I. சிறப்புக்கல்வி (Special Education for the Visually Impaired)
II. உள்ளடங்கிய கல்வி (Inclusive Education)
III. உயர்கல்வி (Higher Education)
IV. பார்வைக் குறையுடையோருக்கென விளையாட்டு மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள்
VI. பரிந்துரைகள் உருவாக்கத்தில் பங்கேற்றோர்
முன்னுரை
தமிழ் நாட்டில் சிறப்பானதொரு மாநில கல்விக்கொள்கையினை வடிவமைத்துச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தமிழ் நாடு அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் திரு முருகேசன் அவர்கள் தலைமையில் தமிழ் நாடு மாநில கல்விக்கொள்கை வடிவமைப்புக்கான குழுவினை அமைத்துள்ளது. சமூகநீதி மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு என்னும் முதன்மை நோக்கங்களைக்கொண்டு உருவாக்கப்படவிருக்கும் இக்கல்விக்கொள்கை விளிம்புநிலை மக்களின் கல்வி வேட்கையை முறையாகப் பூர்த்திசெய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விளிம்புநிலை மக்களுள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக அவர்களுள் ஆக ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள பார்வையற்றோர் இக்கல்விக்கொள்கையின் மூலம் முறையான, சமமான, சிறப்பான கல்வியினை பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, கல்வி தொடர்பான இணைச் செயல்பாடுகள், தொடர்கல்வி என எல்லாக் கட்டங்களிலும் பெற்று, தமது வாழ்வில் ஏற்றம் பெருவதோடு, இச்சமூகத்திற்கும் நாட்டிற்கும் அளப்பரிய பங்களிப்புகளை வழங்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அதே நம்பிக்கையோடு வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்விக்கொள்கையில் இடம்பெறவேண்டிய பார்வையற்றோர் கல்வி தொடர்பான பரிந்துரைகளை வழங்குகிறோம். பார்வையற்றோர் கல்வி குறித்த பரிந்துரைகளை பார்வையற்றோருக்கான சிறப்பாசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், தன்னார்வளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்று, அவற்றை ஆழமான விவாதங்களுக்கு உட்படுத்தி, செம்மைப்படுத்தப்பட்ட பரிந்துரைகளாக தங்களின் கனிவான பரிசீலனைக்குக் கையளிக்கிறோம்.
எங்களது பரிந்துரைகள்
(1) பார்வையற்றோருக்கான சிறப்புக்கல்வி (Special education for the visually impaired),
(2) பார்வையற்றோருக்கான உள்ளடங்கிய கல்வி (Inclusive education for the visually impaired),
(3) பார்வையற்றோரின் உயர்கல்வி (Higher education of the visually impaired),
(4) பார்வையற்றோருக்கான கல்வி இணைச் செயல்பாடுகள் (cocurricular and extracurricular activities for the visually impaired)
ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதியாக பார்வையற்றோரின் கல்வி மேம்பாட்டிற்கான எங்களது பொதுவான பரிந்துரைகளும் தங்களின் மேலான பார்வைக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
I. சிறப்புக்கல்வி (Special Education for the Visually Impaired)
மனிதன் பெறும் அறிவில் 85 விழுக்காடு பார்வைப்புலத்தையே சார்ந்திருக்கிறது. அவ்வாறிருக்க, ஒரு பார்வைக்குறைபாடு உடைய குழந்தையின் இழந்துவிட்ட 85 விழுக்காடு அறிவினைப் பிற புலன்களைப் பயன்படுத்தி ஈடு செய்வது குறித்துச் சிந்திப்பதே பார்வைக்குறைபாடு உடையோருக்கான கல்வியின் அடிப்படை நோக்கமாக அமைதல் வேண்டும். தொடுதல் உள்ளிட்ட பிற புலன்களைத் தூண்டுதல் மூலமாக, பொதுக்கல்வித் திட்டத்தில் ஒரு குழந்தை பெறும் கற்றலின் நான்கு அடிப்படைத் திறன்களை ஒரு பார்வைக் குறைபாடு உடைய குழந்தையும் எந்தவிதப் பின்னடைவுமின்றி சம காலகட்டத்தில் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை வலியுறுத்தும் சில பரிந்துரைகள்:
1. பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகளின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சிக்கு தொடக்க நிலைகளில் அவர்கள் பெறும் சிறப்புக்கல்வியே அடிப்படையாக அமையும் என்பதால், பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகளுக்கு 1 முதல் 8 வகுப்புவரை பிரெயில் உள்ளிட்ட அவர்களுக்கான பிரத்யேக முறைகளை உள்ளடக்கிய முறையான சிறப்புக்கல்வி வழங்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்.
