தொடர்: காவியச்சுடர்கள் (3) முடிவிலா இருள்

தொடர்: காவியச்சுடர்கள் (3) முடிவிலா இருள்

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற ஆதிநிலை முடிந்து, அரசுரிமை காலத்திலும் தண்டனைக் கரத்தின் முதல் இலக்கு கண்தான். ஏனெனில், அறிதல் புலங்களில் முதன்மையானது கண். ஒருவரின் அகத்தோடும் புறத்தோடும் தன் பார்வை மொழியால் தொடர்புகொள்ளும் கண்களை இல்லாமல் செய்துவிடுவது பெரும்பாலும் அந்த மனிதனையே முற்றழிப்பதுதான். அதுவும் ஊனோடும் உயிரோடும் முற்றழிப்பது.

உடல்ச் சேதமோ, சிரச்சேதமோ ஐந்தே நிமிடங்கள்தான் எல்லாம் முடிந்துபோகும். ஆனால், கண்ணைத் தோண்டுதல் என்பது, ஒருவனின் அகத்தை அழித்தல். ஆளுமையைக் குன்றச் செய்தல். கழிவிரக்கத்திலும், இயலாமையிலும் புழுங்கிச் சாகிற வாழ்க்கையைக் கையளித்தல். பிறவிமுதலாக இந்த உலகின் பற்பல வண்ணங்களை அறிந்து, சுகித்து மகிழ்ந்தவனைச் சுற்றி இருள்மதில்களை கட்டியெழுப்புதல்.

இனி அவனுக்குத் தொடுகைதான் நம்பிக்கை. செவிகள்தான் உற்ற துணை. வாசம்தான் வழிகாட்டி. சொற்கள்தான் வாகனம்.

ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுச் சிந்தனைகளே பிறந்திடாத பண்டைய காலங்களில் நடுவயதுப் பார்வை இழப்பு என்பது தீராத் துன்பம். ஜீவனில் முக்கால் பங்கை உருவியெடுத்துக்கொண்ட பரிதாபநிலை. நடுங்கும் கைகளால் நாட்புறமும் துலவி, பிடியை இறுகப் பற்றிக்கொள்கிற இரவல் வாழ்க்கை. தன்னை உதைத்து உதைத்து நடந்த கால்களை, உராய்ந்து ஊர்ந்து செல்லுமாறு பணித்துவிட்ட காலத்தின் கட்டளை. நீங்கா ஐயமும், நிலைபேற்று அச்சமுமாய் நிர்கதிச் சூழல்.

சரி, இவையெல்லாம் நடுவயதுப் பார்வையற்றவனுக்கு. பிறவிப் பார்வையற்றவனின் கதி?

விடுதலை உணர்வுதான் மகிழ்ச்சி என்றால், அறியாமைகூட விடுதலை உணர்வுதான். பிறவிப் பார்வையின்மை என்பது ஒருவித அறியாமையோடே பிறத்தல். அறியாமை என்பதையே அறியாத புழு வாழ்க்கை. அத்தகைய அற்பப் புழுவாகவோ, அல்லது மூர்க்க விடம்கொண்ட அரவப் புழுவாகவோதான் பெரும்பாலான பிறவிப் பார்வையற்றவர்களை அக்காலச் சமூகம் கருதியிருக்கலாம் என பண்டைய இலக்கியங்கள் வழியே நாம் ஊகிக்கிறோம். ஆனால், ஒரு மாற்றுக் குரலாய், தன் படைப்பாக்கத்தின் வழியே மதிநுட்பம் கொண்ட ஒரு பிறவிப் பார்வையற்றவரை அறிமுகம் செய்கிறார் வியாசர்.

உண்மையில் அவரின் நோக்கம், பார்வையின்மையையோ, பார்வையற்றவர்களையோ மேன்மைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதல்ல, பார்வையற்றவர்களாய்ப் பிறந்தாலும்கூட பிராமணர்கள் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதை அழுத்தமாய்ச் சொல்ல வேண்டும் அவ்வளவுதான்.

