அஞ்சலி: பூமி இங்கே சுற்றும் மட்டும்

அஞ்சலி: பூமி இங்கே சுற்றும் மட்டும்

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது
வாணி ஜெயராம்

தமிழ்த்திரையிசைப் பாடகிகளின் குரலை மனதோடு மனதாக ஆராய்ந்தால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். கேட்டால் தண்மையையும், கேட்கக் கேட்க வெம்மையையும் நம் விருப்பத்தோடே நமக்குள் பாய்ச்சி, விலகி நின்று கெக்கலிக்கிற சங்கதிக்குரல்கள் சைலஜாவுக்கும், ஜென்சிக்கும். ஒருதலையாய் உருகவிட்டு, ஓடி மறைகிற கைக்குச் சிக்காத காதலியின் குரல் சின்னக்குயில் சித்ராவுக்கு.

காதோரம் பேசி, மெல்லெனக் கன்னம் கிள்ளுகிற புதுமனைவியின் வாசம் வீசும் குரல்கள் உமா ரமனனுக்கும் சுனந்தாவுக்கும். ராக ராட்சசி ஜானகிக்கு வாய்த்ததோ, உங்களை அணுஅணுவாய் அங்கீகரித்தும், அடிமுதல் முடிவரை ஆராதித்தும், நொடிப்பொழுதில் நீங்கள் நீங்கியமை கண்டு, பிறவி முழுக்க உங்கள் மேல் மட்டுமே பித்தெனத் திரிகிற சில பேதைப்பெண்களின் நிபந்தனையற்ற அன்புருவை நிழலாடச் செய்கிற குரல்.

தோழி, காதலி, மனைவி என நாம் துய்க்கிற பெண் வாசம் ஒவ்வொன்றின் வித்தும் நம் உள்ளத்தில் விழுந்த தருணம் எது என இப்போது புரிகிறது. தாயென, உடன்பிறந்த தமக்கை தங்கை என குருதி நிபந்தனையால் கூடியிருந்த சகவாசம் நெடியெனப் புரையேறிய பருவகாலம் ஒன்றில், தலைதட்டி, தண்ணீர் தந்து, தன் மடிகிடத்திய அக்காள்கள் சிலரின் அரவணைப்பில் விழுந்ததன்றோ  அந்த வித்து. அன்றைக்கு அந்தச் செவிலித்தாய்கள்தான் நம் உடனுறைத் தோழிகள், உள்ளது காட்டிய கண்ணாடிகள். பாசம் என்று சொல்லி என்றைக்கும் விவரித்துவிடவே இயலாத வாசச்செடி ஒன்றை ஈர நிலத்தில் நட்டுவைத்த அந்த நங்கையரின் ஒற்றைப் பிரதிநிதியாய் ஒலிப்பது பாடகி வாணி ஜெயராம் அவர்களின் குரலன்றோ!

“என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்”:

இலங்கை வானோலியோடு சேர்ந்துகொண்டு, எவருக்காகவோ அவள் முணுமுணுத்தபோது, உள்ளுக்குள் முகிழ்த்த பொறாமை மொட்டைப் பூக்கவிடவில்லை நம் பகுத்தறிவு. வாடவும் விடாமல் பார்த்துக்கொள்வது, வாணி ஜெயராம் அவர்களின் குரல்ப்பரிவு.

“உறங்காத நெஞ்சம், உருவாக்கும் ராகம்,

உனக்கல்லவோ, கேட்பாயோ! மாட்டாயோ!

என்று பாடலில் ஒலிக்கும் புல்லாங்குழலின் சுதியையும் கடந்து பிசிரின்றி வெண்கல மணியென ஒலிப்பது வாணி அவர்களின் குரல்.

“சுகம் கொண்ட புது வீணை,

விரல்கொண்டு மீட்டு,

மாலையும் அதிகாலையும் சங்கீதம் தாஆஆஆன்”

“தான்” என்கிற ஓரசைச் சொல்லுக்குள் இத்தனை இசைகளை ஒலித்துவைக்க யாரால் இயலும்? வாணியைத் தவிர.

