அன்பு நண்பர்களே!
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் கட்டணமில்லா இணையவழி வகுப்புகளில் பயின்ற 32 பார்வையற்றவர்களில், 17 பார்வையற்றவர்கள் குரூப் 2 முதன்மைத் (mains) தேர்வுக்குத் தகுதிபெற்றிருக்கிறார்கள். பிரதிபலன் பாராத பல தன்னார்வலர்களின் முழு ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சிறிய வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
இந்தத் தற்காளிக வெற்றியை நிரந்தரமாக்கும் நோக்கத்தோடு, தற்போது முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியிருக்கிறோம்.
சென்னை முதல் குமரி வரை பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஒருவர் இருவர் என கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பல பார்வையற்ற போட்டித்தேர்வர்கள் எங்கள் மையத்தில் இணைந்திருக்கிறார்கள்.
முதல்நிலைத் தேர்வு போலல்லாமல், முதன்மைத் தேர்வு விரிவான விடைகள் (descriptive type) வகையைச் சார்ந்தது. எனவே, கற்பித்தல் வகுப்புகள் நடத்துவதைக் காட்டிலும், தேர்வு நுட்பங்கள் குறித்த பயிற்சியே முக்கியமானது.
கொடுக்கப்பட்ட அவகாசத்தில், தாங்கள் இதுவரை கற்றனவற்றைச் சீரிய முறையில் தொகுத்துக்கொண்டு சிறப்பாகத் தேர்வெழுதப் பயிற்சியளிப்பதே எதிர்வரும் முதன்மைத் தேர்வில் போட்டித்தேர்வர்களின் வெற்றியை மேலும் துல்லியப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
ஆகவே, நேரடி மாதிரி முதன்மைத் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே வாரந்தோறும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். தமிழகம் முழுக்க நிறைந்திருக்கிற அன்புள்ளம் கொண்ட தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், சமூகநலன் சார்ந்து இயங்கும் குழுக்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என முகம் அறியாப் பொதுச்சமூகத்தின் ஒவ்வொருவரையும் நம்பிக்கையோடு எதிர்பார்த்தே, இந்த முக்கியமானதும், ஒருங்கிணைப்பில் மிகப்பெரிய சவாலைத் தரவல்லதுமான செயலை முன்னெடுக்கவிருக்கிறோம்.
வாரத்தில் ஒருமுறை, உங்கள் பொன்னான நேரத்திலிருந்து 4 மணி நேரத்தை மட்டும் எங்களுக்காக ஒதுக்கி, பதிலி எழுத்தராகத் தேர்வெழுத விரும்புபவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். எதுவும் செய்ய இயலாதவர்கள், இந்தப் பதிவினைப் பெருமளவில் பிறருக்குசென்றுசேரும் வகையில் பகிர்ந்தும் உதவலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
செல்வி. U. சித்ரா: 9655013030 மற்றும்
திருமதி. கண்மணி: 7339538019
உணவு, உடை, கொடை போன்றவை உத்தமமான உலகியல் அறங்கள். உன்னதமான அறம் ஒன்று இருக்கிறது. உள்ளொலி சார்ந்த, ஒருபோதும் குறைவுபடாத அது விழியறம் எனப்படுகிறது.
விழிகளால் விளக்கேற்றுங்கள், வெளிச்சம் பரவட்டும்.
***U. சித்ரா,
முதன்மை ஒருங்கிணைப்பாளர்,
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
தொடர்புடைய பதிவு
Be the first to leave a comment