அரசி சத்தியவதியின் மகன்கள் சித்ராங்கதன் மற்றும் விசித்திர வீரியன் இருவருமே இறந்துவிட, வாரிசுகள் ஏதுமற்ற குருகுலத்தின் புகழ் மங்கி, அஸ்தினாபுரத்தில் குருகுலத்துக்கு இருக்கிற அரசுரிமை பறிபோய்விடும் என அஞ்சினாள் அரசி. குருகுலத்துக்கு ஏற்பட்டிருக்கிற இந்த இக்கட்டை பீஷ்மரால் மட்டுமே சரி செய்ய இயலும் என அவள் நம்பினாள்.

பீஷ்மரோ அறம் வலுவாதவர்; சிந்தைக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளியற்ற மனம் கொண்டவர். பிறவி முழுக்கத் தான் மேற்கொண்்டிருக்கிற பிரமச்சரியத்தைக் கைவிட இயலாத அவர், தன் தாயின் கண்ணீரையும் புறந்தள்ள இயலாதவராக இருந்தார்.

இந்த நெருக்கடியான நிலையில்தான், தாய்க்கு ஒரு உபாயம் சொல்லும் முகமாக, தான் கற்றறிந்த புராணங்களின் வழியே ஒரு கதையைச் சொல்கிறார் பீஷ்மர். அதாவது, குலம் தழைக்க வேண்டுமானால், ஒரு பிராமண முனியிடம் அம்பிகை மற்றும் அம்பாளிகையைக் குழந்தைபெறச் செய்யலாம் என்பதே அவர் சொன்ன கதையின் சாரம். பீஷ்மர் சொன்ன கதை இதுதான்.

அக்காலத்தில், வேதங்களில் சிறந்து விளங்கிய உதத்யர் என்ற முனிவர் வாழ்ந்தார். அவரின் மனைவி மமதை. பேரழகு கண்கள் கொண்ட அவள் உதத்யரின் மூலம் கருவுற்றிருந்தாள்.

மமதையின்மீது காமுற்றான் உதத்யரின் தம்பியான தேவகுரு பிருகஸ்பதி. பேச்சுக்கலையில் முதன்மையான பிருகஸ்பதி, பற்றி எரியும் காமத்தோடு மமதையை நெருங்கினான். அவள் தடுத்தாள். தான் கருவுற்று இருப்பதாகவும், தன் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறக்கும் முன்பாகவே வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்திருப்பதாகவும் சொன்னாள். ஒரே சமயத்தில் தான் இரண்டு கருக்களைத் தாங்குவது இயலாது என்பதால், தன்மீது கொண்ட ஆசையை விட்டுவிடுமாறு அவள் பிருகஸ்பதியிடம் மன்றாடினாள்.

படர்ந்தெழுந்த தீப்பிழம்பெனப் பற்றி எரியும் காமத்தை அடக்க ஒண்ணா பிருகஸ்பதி, அவள் சொற்களைச் செவிமடுக்காமல், அவளை நெருங்கி தன் உயிரணுக்களை அவளுக்குள் செலுத்தினான். அழையா விருந்தாளி எனத் தன் தனித்த அறைக்குள் நுழையும் அந்த உயிரணுக்களைத் தடுத்து உதைத்து வெளித்தள்ளியது கருவில் இருந்த குழந்தை.

தரையில் விழுந்து தன் உயிரணுக்கள் வீணாவதைக் கண்ட பிருகஸ்பதி, குழந்தையைச் சபித்தான். “நான் இன்புற்றிருக்கப் பொறாது, என்னை அவமதித்த நீ பூமியில் முடிவற்ற இருளுடனே வாழ்வாய்” என்று சாபம் தந்தான். அந்தச் சாபத்தால் பிறந்த குழந்தைதான் தீர்க்கதமஸ். நித்திய இருள்சூழ் மனிதன் என்பது அதன் பொருள்.