பொதுவாகப் பாடகர்களின் குரல்கள் ஒரு சுதிக்கு மேல் ஏறத் தடுமாறும். மூச்சுவிட்டுத் திணறும். ஆனால், எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கும். ஒருவகையில் அதைச் சிலர் கம்ஃபர்ட் என்றுகூடச் சொல்வார்கள். வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது. அதேசமயம், எவ்வளவு உச்சத்திற்கும் ஏற்றிக்கொள்ளலாம், சின்ன ஆபத்து என்னவெனில், உங்கள் இசையை மிஞ்சி அந்தக் குரல் முழங்கும். வேண்டுமானால், இசையமைப்பாளர் தன்னுடைய வாத்திய ஒலியைக் கூட்டிவைத்துக்கொள்ளலாம். அப்போதும் தனித்து ஒலிக்கும் தன்மை கொண்டது வாணி ஜெயராம் அவர்களின் தூமணிக்குரல்.

“நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா”

80களில் இசைஞானி ஒரு உத்தியைக் கையாண்டிருப்பதாய் தோன்றும். அதாவது, குளுமையும் அப்பாவித்தனமும் நிறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பாடல்களில், அதே குளுமையும் துடுக்கும் நிறைந்த பாடகி சைலஜாவின் குரலையும், துடுக்கும் துணிச்சலும் அலையடிக்கும் நடிகை ஸ்ரீப்பிரியாவின் பாடல்களில் அதே துடுக்கும் துணிச்சலும் மங்காத வாணியின் குரலையும் எடுத்தாண்டிருப்பதாகத் தோன்றும்.

இசைஞானியின் உத்தியைப் பின்பற்றிதான் திரு. எம்எஸ்வி அவர்களும், ஸ்ரீப்பிரியாவுக்கான பல பாடல்களில் வாணியின் குரலைப் பயன்படுத்தியிருப்பாரோ என்கிற ஊகமும் எழுகிறது. உதாரணமாக, ‘பொல்லாதவன்’ படத்தில் வரும் “அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்” பாடலைச் சொல்லலாம்.

உறவாடும் மனநிலைக்கு நாயகன் முன்னேறி, ஒருவருக்கும் கேட்காதபடி, உன்மத்தமாய் ஒன்று வேண்டி நிற்க,

“நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா” எனப் பகிரங்கப்படுத்திவிடும் குரல் வாணிக்கன்றி தமிழ்த்திரையிசையில் வேறு யாருக்கு இருந்தது?

“அன்பே உனை, ஆராதனை செய்கின்றவள் மனது,

பொன்போன்றது, பூப்போன்றது

எண்ணங்களோ இனிது.

“கண்ணா” என்ற கொஞ்சலுக்கும், “மனது” என்ற மிஞ்சலுக்கும் மிஞ்சியவர் யார்?

“கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்”

ஒருவிதத் திறந்த குரல் வாணியினுடையது. உள்ளுக்குள் பொத்திவைக்கும் காதலோ, ஒருவரும் அறியக்கூடாத காமமோ எல்லா உணர்ச்சிகளுக்கும் அவர் காற்றில் கரையவிட்டது இரகசியமற்ற பளிர் குரலைத்தான். அதிலும் ஓர் லயம் இருந்தது. திறவாத அதரங்களுக்குள் திணறுகிற சொற்களைவிட, இறக்கிவிட்டு, இலகுவாகிவிடுவதிலும் ரசம் இருப்பதை இரசிகர்கள் கண்டுகொண்டார்கள்.

‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் “கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்” என்ற பாடல் இரண்டுமுறை வரும். ஒன்றை திறவாத உதடுகளுடன் ஜானகி பாட, இன்னொன்றை வாய்விட்டுப் பாடியிருப்பார் வாணி. சோகமே இழையோடிய பாடல் அது என்றாலும், வாணியின் குரலில் ஒவ்வொரு சொல்லும் காதில் கணீர் என்று ஒலிக்கும்.

ஒப்பீடாக ஒரு உதாரணம் சொன்னால், நான் சொல்லவருவது இன்னும் தீர்க்கமாய்த் துலங்கும். “அழகு மலராட” “கவிதை கேளுங்கள்” ஒரே பாவத்தைச் சுமந்த இசை ஞானியின் இரண்டு பாடல்கள்.

முன்னதை ஜானகியும், பின்னதை வாணியிம் பாடியிருப்பார்கள். முன்னதில் ஜானகியின் குரல் “ஐயோ இப்படியெல்லாம் வேதனையாய் இருக்கிறதே” எனக் குற்ற உணர்வில் கொந்தளிக்கும். பின்னதில், வாணியின் குரல், “ஆமாம் அப்படித்தான், என்ன செய்யலாம் அதற்கு?” எனக் கூடல் வேட்கையில் கொப்பளிக்கும்.

இப்போது அப்படியே பாடல்களை மாற்றிப்போட்டுக் கற்பனை செய்து பாருங்கள். “அழகு மலராட” வாணி பாடுவதாய் கற்பனை செய்ய முடிகிறது. ஆனால், “கவிதை கேளுங்கள்” ஜானகி பாடுவதாய் கற்பனை செய்ய இயலவில்லை. அதுதான் வாணியின் குரலில் இருக்கிற தனித்துவம்.

இசையமைப்பாளர்களில் இசைஞானியைவிட வாணியை அதிகம் பயன்படுத்திக்கொண்டவர்கள் சங்கர் கணேஷ், சந்திரபோஸ் மற்றும் எம்எஸ்வி. ஆண் பாடகர்களில் ஜெயச்சந்திரன், ஏசுதாஸ், எஸ்பிபி, மலேஷியா வாசுதேவன் ஏன் மனோவோடுகூட “பூவான ஏட்டத்தொட்டு” என ஒரு பாடல் பாடியிருக்கிறார் வாணி.

“சொர்க்கத்தின் திறப்புவிழா” என முதலில் கொஞ்சம் மயங்கினாலும், அடுத்தடுத்த வரிகளில் அடித்தாடி முடிப்பதுதான் வாணியின் ஸ்பெஷல். “அந்தமானைப் பாருங்கள் அழகு”, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்”, “கங்கை, யமுனை” எப்போது கேட்டாலும் கிறங்கடிக்கிற “பூமேலே வீசும் பூங்காற்றே” என ஏசுதாஸ் அவர்களோடு வாணி பாடிய ஒவ்வொரு பாடலும் இறவா வரம் பெற்றவை.

“ஆடிவெள்ளி தெடி உன்னை”, “வசந்தகால நதிகளிலே”, “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” என பாடகர் ஜெயச்சந்திரனிடமிருந்து தத்தித் தத்திவரும் வார்த்தைகளைத் தாவிக் குதிக்கச் செய்துவிடும் வாணியின் திறந்த குரல்.

“ஒரே நாள், உனை நான்”

கொண்டாட்டம், கும்மாளம், கொஞ்சல், கெஞ்சலென பாவங்கள் எதுவானாலும், இரசிகர்களுக்கு வஞ்சனையே இன்றி வாரித்தரும் நம் வள்ளல் பாடும் நிலாவை, நேருக்குநேர் நின்று ஒரு கைப் பார்த்துவிடுவது வாணிக்கே வாய்த்த வரம். “ஆள அசத்தும் மல்லிதான், மல்லிதான்,

தூக்கம் எனக்கு வல்லதான், வல்லதான்” அதைக்கூட சுடக்கு போட்டுச் சொல்கிற தினவுக்குரல் அது.

“மழை விழுந்தது போலே, விழுந்தது கடிதம்,

மலர் மலர்ந்தது போலே, மலர்ந்தது இதயம்.”

“போலே” எனத் தொடங்கும் ராகத்தில் கூடுகிற மென்மை பாடல் முடிகிற வரைக்கும் இழையோடியபடியே இருக்கும். ஆனால், உரத்துச் சொல்லும் தன் ஒப்பிலாப் பாணியை மட்டும் வாணி எந்தச் சந்தத்திலும் கைவிடுவதே இல்லை.

“ஒரே நாள், உனை நான் நிலாவில் பார்த்தது,” எனத் தலைவன் தயங்கித் தயங்கி வாய் திறந்தால், “மழை நீ, நிலம் நான் மயக்கம் என்ன” என பொட்டில் அறைந்து பஞ்சாயத்தை முடித்துவிடுவார் வாணி.

கைபிடித்து நடந்தபடி, காலங்களில் மிதந்தபடி பாடித் திரியும் மெல்லிசைகளிலேயே இப்படித்தான் என்றால், குதித்தெழுந்து, கூத்தாடி, இரசிகர்களை குத்தாட்டம் போடச் செய்கிற பாடல்களில் கேட்கவே வேண்டாம். கேட்போரின் கைப்பற்றி இழுத்து, தன்னோடு ஆட அழைக்கிற லாவகத்தில் லயிக்காதவர் யார்?