2. பார்வைக்குறைபாடு உடையோருக்கான விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளி மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
3. ஒவ்வொரு மாவட்டத்திலும் வசிக்கும் பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் இப்பள்ளிகளில் உரிய வயதில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
4. குறைப்பார்வை உடைய குழந்தைகள் (Low Vision) உள்ளடங்கிய கல்வி முறையிலும், முழுப் பார்வையிழப்பைக்கொண்ட குழந்தைகள் (Totally Blind) சிறப்புப்பள்ளிகளிலும் சேர்க்கப்படுவதே பொருத்தமானது என்ற தவறான கண்ணோட்டம் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என சமூகத்தின் பல தரப்பினரிடமும் விரவிக் காணப்படுகிறது. நரம்பு தளர்ச்சி, விழித்திரை பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைப்பார்வையுடைய குழந்தைகளுக்குக் காலப்போக்கில் பார்வையிழப்பு ஏற்பட்டு அவர்கள் முழுப்பார்வையற்றவர்களாக மாறும் சாத்தியம் அதிகம் என்பதால், பார்வைக்குறைபாடு உடைய அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்க நிலைகளில் சிறப்புக்கல்வி வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
5. பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்களான பிரெயில் பலகை, பிரெயில் புத்தகங்கள், கணிதம் கற்க உதவும் டைலர் ஃபிரேம்கள் என அனைத்தும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசின் செலவில் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
6. தொழில்நுட்பமே சமவாய்ப்பையும் போட்டிகளைச் சந்திக்கத் தேவையான சமமான கலத்தையும் வழங்கும் என்பதால், பொதுப்பள்ளிகள் போல் அல்லாமல், பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் தட்டச்சுப் பயிற்சியுடன் கூடிய கணினிக்கல்வி மூன்றாம் வகுப்பிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.
7. பார்வைக்குறைபாடு உடைய குழந்தையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பிரெயில் மற்றும் கணினிப் பயன்பாடு சார்ந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
8. பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் பாடம் சார் கற்றல் முறைகளுக்கு இணையாக, அன்றாட வாழ்க்கைத்திறன் (Daily Living Skills) பயிற்சிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
9. பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் ஊன்றுகோல் பயன்படுத்தி நடமாடுதல் (mobility and orientation), நேர்த்தியான உடல்மொழி (body language) உள்ளிட்ட ஆளுமைசார் பயிற்சிகளும் (Personality Development Training) வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
10. பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகள் அனைவரும் எளிதாக அணுகத்தக்க வகையில், நகரின் மையத்தில் அமைவது கட்டாயம்.
11. பள்ளி வளாகமானது,பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகளின் பயன்பாட்டுக்கு உகந்ததாக அமைவதை உறுதி செய்ய வேண்டும்.
12. மேடுறுத்தப்பட்ட தரைகள், வண்ண வேறுபாடுகளைக்கொண்ட உள் அமைப்புகள், ஆங்காங்கே பிரெயில் குறியீடுகள் என பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகள் எளிதில் அணுகக்கூடியதாகவும், தடையற்ற சூழலை உள்ளடக்கியதாகவும் (barrier free) வடிவமைக்கப்பட வேண்டும்.
13. கணிதம், அறிவியல், வரலாறு போன்ற பாடங்களைக் கற்பதற்கான பிரெயில் ஜியோமிட்ரி, மேடுறுத்தப்பட்ட வரைபடங்கள் (embossed chats) முப்பரிமாண மாதிரிகள் (3D models) போன்ற துணைக்கருவிகளை உள்ளடக்கிய பிரத்யேக ஆதார அறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பது கட்டாயம். அரசின் செலவில் அந்த அறைகள் ஏற்படுத்தப்படுவதோடு, அவற்றிற்கான கற்றல் உபகரணங்கள் தருவிக்கப்பட்டு, அங்கே பராமரிக்கப்பட வேண்டும்.
14. மேல்நிலை வகுப்புகளைக்கொண்ட சிறப்புப்பள்ளிகளில் பல்வேறு தெரிவுகளை உள்ளடக்கிய அதேசமயம், பார்வைக்குறைபாடு உடைய மாணவர்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் இருப்பது அவசியம்.
15. பாடப்புத்தகங்கள் கடந்து மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில், பிரெயில், மின் மற்றும் ஒலிவடிவிலான புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒவ்வொரு சிறப்புப்பள்ளியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
16. பார்வைக்குறைபாடு உடையோருக்காக சிறப்பான முறையில் தகவமைக்கப்பட்ட (adapted) விளையாட்டுகளைக் கற்பிக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் தகவமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
17. பார்வைக்குறைபாடு உடையோருக்கான அனைத்து சிறப்புப்பள்ளிகளிலும் இசை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், கணினிப் பயிற்றுனர்ப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அவை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
18. பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் திரைவாசிப்பான் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற பார்வையற்றவர்களுக்குக் கணினிப் பயிற்றுனர்ப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
19. பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் தற்போது கடைபிடிக்கப்படுகிற 1’8 என்கிற ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தில் திருத்தம் செய்து, நடுநிலைக்கல்வி வரை ஆசிரியர் மாணவர் விகிதம் 1’5 என மாற்றப்படவேண்டும்.
20. பார்வைக்குறைபாடு உடையோருக்குக் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் பட்டய மற்றும் இளங்கலை சிறப்புக் கல்வியியல் பயிற்சிகள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வையற்ற கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களைக்கொண்டு அதற்கான கலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
21. பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு, சிறப்புக்கல்விக்கான இயக்குநரகம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.
II. உள்ளடங்கிய கல்வி (Inclusive Education)
ஊனத்தைக் காரணமாகக் காட்டி எவருக்கும் கல்வ்இ மறுக்கப்படக்கூடாது, பொதுச் சமூகத்தினரிடமிருந்து மாற்றுத்திறனாளிகளை விளக்கிவைத்தல் தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுக் கற்பிக்கும் முறை பரவலாக்கப்பட்டுள்ளது. எனினும், உள்ளடங்கிய கல்விமுறையில் பார்வையற்ற குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதை இடைநிலைக் கல்வி வரையிலாவது நிறுத்தி, சிறப்புக்கல்வி மட்டுமே வழங்கப்படவேண்டும் என்பதை பார்வையற்ற சமூகத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக முன்வைக்கிறோம். இந்த முறையின் அமலாக்கத்தில் இருக்கிற குறைபாடுகள் பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே உள்ளடங்கிய கல்வித் திட்டத்தை முறையாக அமல்ப்படுத்துவதற்கான சில பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
1. உள்ளடங்கிய கல்வி முறையில் பொதுப்பள்ளிகளில் பயிலும் பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகள் தங்கள் தொடக்கக்கல்வியை சிறப்புப்பள்ளிகளில் பயில அறிவுறுத்தப்பட வேண்டும்.
2. ஒரு மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொதுப்பள்ளிகளில் சேர்ந்து கற்கும் பார்வைக்குறையுடைய குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட பள்ளியில் ஒருங்கிணைத்து, ஆதார அறை (Resource Room) ஏற்படுத்தி,கற்பிக்க வேண்டும். தங்களது வசிப்பிடத்திலிருந்து குழந்தைகள் அன்றாடம் இந்தப் பள்ளிக்கு வரும் வகையில் வாகன வசதி அரசால் ஏற்படுத்தப்பட வேண்டும்.
3. உள்ளடங்கிய கல்வி முறையில் தற்போதுள்ள நடைமுறையின்படி, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மாற்றுத்திறனாளி வகைமைக்குக் கற்பிப்பதில் பயிற்சி பெற்றவர்கள் சிறப்பாசிரியர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் கற்பிக்கப் பணிக்கப்படுகிறார்கள். முற்றிலும் தவறான இந்த முறை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.
4. ஒவ்வொரு வகைமைக்கும் உரிய சிறப்பாசிரியர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த வகைமைக்குக் கற்பிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
5. அவ்வாறு நியமிக்கப்படும் சிறப்பாசிரியர்கள் பல்வேறு பள்ளிகளுக்குச் செல்லும் முறை நிறுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட பள்ளியிலேயே தொடர்ந்து அவர்கள் பணியாற்றிட வேண்டும்.
6. மாவட்டத்தின் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்கள் பயிலும் பொதுப்பள்ளிகள், அந்த மாவட்டத்தின் சிறப்புப்பள்ளியோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
7. மாவட்டத்தில் பொதுப்பள்ளிகள் மற்றும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவ்வப்போது கலை சார்ந்த போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
8. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற பார்வைக்குறைபாடு உடையோருக்கான சிறப்புப்பள்ளிகள் அந்த மாவட்டத்தில் பார்வைக்குறைபாடு உடையோருக்கான பல்வேறு கற்றல் ஆதார வளங்களைக்கொண்ட மாவட்ட மையமாகச் செயல்பட வேண்டும்.
9. இந்தச் செயல்பாடுகளைக் கண்காணித்து நிர்வகிக்க, மாவட்டந்தோறும் சிறப்புக்கல்வி அலுவலர்ப் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும்.
10. இறுதியாக, உள்ளடங்கிய கல்விமுறைக்கும் சிறப்புக்கல்வி முறைக்கும் இடையே ஓர் ஒத்திசைவை உருவாக்கி, பார்வைக்குறைபாடு உடைய மாணவர்களின் தனித்திறனுக்கும் தேவைக்கும் ஏற்ப அவை அந்தந்த மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
III. உயர்கல்வி (Higher Education)
பார்வையற்றோர் பணிவாய்ப்பு, திறன்மேம்பாடு, குறிப்பிட்ட துறைகலீல் நிபுணத்துவம், சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு முதலானவற்றை அடைவதற்கு உயர்கல்வியே அவர்களுக்குத் திறவுகோலாக அமையும். உயர்கல்வியில் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு சிறப்பு வசதியும் அவர்களின் உயர்கல்வி வேட்கைகளைப் பூர்த்திசெய்யும் இன்றியமையாத தேவைகளாகவே உள்ளன. உயர்கல்வி பாடத்திட்டம், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், தகவல் பரிமாற்ற முறைகள், தொழிற்நுட்ப அம்சங்கள், வளாகங்கள் ஆகியன பார்வையற்றோரையும் உள்ளடக்கியவையாகத் திகழும் வகையில் சிற்சில தகவமைப்புகளை மேற்கொண்டாலே பார்வையற்றோருக்குப் பெருந்துனையாக அமைந்து அவர்களின் கல்வி முன்னேற்றத்தில் மிகப் பெரிய நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும். பார்வையற்றோரின் சம பங்கேர்ப்பையும் அவர்களுக்கான சமவாய்ப்பையும் உறுதிசெய்யும் பொருட்டு உயர்கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி முறையிலும் செயல்படுத்தப்படவேண்டிய அவ்வாறான சிறப்பு வசதிகள் மற்றும் தகவமைப்புகள் குறித்த எங்களது பரிந்துரைகள் பின்வருமாறு:
- பல்கலைக்கழக மானியக் குழு UGC) உயர்கல்வி நிறுவனங்களில் அமல்ப்படுத்தப்பட வேண்டிய ஊனமுற்றோரின் அணுகல் தன்மைக்கான அம்சங்கள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றுள் பார்வையற்றோர் தொடர்புடைய அணுகல்த்தன்மை அம்சங்கள் அனைத்தையும் தமிழ் நாட்டில் அமல்படுத்துவதை இக்கல்விக்கொள்கை கட்டாயமாக்க வேண்டும்.
- பார்வையற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்துக்கு மேல் இருக்கும் எல்லா உயர்கல்வி நிறுவனங்களிலும் பார்வையற்றோர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிர்க்காண உதவித் தொழில்நுட்ப மையம் (Assistive Technology Centre) அமைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். திரை வாசிப்பு மென்பொருள்கள் அடங்கிய கணினிகள், பதிவுசெய்து படிப்பதற்கான கருவிகள், பிரெயில் தட்டச்சு எந்திரம் முதலான வசதிகள் அந்த மையங்களில் கண்டிப்பாக இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள அரசுக் கல்லூரிகள் மற்றும் எல்லா அரசுப் பல்கலைக்கழகங்களிலும் பார்வையற்றோர் பயன்பாட்டிற்கென உயர் தொழில்நுட்ப மையங்கள் (Advanced Assistive Technology Centres) அமைக்கப்பட வேண்டும். அந்த மையங்களில் மின்னணு நூலகம், திரை வாசிப்பு மென்பொருள்கள் கொண்டு கணினி இயக்குவதற்கான பயிற்சி, ஒலிப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான வசதி, உயர்தர பிரெயில் அச்சகம் முதலான அம்சங்கள் கண்டிப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
- தமிழ் நாட்டின் எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் பார்வையற்றோருக்கான பதிலி எழுத்தர் நியமனம் (Appointment of scribes) குறித்த தெளிவான ஒரே மாதிரியான விதிகளை வகுத்துப் பின்பற்ற வேண்டும். பதிலி எழுத்தரை நியமிப்பது பார்வையற்ற மாணாக்கர்களின் சொந்தப் பொறுப்பாகவோ அவர்கள் மீது ஏற்றப்பட்ட சுமையாகவோ ஒருபோதும் இருக்கக் கூடாது. தகுதி வாய்ந்த, திறங்கொண்ட பதிலி எழுத்தரை நியமிப்பது அந்தந்த உயர்கல்வி நிறுவனத்தின் முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும். பார்வையற்ற மாணாக்கர் விரும்பினால் தனது சொந்தப் பொறுப்பில் பதிலி எழுத்தரை நியமித்துக்கொள்ளவோ, அல்லது கணினி, பிரெயில் போன்ற மாற்று வழிகளில் தேர்வுகளை எழுதவோ அனுமதிக்க வேண்டும். திறமையான பதிலி எழுத்தரை நியமிப்பது பார்வையற்றோருக்குச் சாதகமாக அமையும் என்ற கருத்தை அகற்றிவிட்டு, உயர்கல்வி நிறுவனங்கள் கண்காணிப்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். பதிலி எழுத்தர்களுக்கு ஒரு தேர்வுக்கு ரூ500 குறைந்தபட்ச மதிப்பூதியமாக வழங்கப்பட வேண்டும். மாணவர் தனது சொந்தப் பொறுப்பில் பதிலி எழுத்தரை நியமித்துக்கொண்டாலும் அவர்களுக்கும் அதே மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.
- எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் பிற மாணாக்கர்களுக்கு வழங்கும் பாடப் புத்தகங்கள், கையேடுகள், கல்வி மற்றும் பிற செயல்பாடுகள் தொடர்பான அனைத்தையும் பார்வையற்ற மாணாக்கர்கள் அணுகும் வகையில் பிரெயில், ஒலிப்புத்தகங்கள், மின்னணு கோப்புகள் ஆகிய வடிவங்களில் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் பெறாமல் வழங்க வேண்டும்.
- எந்த உயர்கல்வி நிறுவனமும் எந்தவொரு படிப்பையும் பார்வையற்றோருக்கு மறுக்கக் கூடாது. குறிப்பிட்ட பாடப் பிரிவில் செய்முறைத் தேர்வுகள் இருப்பதையோ, கடினமான கணித அல்லது அறிவியல் கோட்பாடுகள் இருப்பதையுஓ காரணம் காட்டி எந்தவொரு பார்வையற்ற மாணவருக்கும் சேர்க்கைக்கு இடம் வழங்க மறுக்கக் கூடாது. ஆய்வக உதவியாளர்,, கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளைக்கொண்டு மருத்துவம், பொறியியல், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட எல்லாப் பாடப்பிரிவுகளையும் பார்வையற்றோர் படித்து நிபுணத்துவம் பெறுவது தற்போது சாத்தியமாகியுள்ளது. மறுத்துவர்களாகவும் அறிவியல் அறிஞர்களாகவும் பார்வையற்றோர் கோலோச்சிவரும் இன்றைய உலகில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பார்வையற்றோர் சாதனைகள் புரிவதற்கு இக்கல்விக்கொள்கை வகைசெய்திடல் வேண்டும்.
- பார்வையற்றோருக்கான கல்வி உதவித்தொகை தற்போது கல்வியாண்டு முழுமைக்கும் சேர்த்துக் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இந்த முறையை மாற்றி, எல்லா உயர்கல்வி படிப்புகளுக்கும் மாதக் கணக்கில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். இளநிலைப் படிப்புகளுக்கு மாதம் குறைந்தபட்சம் 3000 ரூபாயும், முதுநிலைப் படிப்புகளுக்கு மாதம் குறைந்தது 5000 ரூபாய்யும், முனைவர் பட்டம் பயிலும் பார்வையற்ற ஆய்வாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 20000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படவேண்டும். அதே போன்று வாசிப்பாளர் உதவித்தொகையும் மாதத்திற்கு குறைந்தது 3000 ரூபாய் என்ற அளவில் கணக்கிட்டு வழங்கப்படவேண்டும்.
- தமிழ் நாட்டின் அரசு மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கென மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு மையம் (Equal Opportunity Cell for the Differently Abled) கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். அந்த மையங்களில் பார்வையற்றோருக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிறப்பு அலுவலர் நியமிக்கப்படவேண்டும். இந்த மையத்தின் பொறுப்பாளர்களாக மாற்றுத்திறனாளிகளே நியமிக்கப்பட வேண்டும், பார்வையற்றோர் பிரிவுக்கான பொறுப்பாளர் ஒரு பார்வையற்ற ஆசிரியராகவே இருத்தல் வேண்டும். பார்வையற்றோர் ஆசிரியர்களாகப் பணியாற்றவில்லை என்றால் மட்டுமே பிறர் பொறுப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.
- எல்லா பல்கலைக்கழகங்களிலும் நூலகங்களில் பார்வையற்றோரின் பயன்பாட்டிற்கென சிறப்புப் பிரிவு இடம்பெற வேண்டும். அங்கு பார்வையற்றோர் படிப்பதற்கான கருவிகள், வாசிப்பாளர்கள் படித்துக்காட்டுவதற்கான இடம், திரை வாசிப்பு மென்பொருள்கள் அடங்கிய கணினிகள், பிரெயில் புத்தகங்கள், பிரெயில் கருவிகள் முதலான வசதிகள் செய்யப்படவேண்டும்.
- உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி இணைச் செயல்பாடுகளான விளையாட்டு, கலைப் பண்பாட்டு நிகழ்வுகள், பணிவாய்ப்புப் பயிற்சிகள் என அனைத்திலும் பார்வையற்றோரின் பங்கேற்பு உறுதிசெய்யப்படவேண்டும். பார்வையற்றோர் பங்கேற்கத்தக்க விளையாட்டுகள், பயிற்சிகள், நிகழ்வுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படவேண்டும்.
- உயர்கல்வியை நிறைவுசெய்யும் பார்வையற்றோரின் பணிவாய்ப்புக்கென தனித்துவமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவேண்டும். திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள், தனியார் வேலைவாய்ப்பு, சுயதொழில் போன்றவற்றில் பார்வையற்றோரின் சிறப்புத் தேவைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். உயர்கல்வி முடிக்கும் பார்வையற்றோருக்கு பணி வழங்க தனியார் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
- தமிழ் நாட்டில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் அனைத்தும் பார்வையற்றோர் திரை வாசிப்பு மென்பொருள்கள் கொண்டு எளிதில் அணுகும் வகையில் அணுகல்த்தன்மை மிக்கவையாக வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கென வெளியிடப்பட்டிருக்கும் இணையதள அணுகல்த்தண்மைக்கான வழிகாட்டுதல்களை (Web Accessibility Guidelines) உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமாக்கப்படவேண்டும்.
- பார்வையற்ற மாணவர் ஒருவர் ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிப்பது முதல் உயர்கல்வி நிறைவுசெய்து நிறுவனத்தைவிட்டு வெளியேறும்வரை எல்லாக் கட்டங்களிலும் வழங்கப்படும் படிவங்கள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் முதலான அனைத்தும் அவர் அணுகும் வகையில் இருக்கவேண்டும். படிவங்கள் பார்வையற்றோர் எளிதில் நிரப்பும் வகையில் இணையவழியில் தரப்படவேண்டும்.
- தொலைநிலைக் கல்வியில் வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் பார்வையற்றோர் அணுகும்வகையில் அமைக்கப்படவேண்டும். குறிப்பாக, பாடப் புத்தகங்கள், நேரடி மற்றும் இணையவழி வகுப்புகள், தேர்வுகள், விண்ணப்பங்கள் ஆகியவை பார்வையற்றோர் எளிதில் அணுகும் வகையில் அமையவேண்டும்.
- மென்பொருள்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட திறன் வகுப்புகள் (Smart classes) அனைத்தும் பார்வையற்ற மானவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அணுகக் கூடியதாக அமைந்திருப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். திரையில் தோன்றும் காட்சிகளை வர்ணிக்கும் முறை (Audio Description), திறன் பலகை வாசிப்பு (Smart board reading), பவர் பாய்ந்த் விளக்கக்காட்சி ஸ்லைடுகளை ஒலி மற்றும் பிரெயில் வடிவில் வழங்கும் வசதி (Audio and Braille output of the PowerPoint Presentation Slides) முதலான அணுகல்த்தன்மை வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
- தமிழ் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள போக்குவரத்து வசதிகள், விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்கு அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், வளாகச் சாலைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பார்வையற்றோர் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் அணுகல்த்தன்மையுடன் அமைக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படவேண்டும். உணவகங்களில் பார்வையற்றோருக்கு உதவ பணியாளர்கள் உணவகச் செயல்பாடு நேரங்களில் தயாராக இருத்தல் வேண்டும். வாகனங்களில் ஒலி அறிவிப்புகள், விடுதிகளில் பார்வையற்றோர் நடக்க உரிய இடைவெளிகள், வகுப்பறைகள் மற்றும் வளாகத்தின் பிற முக்கிய இடங்களில் பிரெயில் அறிவிப்புப் பலகைகள் போன்ற வசதிகள் செய்யப்படுவது கட்டாயமாக்கப் படவேண்டும்.
- தமிழ் நாட்டின் பல்தொழில்நுட்பம், ஐடிஐ உள்ளிட்ட தொழில்சார் பாடப் பிரிவுகளில் பார்வையற்றோர் படித்து பணிவாய்ப்பு பெரும் வகையில் தனித்துவமான தொழில் படிப்புகள் வடிவமைக்கப்பட்டு கற்பிக்கப்படவேண்டும். ஒளிப் பொறியாளர் (Sound engineer), வன்பொருள் அசெம்பிளிங் (Hardware Assembling), இணைய அணுகல்த்தன்மை சோதனையாளர் (Web Accessibility Tester), நிறுவன மேலாண்மையாளர் (Corporate Secretaryship), வானொலி அறிவிப்பாளர் (Radio jockey) போன்ற தனித்துவமான தொழில்சார் படிப்புகளை வடிவமைத்து பார்வையற்றோருக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் பணிவாய்ப்பையும் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் உறுதிசெய்ய முடியும்.
IV. பார்வைக் குறையுடையோருக்கென விளையாட்டு மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள்
பார்வைக் குறையுடையோருக்கான கல்வி என்பது வெறும் பாடத்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது அன்று. பார்வையுள்ளவர்களைக் காட்டிலும் இவர்கள் பொது வாழ்வில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலும், மற்ற ஊனங்களைக் காட்டிலும் இது முக்கியமான புலன் குறைபாடு என்பதாலும் அவர்களுக்குத் தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் முதலியவற்றை வளர்த்தெடுக்க அவர்களுக்கான கல்வி இணைச் செயல்பாடுகளிலும், விளையாட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. அதற்கு நாங்கள் தரும் ஆலோசனைகள் பின்வருமாறு:
1. பார்வையுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விதங்களில் போட்டிகள் நடத்தப்படும்போது, அவற்றில் பார்வைக் குறையுடையோரும் கலந்துகொள்வதை ஊக்குவிக்கவேண்டும். அல்லது, அதே நேரத்தில் அவர்களுக்கென தனிப் போட்டிகள் நடத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்தவேண்டும்.
2. பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடிவினா முதலிய போட்டிகள் பார்வையற்றோருக்கென மாவட்ட, மாநில அளவில் அரசால் நடத்தப்படவேண்டும். மாநில அரசுத் துறைகள், ஒன்றிய அரசுத் துறைகள் முதலியவை நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் பார்வைக் குறையுடையோருக்கான போட்டிகளும் இடம்பெறவேண்டும்.
3. ஏற்கெனவே இருக்கும் பார்வையற்றோருக்கென தகவமைக்கப்பட்ட வழக்கமான விளையாட்டுகள் மீட்டமைக்கப்படவேண்டும். அவை தொடர்பான போட்டிகள் அடிக்கடி நடத்தப்படவேண்டும்.
4. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து உடற்கல்விக் கல்லூரிகளிலும் பார்வைக் குறையுடையோருக்கான விளையாட்டுகள் அனைவருக்கும் பயிற்றுவிக்கப்படவேண்டும். அங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் அது குறித்த குறைந்தபட்ச புரிதலைப் பெற்றிருக்கவேண்டும். சென்னை YMCA-வில் இருப்பதைப் போல இதற்கான தனி பட்டப்படிப்புகளும் அனைத்து உடற்கல்வி கல்லூரிகளிலும் உருவாக்கப்படவேண்டும்.
5. தமிழ்நாடு அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கென இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதில் பார்வைக் குறையுடைய வீரர்கள் பலன் அடைந்டிடவில்லை. இதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டும். மேலும், மாநில அளவில், மாவட்ட அளவில், பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் பார்வைக் குறையுடையோருக்கும் தனியாக நடத்தப்படவேண்டும். அவை மேலே குறிப்பிட்டுள்ள இட ஒதுக்கீட்டிற்குரியவையாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
6. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பார்வைக் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவதை உறுதி செயவேண்டும். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், பார்வைக் குறையுடையோருக்கான விளையாட்டுகள் குறித்த பயிற்சி பெற்ற ஒருவர் பணியமர்த்தப்படவேண்டும். அவர் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்திட வேண்டும்.
7. பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் பார்வைக் குறையுடையோர் விளையாடும் வகையில் இருக்கவேண்டும். 10-க்கும் மேற்பட்ட பார்வைக் குறையுடையோர் படிக்கும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கென தனி மைதானமும், அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் இருக்கவேண்டும்.
V. பொதுவான பரிந்துரைகள்
பார்வையற்றோரின் தொடர்கல்வி, நூலகப் பயன்பாடு, பிரெயில் புத்தகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பொதுவான கல்விக்கான செயல்பாடுகள் குறித்து எங்களது பரிந்துரைகளை முன்வைக்கிறோம்:
- பூவிருந்தவள்ளியில் கடந்த 1968-இல் தமிழக அரசால் பார்வையற்றோருக்கு புத்தகங்களை அச்சிட்டு வழங்க பிரெயில் அச்சகம் நிறுவப்பட்டது. இந்தியாவின் முன்னோடியான பிரெயில் அச்சகங்களுள் ஒன்றாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் திகழ்ந்த அந்த பிரெயில் அச்சகம் தற்போது செயல்படாமல் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பார்வையற்ற மானவர்களுக்கும் பணிபுரியும் பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் பிரெயில் புத்தகங்கள் கிடைக்காத பேரவலம் தற்போது நிலவுகிறது. அந்த பிரெயில் அச்சகத்தை மேம்படுத்தி செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதுடன், மண்டல அளவில் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் பிரெயில் அச்சகங்கள் நிறுவப்படவேண்டும். பார்வையற்ற மானவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரெயில் புத்தகங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைப்பது உறுதிசெய்யப்படவேண்டும்.
- பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போட்டித் தேர்வுகள் என எல்லா நிலைகளிலும் பார்வையற்றோருக்கு, அவர்கள் விரும்பினால், வினாத்தாள்கள் பிரெயில் வடிவில் வழங்குவது கட்டாயம் என விதிகள் உருவாக்கப்பட்டு கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
- எல்லா மாவட்ட மைய நூலகங்களிலும் பிரெயில் மற்றும் திரைவாசிப்பு மென்பொருள்கள் நிறுவப்பட்ட பார்வையற்றோருக்கான சிறப்புப் பிரிவு கட்டாயம் அமைக்கப்படவேண்டும். அவை பார்வையற்ற பொது வாசகர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் போன்றோருக்குத் தேவையான புத்தகங்களை பிரெயில், ஒலி மற்றும் மின்னணு வடிவில் வழங்கும் ஆதார மையங்களாகச் செயல்படவேண்டும்.
- பார்வையற்ற குழந்தைகளை இளம் பருவத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கான சிறப்புக்கல்வியை விரைவாகவும் முறையாகவும் தொடங்க வகைசெய்யும் மையங்கள் (Erly Intervension Centres) மாவட்டம்தோறும் அமைக்கப்படவேண்டும். மேலும் பார்வை இழப்புக்கு உள்ளாகும் குழந்தைகளையும் மானவர்களையும் விரைவாகக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புக்கல்வி வழங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முறையாகச் செயல்படுத்தப்படவேண்டும்.
- பார்வையற்றோரின் கல்வி வளர்ச்சிக்கும் பொதுவான வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் உதவும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆய்வுகளையும் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்கத் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். மேலும் பார்வையற்றோருக்குப் பயனளிக்கும் கண்டுபிடிப்புகள் எவை என்பதை பார்வையற்றோரிடம் பரவலான சோதனைக்குப் பின்னர் முடிவுசெய்து, அவற்றைத் தயாரிக்கவும் பார்வையற்றோருக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்கவும் சிறப்பு நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
- மிக முக்கியமாக, மாற்றுத்திறனாளிகளின் கல்வி வளர்ச்சிக்கென மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ் நாடு அரசின் சிறப்பு மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்தகையதொரு கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டால், அது இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் முன்னோடி முயற்சியாக அமையும். அவ்வாறு உருவாக்கப்படும் கல்விக்கொள்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பார்வையற்றோர் உள்ளிட்ட பல்வேறு ஊனத்தின் பிரிவுகள் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு, பரவலான விவாதங்கள் மற்றும் கருத்துக்கெர்ப்புகளுக்குப் பின்னரே அது இறுதிசெய்யப்பட வேண்டும்.
***பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம்,
தமிழ்நாடு.
மின்னஞ்சல்: mperb.tn@gmail.com
VI. பரிந்துரைகள் உருவாக்கத்தில் பங்கேற்றோர்
- டாக்டர் எஸ். பாலாஜி,
முதுகலை ஆங்கில ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
யா. ஒத்தக்கடை,
மதுரை மாவட்டம்.
முன்னாள் தலைவர்,
பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம் மதுரை கிளை.
- முனைவர் கு. முருகானந்தன்,
ஆங்கில உதவிப் பேராசிரியர்,
அரசு கலை அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி;
நிறுவன உரிப்பினர்,
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை
- உ. சித்ரா,
ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்,
பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி
பூவிருந்தவல்லி.
தலைவர்,
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
- ப. சரவணமணிகண்டன்,
தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்,
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி,
பூவிருந்தவல்லி.
இணைச்செயலர்,
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
- ரா. பாலகணேசன்,
முதுகலை தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஜோகில்பட்டி,
விருதுநகர் மாவட்டம்.
முதன்மை ஆசிரியர்,
விரல்மொழியர் மின்னிதழ்.
- முனைவர் ர. ராஜா,
உதவி பேராசிரியர் (த),
தமிழ் துறை, தொலைநிலை கல்வி நிறுவனம்,
சென்னை பல்கலைக்கழகம்,
சேப்பாக்கம், சென்னை-600005.
மேனாள் பொறுப்புத் தலைவர்,
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.
துணைத் தலைவர்,
தாய் கரங்கள் அறக்கட்டளை.
- முனைவர். ஊ.மகேந்திரன்,
உதவிப் பேராசிரியர்,
ஆங்கிலத்துறை,
சர். தியாகராய கல்லூரி,
, பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை600021.
நிறுவன உறுப்பினர்,
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர்ப் பேரவை.
- ம. பாலகிருஷ்ணன், M.A. B.Ed M.Phil,
செயற்குழு உறுப்பினர்,
பார்வையற்றோருக்கான விளையாட்டு சங்கம்,
தமிழ்நாடு.
👏👏👏👏👏
மாநில கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை முழுமையாக படித்துப் பார்த்தேன். மிகச் சிறப்பாக அனைத்துப் பகுதிகளும் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் அமல்படுத்தப்பட்டால் பார்வையற்றோரின் கல்வி உரிமை முழுமையாக பாதுகாக்கப்படும் மேம்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இத்தகைய சிறப்புமிக்க பரிந்துரைகளை வடிவமைத்த பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் 👏👏👏👏👏😊😊😊