நாட்கள் நகர்கின்றன,
நானும் நகர்வதாய் மூச்சிறைப்பு சொல்கிறது.
இரவுக்குத் தூங்க மூஞ்சியாய்,
பகலுக்குக் கடமை வாதியாய்,
இருவருக்கும் இரு முகம் காட்டிக் காட்டி,
என் முகம் தொலைத்த பிரக்ஞையே இல்லாமல்,
மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும்படி
நடக்கிறேன், ஓடுகிறேன்.
காலத்தைப் போலவே,
கைத்தடியின் நுனியும் தேய்ந்து,
பிணைக்கும் கயிற்றின்
பிரிகள் தளர்ந்து,
சாலையோர நடையொன்றில்,
ஐந்தில் நான்கு
அப்படியே படுத்துக்கொள்ள,
அவசர அவசரமாய் பொறுக்கிப்
பைக்குள் போடுகையில்,
மேலதிகக் கைவசம் ஒன்று தென்பட்டு அதன்
மேல்முடி இழுத்துத்
தூக்கம் கலைத்தேன்.
விரித்தேன், விரிந்தன சாலைகள்.
இடது வலது என மாறி மாறி அது
மண்மகளை முத்தமிட, மோதிக்கொள்ள
வழி செய்து வழி செய்து,
என் வழி காண வேண்டியிருக்கிறது.
டிக் டிக் மோதல்கள்
கற்கள் பாவிய மேடுகள்,
சத்தமில்லா மென் முத்தங்கள்
மணல் பரவிய சமதளங்கள்.
பிறிதொன்றின் முத்தச் சம்பாசனைக்குப்
பெயரிடும் பிறவி எனக்கு!
எல்லாம் என் கட்டுக்குள்தான் என்று
எப்படிச் சொல்வது பெருமையாய்?
குழிந்த பள்ளவாய்க்குள்
அவ்வப்போது சிக்கி,
என் தொப்பையில் குத்திட்டு
மையத்தில் நிலைக்கிறது கோல்,
மறுகனமே நின்றுவிடுகிறது பயணம்.
விடுவித்து,
வேகநடை தரித்து,
இடம் சேர்ந்த பொழுது
இனிய உறக்கம் பிடிக்காமல்,
அது சுருண்டுகொள்ள மறுக்கிறது.
பள்ளத்தின் நினைவுத்துகள்கள்
பாடாய்ப் படுத்த
ஒடுங்க மறுத்து,
உருள்வதும்
திருகுபடுவதுமாய்
வாதைகளை வாஞ்சையுடன்
வாங்கிக்கொள்கிறது அது.
இப்படியாய்,
மீண்டும் ஒரு பயணம்;
மீண்டும் ஒரு சாலை;
தேய்கிறது நுனி,
நைகிறது பிரி,
மீண்டும் ஒரு கோல்;
மீண்டும் அதே முத்தம்;
மீள விரும்பாப் பள்ளங்கள்,
மீண்டும் மீண்டுமென
மிஞ்சுகின்றன நினைவுத்துகள்கள்.
***ஒலிமயக்கூத்தன்
தொடர்புக்கு: savaalmurasu@gmail.com
Be the first to leave a comment