ஏப்ரல் 14, ஹெலன்கெல்லரின் ஆசிரியரான ‘The Miracle Worker’ என்று அழைக்கப்படும் ஆன்சலிவன் (Anne Sullivan) அவர்களின் பிறந்தநாள். பார்வையற்ற, காதுகேளாத, வாய் பேச இயலாத ஹெலன்கெல்லருக்கு அவரின் ஆறு வயதில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய ஆன்சலிவனும் ஒரு குறைப்பார்வையுடைய (Low-Vision) பெண் ஆவார்.
உண்மையான கற்பித்தல் விளைவு என்பது ஆக்கபூர்வமான நடத்தை மாற்றத்தைக் கற்பவரிடம் ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில், தொழில்நுட்பமோ, சிறப்புக்கல்வி தொடர்பான கலைத்திட்டங்களோ உருவாகியிராத 1880களில் சலிவன் செய்து காட்டியவை அத்தனையும் சாதனைகள் அல்ல சாகசங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அசாத்திய சகிப்புத் தன்மையும், ஆன்ற பொறுமையும் கொண்டு, தன் கற்பித்தல் உத்திகளால் ஹெலன்கெல்லரை உலகறியும் ஆளுமையாக உருவாக்கிக் காட்டினார் சலிவன். உண்மையில் ஆன்சலிவன்தான் ஊனமுற்றோருக்கான சிறப்புக்கல்விக்கும், சிறப்பாசிரியர்களுக்கும் தாய் என்று போற்றப்படத் தக்கவர். ஆனால், அவர் குறித்தும், ஹெலனிடம் அவர் கையாண்ட உத்திகள் குறித்தும், இன்று சிறப்புக்கல்வி போதிக்கும் எத்தனை ஆசிரியர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்?
சிறப்புக்கல்விக்கான கலைத்திட்டத்தில் (curriculum of special education) ஆன்சலிவன் கற்பித்தல் உத்திகளுக்கு இடமிருக்கிறதா? அவ்வளவு ஏன்? நன்கு திட்டமிடப்பட்டு, பல்வகை ஊனமுற்ற கல்வியாளர்களைக்கொண்டு சிறப்புக்கல்விக்கென்று தனித்த கலைத்திட்டங்களும், அதையொட்டிய பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளனவா?
வரையறுக்கப்படாத கலைத்திட்டங்கள், ஒருங்கிணைக்கப்படாத கற்றல் மூலங்கள், உரிய கண்காணிப்போ, அர்ப்பணிப்போ அற்ற பயிற்சி முறைகளால் சகிப்புத் தன்மையும், நீடிய பொறுமையும் அற்ற சிறப்புக்கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் உருவாகிய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் கற்பித்தல் பணிக்கன்றி, மிகமிகக் குறைந்த ஊதியத்தில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்தல், அடையாள அட்டை பெற்றுத் தருதல் போன்ற களப்பணிகளுக்கே பயன்படுத்தப்படும் அவலமே களத்தில் காணப்படும் எதார்த்தம்.
இந்த நிலை மாற வேண்டும். பொதுக்கல்வியைப் போன்றே ஊனமுற்றோருக்கான சிறப்புக்கல்வியை மேம்படுத்தும் தனித்ததோர் பார்வை ஆளும் அரசுகளுக்கு வேண்டும். சிறப்புக்கல்விக்கான கலைத்திட்டங்கள், சிறப்புக்கல்வியியல் ஆராய்ச்சி மையம், சிறப்புக்கல்விக்கான பல்கலைக்கழகம் குறித்தெல்லாம் அரசுகள் உடனடியாகச் சிந்திக்க வேண்டும். அனைத்திற்கும் தொடக்கமாய், செப்டம்பர் 5ஐ ஆசிரியர்தினமாகக் கொண்டாடுவதுபோல், ஆன்சலிவன் பிறந்தநாளான ஏப்ரல் 14 சிறப்புக்கல்வி ஆசிரியர்களுக்கான (day for Special Educators) நாளாக அனுசரிக்கப்பட வேண்டும். அன்றைய நாளில், ஆன்சலிவன் பெயரில் சிறப்புக்கல்வி ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும்.
இவைதாம், ஆன்சலிவன் பிறந்தநாளில் நம் உள்ளத்தில் எழுந்து, ஓங்கி ஒலிக்கிற முழக்கங்களாக இருக்கின்றன.
ஓங்கட்டும் ஆன்சலிவன் புகழ்!
ஒளிரட்டும் சிறப்புக்கல்வி!
Be the first to leave a comment