அண்மையில் பார்வை மாற்றுத்திறனாளி பேராசிரியர் திரு. வே. சுகுமாரன் அவர்கள் எழுதி ஆம்பல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “நியாயங்கள் காயப்படுவதா?” என்ற புத்தகத்தை படித்தேன். உண்மையில் ஆசிரியரை நடமாடும் கருவூலம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். விழிச்சவால் இதழில் சில கட்டுரைகள் இடம்பெற்றிருந்தபோதும், அத்தனை கட்டுரைகளையும் ஒன்றாகப் படிப்பது அதிக பிரம்மிப்பையும், புதுவிதப் புரிதலையும் தருவதாக அமைந்தது. எண்ணற்ற பொருண்மைகளில் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலானவை பார்வையற்றோர் பற்றியே பேசுகின்றன.
பார்வையற்றோரின் திருமணங்கள், ஜாதி ஒடுக்குமுறை, அரசியல் பங்களிப்பு, சங்கங்களின் செயல்பாடுகள், பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வின்மை, வரலாற்றில் பார்வையற்ற மன்னர்கள், அவர்கள் செய்த சீர்திருத்தங்கள், அமைச்சர்கள் மற்றும் இந்திய பாராளுமன்றத்தில் பார்வையற்ற அரசியல்வாதிகளும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் விரவிக்கிடக்கக் காணலாம்.
1970 80களில் நடந்த போராட்டங்கள் குறித்தும், அரசியல் செயல்பாடுகளில் நடுநிலைமையோடு செயல்படுதல், கட்சிச் செயல்பாடுகளில் தனித்துவத்தோடு விளங்குதல் குறித்தும் விவரித்திருக்கிறார். மேலும், பார்வையற்றோர் குறித்த வரலாற்றை மற்றவர்கள் எழுதும்போது, விருப்பமின்மையும், மிகக் குறைந்த தகவல் திரட்டல் உள்ளிட்ட காரணங்களால், பார்வையற்றோர் குறித்து பார்வையற்றோரே அதிகம் எழுத வேண்டிய நிர்பந்தம் இருப்பதுமாகிய சூழல்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
பிரெயிலின் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியம் குறித்துப் பேசுகிறார். அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் இருவர் கணினி இயக்கத் தெரிந்தவராக இருந்தபோதிலும், பிரெயிலை விரும்புவதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறார். நாம் நிறைய வரலாற்றுச் சான்றுகளை தேடாமல், நமக்குத் தெரிந்த தகவல்களையே பகிர்ந்துகொண்டிருக்கிறோம். அவரது தொடர் வாசிப்பின் காரணமாக நிறைய தகவல்களைத் திரட்டி அருமையான தொகுப்பை கொடுத்திருக்கிறார். சிறப்புப் பள்ளிகளின் அவசியம், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் இருந்த சில பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களைப் பார்வையற்றோர் கோணத்தில் அணுகி, தெளிவாக விவரித்திருக்கிறார்.
மொத்தத்தில், 1970 80 களில் இருந்து பார்வையற்றோரது வாழ்வியலை அலசி ஆராய்ந்து உரிய தரவுகளுடன் பொதுத்தலத்தில் பயணிப்போருக்குப் புரியும் வகையில் எழுதப்பட்ட ஒரு அற்புதப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்புவோர் விரல்மொழியர் புத்தக whatsapp குழுவில் இணைந்தோ, அல்லது சுகுமாரன் சாரை அணிகியோ புத்தகத்தைப் பெற்றுப் படிக்கலாம்.
இவர், அமேசான் கிண்டிலில் சில புத்தகங்களை வெளியிட்டிருப்பதும், Youtube, Facebook போன்ற வலைதளங்களில் தம் தனித்திறமைகளை அவ்வப்போது பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கவை.
***தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com
விரல்மொழியர்
புத்தக வாட்ஸ் ஆப் குழுவில் இணைய:
பொன். சக்திவேல், 9159669269
ரா. பாலகணேசன், 9894335053
எழுத்தாளர் வெ. சுகுமாறன் அவர்களைத் தொடர்புகொள்ள:
9443112831
எழுத்தாக்கம்: தூரிகா
தொடர்புக்கு: thodugai.thoorikha@gmail.com
எனது குரல் வழியாக்கத்தை எழுத்து வடிவில் தந்தமைக்கு நன்றிகள். எழுத்தாக்கம் செய்தவரின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம். குரலாக்கத்தில் பதிப்பகத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டு இருந்தேன். எனவே பதிப்பகத்தின் சரியான பெயரை எழுத்து வடிவில் அனுப்பியும் இருந்தேன். ஆனால் பதிப்பகத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில இடங்களில் எழுத்துப் பிழைகளும் இருக்கிறது.
தங்களது தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி. பிழைகள் கருத்தில் கொள்ளப்பட்டு திருத்தப்படும்.
விரைந்து எனது கோரிக்கையை சரி செய்தமைக்கு நன்றிகள்