*மரணத்தை வெல்லும் குழந்தைகள்*
“ பிறந்தபோது உங்களது எடை எவ்வளவு இருந்தது? ஞாபகம் இருக்கிறதா? சரி. ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்போது சாதாரணமாக எவ்வளவு எடை இருக்கும்? பொதுவாக 2.5 முதல் 3.5 கிலோகிராம் வரை. ஆனால், சில சமயங்களில் மிகக் குறைந்த எடையுடனும் குழந்தைகள் பிறப்பது உண்டு. உலகிலேயே மிகக் குறைவான உடலெடையுடன் பிறந்து மரணத்தை வென்ற ஆண்குழந்தை என்ற சாதனையைப் புரிந்தது ரெய்ஸ்க்கே என்ற குழந்தைதான். ஜப்பான் டோக்கியோவில் பிறந்தது இந்தக் குழந்தை. இது பிறந்தபோது அதன் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 258 கிராம்தான். அதாவது கால் கிலோவிற்கும் கொஞ்சம் கூட. ஒரு சாதாரண ஆப்பிளின் எடைதான் இது. தாய்க்கு இரத்த அழுத்தம் அதிகமானதால் கருவுற்றிருந்தபோது 24 வாரம் ஆன சமயத்தில் குழந்தையை அறுவைசிகிச்சை செய்து வெளியில் எடுக்கவேண்டியதாயிற்று. அப்போது குழந்தையின் உடல் நீளம் வெறும் 22 செ.மீ. ஏழு மாதம் கழித்து 13 மடங்கு உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமான குழந்தையாக மாறியது. இவ்வாறு மிகவும் குறைவான உடலெடையோடு பிறந்து உலகில் வாழும் சிறுவன் என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றிருக்கிறது. அதுவரைக்கும் 268 கிராம் மட்டுமே உடல் எடையுடன் பிறந்த ஒரு ஜப்பான் ஆண் குழந்தையின் பெயரில்தான் இந்த சாதனை இருந்தது.
252 கிராம் எடையுடன் 2015ல் ஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தைதான் உலகில் மிகக் குறைவான உடலெடையுடன் பிறந்த பெண் குழந்தை. முழுவளர்ச்சி அடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்குத்தான் மரணத்தை வெல்லும் ஆற்றல் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிறக்கும்போது குழந்தைகளுடைய உடலெடை அவர்களின் மூளை மற்றும் புத்திக்கூர்மையை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் கோளாறுகள் அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றும் அறியப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது தாய்மார்களின் உடல்நிலை மற்றும் மனநிலையின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பது இதன் மூலம் புரிகிறது அல்லவா? பத்மவியூகத்தை உருவாக்குவதற்கு அபிமன்யூ கற்றுக்கொண்டது கருவுற்றிருக்கும்போதுதான் என்று மகாபாரதம் சொல்கிறது. தாயின் கருவுற்றிருக்கும் காலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றிய அறிவு புராதனகாலம் முதலே நம் முன்னோர்களிடையில் இருந்துள்ளது”.
*கதை சொல்லும் சிலைகள்*
“ சிலைகள் பல சமயங்களிலும் பெரும் விவாதங்களுக்குக் காரணமாவது உண்டு. சிலர் இவ்வாறு சிலைகளை உருவாக்குவதற்காகப் பெரும் பணத்தை செலவிடுவது வீணானது என்று நினைக்கும்போது, பலருக்கும் அது மதிப்புமரியாதையின் ஒரு அடையாளச்சின்னமாகவே உள்ளது. ஆனால், சிலைகள் குறித்த சண்டைகள் நம் நாட்டில் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் இந்த நிலையே உள்ளது.
உலகைத் தன் காலடியில் கொண்டுவரவேண்டும் என்ற குறிக்கோளுடன் புறப்பட்ட அலெக்சான்டருடைய சிலை இவ்வாறு பிரச்சனைகளில் 28 ஆண்டுகள் சிக்கித்தவித்தது தெரியுமா? கடைசியாக 2019 பிப்ரவரியில்தான் ஏதென்சில் அந்த சக்கரவர்த்தியின் சிலை கம்பீரமாகக் காட்சியளிக்கத் தொடங்கியது. உலகைக் கைப்பற்ற குதிரையின் மீது பாய்ந்து ஏறும் இளைஞனான அலெக்சான்டரின் 3.5 மீட்டர் உயரம் உடைய வெண்கலச்சிலைதான் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டது. 1991ல் சிலையை நிறுவ ஏதென்ஸ் அதிகாரிகள் முயற்சித்தார்கள். என்றாலும், யுகோஸ்லாவியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்த மாசிடோனியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து சிலை விஷயம் கிடப்பில் போடப்பட்டது. அலெக்சான்டரின் பாரம்பரியம் மாசிடோனியாவுக்கு மட்டுமே சொந்தம் என்று அந்த நாடு வாதாடியது. கடைசியாக கிரேக்க அரசுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இருநாடுகளிலும் தேசீய விவாதங்கள் நடைபெற்றன. தீர்வு காணப்பட்டது. ஏதென்ஸ் நகரத்தின் மத்தியில் அலெக்சான்டருடைய சிலை நிறுவப்பட்டது.
குதிரையின் மீது இருக்கும் தலைவர்களின் சிலைகளுக்கு சில சிறப்புகள் உண்டு. தலைவர் போரில் மரணம் அடைந்துவிட்டாரா இல்லை போரில் வெற்றி பெற்றாரா இல்லை காயம் பட்டவரா என்ற விவரங்களை இத்தகைய சிலைகள் உங்களுக்கு எடுத்துச்சொல்லும். ஆனால், உங்களுக்கு இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். குதிரையின் இரண்டு முன்னங்கால்களும் அந்தரத்தில் உயரமாகத் தூக்கிக்கொண்டிருக்கும் நிலையில் சிலை இருந்தால், குதிரையின் மீது உள்ளவர் மரணம் அடைந்தவர் என்று பொருள். ஒரு கால் மட்டுமே தூக்கிக்கொண்டிருக்கும் குதிரை என்றால், குதிரையின் மீது இருக்கும் நபர் போரில் காயம்பட்டவர் என்று பொருள். குதிரையின் நான்கு கால்களும் தரையில் ஊன்றியநிலையில் இருந்தால், குதிரையின் மீது அமர்ந்திருக்கின்ற நபர் போரில் மரணம் அடையவில்லை என்று பொருள். சிலைகளும் கதை சொல்லும் என்பது இப்போது புரிகிறது அல்லவா?”.
*யானைகளுக்காக ஒரு நந்தவனம்*
“நில வாழ்விகளில் மிகப் பெரிய விலங்கான யானைகளுக்காக கேரளாவில் தனியாக ஒரு நந்தவனம் உருவாகிறது. 600 ஏக்கர் பரப்பில் இது அமைக்கப்படுகிறது. காட்டு யானைகளுக்காக உருவாக்கப்படும் பூங்கா இது. காட்டில் வாழும் யானைகள் அவற்றின் இயல்பான சூழ்நிலையில் வாழ வசதி செய்து கொடுக்கப்படுவதன் மூலம் அவை ஊருக்குள் புகுவதைத் தடுப்பதுதான் இதன் நோக்கம். கேரள வனத்துறை இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது. கேரளாவில் உள்ள யானை இறங்கன், சின்ன கேனால் ஆகிய பகுதிகள் உட்படும் வனப்பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகள் தாக்கி பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டதே இத்தகைய திட்டம் நிறைவேற்றப்பட காரணம் ஆகும்.
கேரளாவில் வனவிலங்குகளுக்கான முதல் சரணாலயம் தேக்கடியில் உள்ளது. திருவிதாங்கூர் அரசராக இருந்த சித்ரா திருநாள் காலத்தில் இது உருவாக்கப்பட்டது. இன்றும் கேரளாவில் மிகப் பெரிய வனவிலங்குகளுக்கான தேசீயப்பூங்கா இதுவே. 1895ல் முல்லைப்பெரியாறு அணைக்கட்டு கட்டப்பட்டு 26 சதுர கி மீ பரப்பளவு உள்ள தடாகம் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள வனப்பகுதி 1899ல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதில் 600 சதுர கி மீ வனப்பகுதி 1934ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 1950ல் இதன் மூலம் இப்பகுதியின் பரப்பு 777 சதுர கி.மீ ஆக அதிகரித்தது. 1978ல் இது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் தமிழ்நாட்டின் எல்லையில் மங்களாதேவி முதல் சபரிமலை வரை பரந்து விரிந்து கிடக்கும் வனப்பகுதியே இந்தப் புலிகள் சரணாலயம். இந்தியாவில் பத்தாவது புலிகள் சரணாலயம் இது.
கேரளாவின் மாநில விலங்கு யானை. இந்தியாவின் பாரம்பரிய விலங்கும் இதுதான். கேரளா தவிர ஜார்கன்டும், கர்நாடகாவும் யானையை அவர்களுடைய மாநில விலங்காக அங்கீகரித்துள்ளனர். கேரளாவில் 6000க்கும் அதிகமான காட்டு யானைகள் வாழ்கின்றன. 2010 அக்டோபர் 22ல் இந்தியா யானையை நாட்டின் பாரம்பரிய விலங்காக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. என்றாலும் காட்டில் வாழும் யானைகளுக்காக இடுக்கி மாவட்டத்தில் புதிதாக ஒரு பூங்கா உருவாவது யானை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியே”.
***தொடர்புக்கு: nrvikram19@gmail.com
Be the first to leave a comment