ஹாரன்கள் பேரொலி எழுப்ப, இன்ஜின்கள் கூச்சலோடு, தண்டவாளத்தை அதிரடித்தபடி ரயில்கள் வந்து செல்லும் அமைதி நிலையமான சென்னை செண்ட்ரலில், அந்த அமைதியைக் கலைக்கும் வகையில், இனி ஒவ்வொரு பார்வையற்றவரும் குரலெடுத்துக் கூவி, “ஏங்க இது எந்த ட்ரைன்? எங்க போகுது?” என யாரையாவது கெஞ்சிக்கொண்டே இருக்க வேண்டுமா?
டிஜிட்டுகளில் அடங்காத பாமர மக்கள் தங்கள் அன்றாடத்தில் புழங்கும் ஓர் அரசு கட்டடத்தில், இனி டிஜிட்டல் போர்டுகள்தான் கண் சிமிட்டும், கதை சொல்லும் என்றால், யாருக்கானது அரசின் சட்டங்களும், திட்டங்களும்?
சுமை ஏற்றிய வண்டிச் சகடங்கள் உருண்டோடி மருட்டும் நடைமேடைகளின் திசையறிய இனி பார்வையற்றோருக்கு வழிதான் என்ன?
‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு!’ என சில்லிடும் ஒலியின் சிறு குரல்வளையை இறுக்கி முடிச்சிட இயல்வதுதான் எப்படி?
ஒரு திட்டத்தைத் தொடங்குவதில் மட்டுமல்ல, காலங்கள் கடந்து பயன் விளைவித்துக்கொண்டிருக்கிற ஒரு நடைமுறையை நிறுத்துவதிலும் அரசுக்கு கனிவும் கவனமும் வேண்டாமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையறிய நாங்கள் வீதிக்குத்தான் வரவேண்டும் என்று சாதிக்கிற அதிகாரிகளுக்கு, “எதற்கும் நாங்கள் தயார்தான்” என எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது நமது பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (CSGAB).
ஆகவே,பார்வைச்சவாலுடைய இளைஞர்களே! அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே! கல்லூரி பயிலும் தம்பி தங்கைகளே!
இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு,
சென்னை செண்ட்ரல் ரயில்நிலையத்தில்,
சங்கங்கள் கடந்து சங்கமிப்போம்.
அமைப்புகள் தாண்டி ஐக்கியமாவோம்.
பொது மக்களே! போற்றுதலுக்குரிய ஊடகத்துறையே!
மேற்சொன்ன செய்திகள் எல்லாம் உங்கள் கனிவான கவனத்திற்கும் கைகொடுத்தலுக்கும் தான்.
ஒலிபெருக்கி மீண்டும் முழங்கும்வரை,
ஓயாத முழக்கம் நமதென்று கொள்வோம்.
***தொடுகை மின்னிதழ்.
குறிப்பு: போராட்டத்தில் பங்கேற்க பிற்பகல் இரண்டு மணிக்கு சென்னை செண்ட்ரல் புறநகர் இரயில் நிலையத்திற்கு முன்பு ஒன்றுகூடுங்கள்.
தொடர்புக்கு: திரு. சிங்காரவேலன்,
தலைவர்,
7010834903
திரு. பாலு,
பொதுச்செயலாளர்,
8072087329
***பிற்பகல் 2.30 மணியளவில் சுமார் 50 பார்வையற்றவர்கள் பங்கேற்ற போராட்டம் வெற்றிபெற்றது.
போராட்டத்தின் நடுவே, மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்பைத்தொடக்கினார்கள் ரயில்வே துறையினர்.
மாலை, தென்னக ரயில்வே தனது முந்தைய நிலைப்பாட்டைத் திரும்பப் பெறுவதாக அறிக்கை வெளியிட்டது.
Be the first to leave a comment