பார்வையற்ற முனிவரான தீர்க்கதமஸ் வேதங்களில் சிறந்து விளங்கினார். உரிய பருவத்தில், பிரத்வேஷி என்ற பெண்ணை மணந்து, கௌதமர் உள்ளிட்ட மகன்களைப் பெற்றார். மகன்களும் மனைவியும் பேராசை கொண்டவர்களாக இருந்தார்கள். தன் கணவனிடம் குறிப்பிடத்தக்க மதிப்போ பிரியமோ அற்றவளாக இருந்தாள் பிரத்வேஷி.

தன்னிடம் மனநிறைவு அற்றவளாக இருப்பதன் காரணத்தைத் தன் மனைவியிடம் கேட்டார் தீர்க்கதமஸ். அதற்கு அவள், “ஒரு பெண்ணைத் தாங்கும் கணவன் பத்திரி என்றும், அவளைப் பாதுகாப்பவன் பதி என்றும் அழைக்கப்படுகிறான். நீர் எனக்கு இந்த இரண்டையுமே செய்யவில்லை, மாறாக நான்தான் உம்மைத் தாங்கவும் பாதுகாக்கவும் வேண்டியிருக்கிறது. எனவே, நான் இனியும் உம்மோடு வாழ விரும்பவில்லை” என்று சினந்தாள்.

ஏழைமனிதனுக்கும், எல்லாம் தேர்ந்த முனிவனுக்கும், அவ்வளவு ஏன் இகம் பரம் உணர்ந்த கடவுளு்க்குமே இந்த உலகில் பொறுக்க ஒண்ணாத் துன்பம் ஒன்று உண்டென்றால், அது ஒரு பெண்ணின் புறக்கணிப்புதான். ஆடிப்போனார் தீர்க்க தமஸ். தன்னை சத்திரிய மன்னர்களிடம் அழைத்துச் சென்றால், நிறைய செல்வங்கள் கிடைக்கும் என்று சொல்லிப் பார்த்தார் மனிதர். எதுவும் கதைக்காகவில்லை. தமஸைக் கட்டிக் கங்கையில் எறிந்துவிடுமாறு தன் மகன்களுக்கு ஆணையிட்டாள் பிரத்வேஷி. தாய் சொல்லைத் தட்டாத தனயன்களால் நட்டாற்றில் கட்டுண்டு தனித்துவிடப்பட்டார் தீர்க்கதமஸ்.

“உலகத்தில் இனி எந்த ஒரு பெண்ணும் ஒரே ஒரு ஆணைத்தான் கணவனாகக்கொள்ள வேண்டும் என்கிற விதியை விதிக்கிறேன். கணவன் இறந்துவிட்டாலும் பெண்கள் வேறு திருமணம் செய்யாமல் வாழ வேண்டும். கணவனை இழந்து தனிமையில் வாழும் பெண்கள் பாவம் செய்தவர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களைத் தீச்சொற்கள் பின்தொடரும்.” என்று உலகப் பெண்களுக்கெல்லாம் உரத்து சாபமிட்டார் முனிவர். இன்னா செய்தாரை சபித்தல், இனியவை செய்தாருக்கு வரமளித்தல் முனிவர்களின் முதன்மையான கடமை அல்லவா? அப்படிச் செய்யாமல் விட்டால், அவர்கள் மாமுனிகள் என்று போற்றப்படுவது எங்கனம்?

ஆற்றில் கட்டுண்டு மிதந்த அந்த முதியவரை பலி என்கிற அரசன் மீட்டான். அவரை அறிஞர் என்று அறிந்த அவன் தன்னுடைய அரண்மனையில் அவருக்கு இடமளித்தான். தனக்கு ஞானம் கொண்ட வாரிசுகளை உண்டாக்குமாறு தன் மனைவி சுதேஷ்னையை முனிவரிடம் அனுப்பினான் மன்னன் பலி. ஆனால், விழியற்றிருந்த முனிவரைக் காணச் சகியாத அரசி சுதேஷனை, தன் பணிப்பெண்களில் ஒருத்தியை அவரிடம் அனுப்பிவைத்தாள்.

வியாசரின் முன்னால் அம்பிகை தன் கண்களை மூடிக்கொண்டதால், திருதராட்டினன் பிறந்தார். அம்பாளிகை நடுங்கியதால், பாண்டு பிறந்தார். தனக்குப் பதிலாகத் தன் பணிப்பெண்ணை அம்பிகை வியாசரிடம் அனுப்பிவைக்க, அவளுக்குப் பிறந்தவரே விதுரர். விதுரப் பிறப்புக்கு முன்மாதிரிக் கதை ஒன்றையும் அதே மகாபாரதத்தில் சொல்கிறார் வியாசர்.

அந்தப் பெண்ணின் மூலம், 11 குழந்தைகள் பிறந்தார்கள். அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அந்தக் குழந்தைகள் தன்னுடையவை அல்ல எனவும், தன் மனைவி செய்த தந்திரம் குறித்தும் பலி முனிவர் சொல்லக் கேட்டறிந்தான்.

தன் மனைவி சுதேஷ்னையை ஆற்றுப்படுத்தி, மீண்டும் தீர்க்கதமஸிடம் அனுப்பினான் மன்னன் பலி. அவர் அரசியின் அங்கங்களைத் தொட்டு, “உனக்கு அங்கன், வங்கன், கலிங்கன், புண்டரன், சும்ஹன் என்ற ஐந்து மகன்கள் பிறப்பார்கள். அவர்களின் ராஜ்யம் சூரியக் கதிர்களை ஒத்த பிரகாசத்துடன் திகழும்” என்றார்.

பார்வையற்றவரான தீர்க்கதமஸின் மூலம், ஐந்து நாடுகள் பிறந்ததாகச் சொல்கிறார் வியாசர். மேலும், இந்த தீர்க்கதமஸ்தான் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் 140 முதல் 164 வரையுள்ள மந்திரங்களை இயற்றியவர் எனவும் சொல்லப்படுகிறது.

இவை எல்லாம் கற்பனைகளாக இருக்கலாம், கதைகளாகக்கூட எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், பரந்துவிரிந்த இந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்துப் பார்த்துச் சலித்த ஒரு படைப்பாளனின் ஆள் உள்ளத்தில் எழுந்த விளைவின் விதைகள்தானே இந்தப் பாத்திரங்கள். பார்வையின்மை என்றாலே பிச்சைக்காரர்கள் என்று பிதற்றாமல், முனிவர் என முகிழ்த்திருக்கும் சிந்தனைக்கு ஒரு சபாஷ். கண்மூடிக்கொண்டு இந்த உலகை தரிசிப்பதில் இருக்கிற களிப்பு, சுமை அத்தனையையும் ஆராயும் நோக்கம் ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்திருக்கிறது என்பதைக்கொண்டு, ஞானத்தேடலில் நம் நிலத்தவர் வேறு எந்நிலத்தவர்க்கும் சலைத்தவர்கள் அல்லர் என்பதே புலனாகிறது. அப்படியே இன்னொன்றும் புலனாகிறது, பார்வையற்றவருக்கு உள்ளார்ந்த அன்புகொண்ட ஒரு பார்வையுள்ள துணை கிடைப்பது எக்காலத்துக்குமான மிகப்பெரிய சவால்தான் என்பதும்.

***தொடர்புக்கு: koothan@thodugai.in

*** இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் சிறுகதைகள், புதினங்கள் வழியாக படைத்தளித்த பார்வையற்ற கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசுவதும், அதன்மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்வையின்மை என்பது எப்படியெல்லாம் புரிந்துகொள்ளப்பட்டு, எவ்வாறெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதை அலசுவதே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும். எனவே, நீங்கள் படித்த சிறுகதைகளில், புதினங்களில் பார்வையின்மை குறித்தோ, பார்வையற்றவர்கள் குறித்தோ பேசப்பட்டிருப்பின் அதையும் இங்கே பகிரலாம்.
உங்கள் கருத்துகளைப் thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
அல்லது 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாக அனுப்பிவையுங்கள்.
பிரெயில் மடல் எழுத விரும்புவோர், ஐந்து பக்கங்களுக்கு மிகாதவாறு எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
தொடுகை மின்னிதழ்,
G1 சுனில் மெசியா,
30 டெலிபோன் காலனி,
2ஆவது தெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை 600088

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *