பார்வையற்ற சமூக ஒருங்கிணைப்புக்குழு

பார்வையற்ற சமூக ஒருங்கிணைப்புக்குழு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
துண்டுப்பிரசுரம்

கடந்த வாரம், சரியாகச் சொன்னால் 11 ஜூலை 2022 அன்று ஆணையரகத்தில் எந்த அமைப்பையும் சாராத 150க்கும் மேற்பட்ட சுய தொழில் செய்யும் பார்வையற்றவர்கள் ஒன்று திரண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். 80 விழுக்காட்டுக்கு மேல் ஊனமடைந்த பார்வையற்றவர்களைக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஊனமுற்றவர்கள் என அரசு அங்கீகரிக்க மறுப்பதை எதிர்ப்பதும், இது தொடர்பாக அரசுக்கு சரியான புரிதலை ஏற்படுத்துவதுமே போராட்டத்தின் முதன்மையான நோக்கம்.

பார்வையற்ற சமூக ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிற மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரோடு சுமூகப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்யும் பார்வையற்றவர்களுக்கு அவர்கள் சுமந்து செல்லும் சுமைகளுக்குப் பேருந்தில் சுமை (luggage) கட்டணத்திலிருந்து விலக்கு வழங்கப்பட வேண்டும்,

பல மாவட்டங்களில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, பார்வையற்றவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் (OAP) நிறுத்திவைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் போன்ற அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளும் போராட்டக் களத்தில் முக்கிய பேசுபொருள்களாக இருந்திருக்கின்றன.

அனைத்திற்கும் மேலாக, பார்வையற்றவர்களில் சுமார் 80 விழுக்காட்டுக்கு மேல் சுய தொழில் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, வகுக்கப்படும் அரசின் திட்டங்களில் போதிய ஆலோசனைகள் வழங்கவும், அவற்றின் முழுப்பயனை விளிம்புநிலைப் பார்வையற்றவர் முழுமையாக அனுபவிக்கும் வகையிலும் அரசுக்கும் தங்களுக்கும் இடையில் தொடர் உரையாடல் நடந்தபடியே இருக்க வேண்டும் என விரும்பும் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரியத்தில் சுய தொழில் செய்யும் பார்வையற்றவர்களில் ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சுமார் 150க்கு மேற்பட்ட பார்வையற்றவர்கள் ஒன்றுதிரண்ட போராட்டம் எந்த ஒரு ஊடக வெளிச்சமோ, முன்னணி அமைப்புகளின் அரவணைப்போ இல்லாமல் ஆக்கபூர்வமாய் நடந்து முடிந்திருப்பது புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

வாழ்த்துகள்! பார்வையற்ற சமூக ஒருங்கிணைப்புக் குழுவுக்கு.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *