கேரள இயற்பியலும் தமிழ்நாட்டு இயல்பியலும்

கேரள இயற்பியலும் தமிழ்நாட்டு இயல்பியலும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
செய்தியைத் தாங்கிய தி இந்து ஆங்கில மின்னிதழ் பக்கம்
செய்தியைத் தாங்கிய தி இந்து ஆங்கில மின்னிதழ் பக்கம்

கேரள பல்கலைக்கழகம் முழுப் பார்வையற்ற ஒருவருக்கு இளங்கலை இயற்பியல் (B.SC Physics) படிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அத்தோடு, இயற்பியல் தொடர்பான புத்தகங்கள் அவருக்குப் பிரெயிலில் கிடைப்பதையும், செய்முறைத் தேர்வுகளில் அவர் தடையின்றிப் பங்கேற்க ஏதுவாக உதவியாளர் நியமிக்கப்படுவதையிம் உறுதி செய்திருக்கிறது. கூடுதலாக, மூன்றாண்டுகளில் பொது மாணவர்கள் மேற்கொள்ளும் செய்முறைகளில் (practicals) மூன்றில் ஒரு பங்கு அவர் செய்தால் போதும் எனவும் வரையறுத்திருக்கிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி என்றால், கேரளா எப்போதுமே தமிழகத்துக்கு முன்னோடிதான். அதிலும் உடல்க்குறைபாடு உடையவர்கள் குறித்த பார்வைகளில் அவர்களுக்கு இருப்பது மாறுபட்ட புதிய பார்வையும் ஒருவித வேகநடையும்தான்.

தமிழகத்தைப் பொருத்தவரை பார்வையற்றோருக்கான கல்வியே நசிவு நோக்கிச் சென்றுகொண்டிருக்க, அறிவியல் கல்வி என்று கனவு காண்பதெல்லாம் ஒருவகையில் மேட்டிமை கலந்த அயோக்கியத்தனம்தான். பொதுப்பள்ளிகளில் அறிவியல் மனப்பான்மை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சிறப்புக்கல்வி குறித்த மனப்பான்மையே இங்கு மோசமாய் கிடக்கிறது.

தமிழக அரசால் நடத்தப்படும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகள் ஒன்றில்கூட அறிவியல் ஆசிரியர்களே இல்லை. இதைவிட மோசமான உண்மை சொல்லட்டுமா? ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புப் படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு அறிவியல் புத்தகமே பிரெயிலில் அச்சடிக்கப்படுவதில்லை அல்லது அது சிறப்புப்பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுவதில்லை. கணிதப் பாடத்திற்கான பிரெயில் புத்தகம் எந்த வகுப்புக்கும் நான் பார்த்ததில்லை. இதையெல்லாம் யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? அப்படியே கேட்டாலும் அதை உள்வாங்கிக்கொள்ளும் நிலையிலா இருக்கிறார்கள் அதிகார பீடங்கள்? அவர்களுக்கு எதுவுமே டாக்குமெண்டேஷன், எல்லாமே ஃபார்மாலிட்டீஸ் அவ்வளவுதான். குளிரூட்டப்பட்ட அறையின் ஒரு மூலையில் கிடக்கும் அவர்களின் மேசையை நிறைவான புள்ளிவிவரங்களுடன் கூடிய  அறிக்கைகள் ஆக்கிரமித்தால் போதும். களத்தில் எவன் வாழ்ந்தால் என்ன செத்தால் அவர்களுக்கு என்ன?

நாங்கள் படித்த 80 மற்றும் 90களில் பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் அரசால் பிரெயில் அச்சகம் ஒன்று வெற்றிகரமாய் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்துதான் மாநிலத்தின் ஒட்டுமொத்த சிறப்புப்பள்ளிகளுக்கும்் பிரெயில் புத்தகங்கள் உடனுக்குடன் அச்சடிக்கப்பட்டு இலவசமாய் வினியோகிக்கப்பட்டன. பிரெயில் புள்ளிகளைத் தாங்கிய திடகாத்திரமான தாள்கள், கெட்டி அட்டைவைத்து பைண்டிங் செய்யப்பட்ட விதம் என அவற்றின் அத்தனை அம்சங்களும் உயர் தரமானவை.

இது தவிர, அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கான பிரெயில் புத்தகங்கள் கோவை இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவிலிருந்து அச்சடிக்கப்பட்டு எல்லா சிறப்புப்பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டன. வடிவமைப்பில் அவை பொதுப்புத்தகங்களை ஒத்திருந்தன. அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான பொதுப்புத்தகங்களில் இடம்பெறும் விளக்கப்படங்கள் அனைத்துமே கைகளுக்கு வழவழப்பாகத் தென்படும் பிரெயிலான் தாளில் (Braillon sheet) மேடுறுத்தப்பட்ட வரைபடங்களாக தயாரிக்கப்பட்டு, ஆய்வுக் குழாய்களாய், கூம்புக் குடுவைகளாய், வரைதாள்களாய் (graph sheets), வடிவியல் கட்டங்களாய் எமது கைகளில் தவழ்ந்தன. இராமகிருஷ்ணா பிரெயில் புத்தகத்தில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? பிரெயில் புத்தகத்தின் பக்க எண்களோடு அச்சுப் புத்தகத்தின் பக்க எண்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒரு பார்வையற்ற மாணவர் தன் பார்வையுள்ள சக மாணவரோடு இணைந்து படிக்கும்போது அச்சுப் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தன் சக  பார்வையுள்ள மாணவரிடமும் எடுத்துச் சொல்லிக் கூடிப்படித்தலை எளிமையானதாகவும் சம வாய்ப்புள்ள களமாகவும் மாற்ற முடியும். இப்போது அதே போன்ற மேடுறுத்தப்பட்ட விளக்கப்படங்களை டில்லியிலுள்ள

Raised Line Foundation (RLF)

தயாரித்து வருகிறது.

விஷன் எய்ட் (vision aid)

போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்் அதைப் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளில் இலவசமாக வினியோகித்து வருகிறார்கள். ஆனால், எத்தனை சிறப்புப்பள்ளிகளில் அதை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை, அதாவது அதைப் பயன்படுத்தும் நுட்பம் எத்தனை ஆசிரியர்களுக்குக் கைவந்திருக்கிறது என்பதும் புரியவில்லை.

சம வாய்ப்பு, சம பங்கேற்பை உறுதி செய்கிறது நடுவண் அரசின் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016. ஆனால், தமிழ்நாடு பாடநூல்க்கழகப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடிக்கப் பணிக்கப்பட்டிருக்கும் அந்த நடுவண் அரசு நிறுவனத்தால் பார்வையற்றமாணவர்களுக்கு வழங்கப்படுவதெல்லாம்  மிகமிகமிகத் தாமதமான வாய்ப்பு, மெத்தனமான பங்கேற்பு. முதல்ப்பருவத்திற்கான பிரெயில் பாடப்  புத்தகங்கள் பருவ முடிவில் கிடைக்கலாம் அல்லது அடுத்த பருவத் தொடக்கத்தில் கிடைக்கும். அதுவும் கணிதம் அறிவியல் நீங்கலாக.

கணிதப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்து வழங்காத இந்த நிறுவனம்தான், அவ்வப்போது பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற பொருண்மையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தும். அதிலும் எவ்வித சொரணையே இல்லாமல் பங்கேற்பார்கள் பல சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள், குறிப்பாக அறச் சீற்றமும் தார்மீகக் கோபமும் அற்ற  மனித இயந்திரங்களான பல பார்வையற்றவர்கள்.

தமிழகச் சிறப்புப் பள்ளிகளில் நிலைமை இப்படியென்றால், பொதுப்பள்ளிகளில் பார்வையற்றோருக்கான கல்வி படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கேட்டல், கேட்டதை அப்படியே ஒப்புவித்தல்; அதாவது உண்டல், வாந்தியெடுத்தல் என்ற ரீதியில்தான் பார்வையற்றோருக்கான கல்வி அங்கே பிழைத்திருக்கிறது. பிரெயில் எழுதுதல், வாசித்தல் எல்லாம் பெரும்பாலும் இல்லை. அறிவியல் கற்பது பற்றியெல்லாம் பிறகு பேசலாம். பார்வையற்றவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத்திற்கான தேர்விலிருந்து விலக்கு பெறலாம் என்கிற வசதியை அரசே ஏற்படுத்தித் தந்திருப்பதை என்னவென்று சொல்ல. அடடா! என்னே அரசின் கருணைப்பார்வை என்று துதிபாடிகளின் வரிசையில் அமர்ந்து தூபமிடலாம். இந்த பாழ்மனம் கேட்பதே இல்லை என்ன செய்வது?

கூரை மாற்றிக் காரை எனப் பக்கத்து வீடு பொழிவடைந்து கொண்டே செல்கிறது. என் வீட்டிலோ எங்கு தொட்டாலும் காரை பெயர்ந்து கொட்டுகிறது. விரிசல்களும் அதிகம், கூடவே விரியன்களும். ஒரு நாளில் எல்லாம் பொலபொலவென பொடித்து நொறுங்கி நாங்கள் புதை குழியில் அமிழும் தருணம் அளறி அடித்துக்கொண்டு வந்தாலும் வரலாம் அதிகார பீடங்கள். அதுவரையில் சிதைந்துகொண்டிருக்கும் சிறப்புக்கல்வியின் ஆன்மாவுக்காய் அழுதுகொண்டும், மாரில் அடித்துக்கொண்டிருப்பதையும் தவிர வேறு வழியே இல்லை. இதுதான் இன்றைய தமிழகப் பார்வையற்றோர் கல்வியில் நீங்கள் அறிய வேண்டிய இயல்பியல். மற்றபடி இயற்பியலுக்கெல்லாம்  நிங்கள் அவ்விடே செல்லுக.

***சகா

தொடர்புக்கு: anbullasaga@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *