை, மெத்தை, படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கண்நோய் வந்தவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதைத் தவிர்த்துத் தனிமையில் இருப்பது நல்லது. சுடுநீரில் நனைத்து எடுத்த பஞ்சினால் கண்களை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இரண்டு மணிநேரங்களுக்கு ஒரு தடவை நல்ல தண்ணீரால் கண்களைச் சுத்தம் செய்வது நல்லது. கிருமிநாசினி கலந்த தண்ணீரில் கைகளைக் கழுவுவதை நோய் வந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர் வழக்கமாகக் கொள்ளவேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வழிபாட்டு இடங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில்நிலையங்கள், மார்க்கெட்டுகள், அலுவலகங்கள், கடைத்தெருக்கள் போல மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் சேரும் இடங்களுக்கு நோய் சரியாகும்வரை பாதிக்கப்பட்டவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை ஒரு வார காலத்துக்குத் தவிர்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவர்களால் மற்றவர்களுக்கு நோய் வராமல் தடுக்க முடியும்.
சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளில் இந்த நோய்க்காகச் சிகிச்சை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் வருவதற்கு முன்பே வருவதைத் தடுத்து நிறுத்த மருந்து எதுவும் கிடையாது. வந்தால் இரண்டு மூன்று நாட்களில் தானாகவே சரியாகப் போய்விடும் என்று நினைப்பது தவறு. கண் மருத்துவரைப் பார்த்துத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே கண் நோய் குணமாகும். இதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் காட்டும் அலட்சியத்தால் நாம் கஷ்டப்படுவோம். நம்மால் அடுத்தவர்களும் அவதிக்குள்ளாவர். இதை மனதில் வைத்துச் செயல்படுவோம்.
***தொடர்புக்கு: nrvikram19@gmail.com
Be the first to leave a comment