“கண்ணனுக்குக் காதலியே ராதாதான்,

கிட்டவந்து கட்டிக்கடி தோதாதான்” தலைவன் மெல்லத் தூண்டில் போட்டால்,

“உச்சி முதல் பாதம் வரை தீண்டாதே,

உணர்ச்சிகளை இரகசியமாய் தூண்டாதே” என தலைவி கொஞ்சமாய்க் கிசுகிசுக்க,

வந்ததே தைரியம் என

“கிடைச்சா நானும்தான் விடுவேனா” வாயெல்லாம் பல்லாய் தலைவன்.

“கேட்டா கேட்டதெல்லாம் தருவேனா” ஓர் இலக்காரச் சிரிப்பில் அத்தனையையும் ஊற்றி மூடிவிடும் தலைவி. எஸ்பிபி வாணி ஜெயராமின் இந்த துள்ளலுக்குக் குத்தாட்டம் போட்டு குறுக்கொடிந்தவர் எத்தனை எத்தனையோ?

“கோயம்புத்தூர் மாப்பிள ரொம்ப வீரியம்,

கூடக்கூட வாரியே, என்ன காரியம்” என மலேசியாவாசுதேவனை  அவர் வாரும் இடத்தில் அப்படியே காதுகளில் கொங்கு மங்கை ஒருத்தியின் குரல் வந்து மோதிச் செல்லும்.

கிள்ளலோ, துள்ளலோ, அத்தனையிலும் ஒழிவு மறைவற்று உரத்துத்தான் பாடுவார் வாணி. அவர் உதட்டுக்குள் முணுமுணுத்த பாடல் ஒன்று உண்டென்றால், அது

“யாரது? சொல்லாமல் நெஞ்சள்ளிப் போறது?”:

சங்கர் கணேஷின் இசையில் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்துக்காக பாடிய ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ பாடல்தான் இரகசியமே தங்காத அவர் குரலில் கொஞ்சமே கொஞ்சம் கிசுகிசு்ப்பைச் சேர்த்த பாடல்.

பொதுவாக, ‘பாலைவனச்சோலை’ படத்தில் வரும்  “மேகமே மேகமே” பாடலைத்தான் சங்கர் கணேஷின் இசையில் வாணி அவர்கள் பாடியதில் மிகச் சிறந்த பாடலாகப் பெரும்பாலான ரசிகர்கள் தெரிந்துகொள்வதுண்டு. ஆனால், எனக்குள் எப்போதும் வாணி அவர்களின் நினைவாய் அமரத்துவம் கொண்டது “யாரது” பாடல்தான். காரணம், அந்த ஒரே ஒரு பாடலில் மட்டும்தான்,

“ஆளானதால் வந்த தொல்லை,

காதல் முல்லை, கண்ணோடு தூக்கமில்லை.” என வாணி, முதல்முறையாக இரசிகர்களின் காதோரம் கிசுகிசுத்திருப்பார்.

“மல்லிகை என் மன்னன் மயங்கும்” ஒரு எளிய இல்லத்தரசியின் குரல்.

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு” மண்வாசம் கொண்ட ஒரு சாப்பாட்டுப் பிரேமியின் குரல். இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்டுப் பாருங்கள். நாயகிகளின் பாத்திரப் படைப்பைத் தன் குரலில் மிகத் துல்லியமாகப் படியெடுக்கிற வாணியின் நிபுணத்துவம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். அவர் தேகம் தேயலாம்,

இப்படி எல்லா உணர்ச்சிகளிலும் பொருந்திப்போன வாணியின் குரல், அழுதுகொண்டே பாடுகிற பாடல்களில் மட்டும் அத்தனை லயிக்கவே இல்லை. “மேகமே மேகமே” பாடலில்கூட அழும் சந்தர்ப்பம் வந்தும் அவர் அழாமல் பாடிச் சென்றதே அவரின் வெற்றி.

“பூமி இங்கே சுற்றும் மட்டும்,

பாட வந்தேன் என்ன நட்டம்” எனக் கேட்டவரின் பூத உடலுக்குத்தான் மரணம். பூமாரிப் பொழியும் குரலுக்கல்ல.

***தொடர்புக்கு: koothan@thodugai.in

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *