ஜூன் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே அவ்வப்போதைய இடைவெளிகளில் அகில இந்திய வானொலி நிலையத்தின் எலிசபெத் மேடத்தின் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. விடுமுறை ஒரு மாதம் என்றால், அதை இரண்டால் பெருக்கிக்கொள்கிற விதியைத் தவறாமல் கடைபிடிப்பவர்கள் அல்லவா நம் சிறப்புப்பள்ளி மாணவர்கள். கோடைவிடுமுறை முடிந்து இன்னும் மாணவர்கள் சரிவரப் பள்ளிக்கு வரவில்லை என்ற தகவலை அவருக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார் சித்ராக்கா. அவரும் வாரத்திற்கு ஒருமுறையேனும் போன் செய்து கேட்டுக்கொண்டே இருந்தார். மாணவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்குத் திரும்பிக்கொண்டிருந்ததால், நாங்களும் அவரிடம் ஒரு வார அவகாசத்தில் பயிற்சி வழங்கி நிகழ்ச்சியை நடத்தலாம் எனச் சொன்னோம்.
மற்ற நிகழ்ச்சிகல் போல் இல்லை, இது ஏஐஆர் கிட்ஸ் நியூஸ். ஒரு வாரம்கூட இயலாது, ஏனென்றால் செய்திகள் பழசாகிவிடும் என்பது அவர் கவலை. எனவே, ஜூலை 12ஆம் தேதி பள்ளிக்கே நேரடியாக வந்துவிட்டார், ஆனால் ஸ்கிரிப்ட் இல்லாமல். “நான் சரியாக வியாழன் காலை அதாவது 14ஆம் தேதி வாசிக்க வேண்டிய செய்திகளைத் தொகுத்து அனுப்பிவிடுகிறேன், வெள்ளிக்கிழமை ஒலிப்பதிவு வைத்துக்கொள்ளலாம்.” இது மேடம் எலிசபெத் குறிப்புரை.
“மேடம்! வாய்ப்பே இல்லை. எங்களுக்கு 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் விழா இருக்கிறது.” இது சித்ராக்கா மறுப்புரை. ஒருவழியாக அவர் ஒலிப்பதிவை சனிக்கிழமை 16ஆம் தேதி வைத்துக்கொள்ளலாம் எனச் சொன்னபோது, வேறு வழியில்லாமல் நாங்களும் சம்மதித்தோம்.
இதையும் படிக்கலாமே!
ஒரு பார்வையற்ற வாசகனின் தினசரி கனவு
வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அவரிடமிருந்து செய்தித்தொகுப்பு வேர்ட் (word) கோப்பாக வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட 20 பக்கங்கள். பிரெயில்படுத்தினால் 30 பக்கங்கள் வரக்கூடும். எங்களுக்கோ மலைப்பாகிவிட்டது. இருக்கிற ஒன்றரை நாள் அவகாசத்தில் வேர்ட் கோப்பு மொத்தத்தையும் பிரெயில்படுத்த வேண்டும், பிறகு மாணவர்களுக்கு தலைப்பு வாரியாகப் பிரித்துத் தந்து பயிற்சி அளிக்க வேண்டும். எங்கேனும் ஏதேனும் சொதப்பிவிட்டால்… மயக்கம் வராத குறைதான்.
அப்படியே டக்ஸ்பரியில் போட்டு எடுக்கலாம் என்றால், அங்கே அச்சுத்தாள்கள் பஞ்சம். வேறு வழியே இல்லை, திருமதி. வளர்மதி, மற்றும் திருமதி. கீதா ஆகிய தன்னார்வ வாசிப்பாளர்கள் மற்றும் பள்ளியின் கணித ஆசிரியர் விஜயா மேடம் உதவியுடன் இசை ஆசிரியர் திருமதி. முருகேஸ்வரி, சித்ராக்கா, நான் என மும்முறமாய் பிரெயில் டைப்ரைட்டர்களை முடுக்கினோம். பிரெயில் டைப்ரைட்டரில் வேகமாக டைப் செய்வதில் எங்கள் பள்ளியின் இசை ஆசிரியரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. எனக்கும் அன்று எப்படித்தான் அப்படி ஒரு வேகம் கைகூடியது என்றும் தெரியவில்லை. அடடே! ஒரு கூட்ஸ் வண்டி சூப்பர் பாஸ்ட் ஆகிறதே மொமண்ட்.
பிற்பகலின் பிற்பகுதியில் 20 பக்கங்களைக்கொண்ட பிரெயில் செய்தித்தாள் தயாராகிவிட்டது. நாங்கள் நினைத்ததுபோல் அல்லாமல், மாணவர்களின் உள்வாங்கும் திறனை மனதில் வைத்துக்கொண்டு கொஞ்சம் எளிமையான தொகுப்பாக அனுப்பியிருந்தார் மேடம் எலிசபெத்.
நாங்கள் 10 முதல் 12ஆம் வகுப்புவரை தேர்ந்து வைத்திருந்த எட்டு மாணவர்களுக்குச் செய்தித் தொகுப்பைப் பகுத்துக்கொடுத்து, அவர்கள் அனைவரையும் ஒரு சுற்று வாசிக்க வைப்பதற்குள் பள்ளிவேளை முடிந்து நேரம் கடந்திருந்தது. திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தால் திக்கல் திணறல் குறைந்துவிடும். ஆனால், செய்தி வாசிப்பதற்கான குரல் ஏற்ற இறக்கங்களை அருகில் இருந்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டுமே என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தோம். ஒவ்வொரு மாணவரின் தொகுப்பையும் வாங்கி, உரிய குரல் ஏற்ற இறக்கத்துடன் அதை வாசித்து, அவரவருடைய மொபைல் டிராக்கில் நான் பதிவு செய்து கொடுத்தேன்.
அடுத்தநாளும் சில மணிநேரம் பயிற்சி தொடர்ந்தது. முன்புபோல் எல்லாம் சிறப்புப்பள்ளி விடுதிகளில் இப்போது எந்த மாணவரும் மாநிலச் செய்திகள், ஆகாஷவானி செய்திகள் கேட்பதில்லை. அதனால் வானோலிச் செய்திகள் பற்றிய ஒரு கருத்துருவாக்கமே மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
இறுதியாக, 16ஆம் தேதி சனிக்கிழமை, ஒலிப்பதிவு நாளும் வந்து சேர்ந்தது. காலை 10 மணிக்கு காமராஜர் சாலை ஆல் இந்திய ரேடியோ அரங்கில் தொடங்கிய ஒளி மற்றும் ஒலிப்பதிவில் ஒவ்வொரு மாணவரையும் பிழிந்து எடுத்துவிட்டார் மேடம் எலிசபெத். “பிரதமர், முதலமைச்சர் போன்ற சொற்களுக்கு அழுத்தம் கொடு, ஒவ்வொரு செய்தியையும் முடிக்கும்போது இழுத்து முடிக்காதே, சில இடங்களில் இப்படி அழுத்தம் கொடு” என தன் சக்தியையும் மொத்தம் திரட்டி மாணவர்களை ட்ரில் வாங்கிவிட்டார். இது போதாதென்று, கேமராமேன் ராஜு சகோவின் “அசையாதப்பா, சாயாதப்பா” மைக் வழி அவ்வப்போதைய அன்புக்கட்டளைகள் ஒருபுறம், அகில இந்திய வானொலி நிலையத்தின் பணியாளர் திரு. பார்த்திபனின் அறிவுரைகளுடன் கூடிய மேற்பார்வை மறுபுறம். ஆனாலும் மாணவர்களிடம் உற்சாகம் குன்றவே இல்லை. ஏதோ சினிமா ஷூட்டிங்கில் பங்கேற்கிற கெத்துடனே இருந்தார்கள் அவர்கள். “நாங்கள் கற்றுக்கொடுத்து வைத்திருந்ததெல்லாம் மேலும் மெருகேறின.
மதியப் பொழுதில் எங்கள் பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் திருமதி. கலைச்செல்வி அவர்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணியும் பிரட் அல்வாவும் வாங்கித் தந்ததில் மாணவர்கள் சொக்கித் தூங்கிவிடக்கூடும் என்று நினைத்தேன். ஆனால், திட்டமிடப்படாத சிறுவர்களுக்கான வேறொரு நிகழ்ச்சியிலும் ஆர்ஜே யாசினுடன் பங்கேற்றுத் தெரிக்கவிட்டு எல்லோரையும் திணறடித்தன எங்கள் செல்லங்கள்.
மாணவர்கள் வெளியே செல்கிறார்கள் என்றதுமே உரிய நேரத்தில் அவர்களைத் தயார்படுத்தி, முன்னதாகவே அவர்களுக்கு காலை உணவு வழங்கி அனுப்பிவைத்த துணைவிடுதிக்காப்பாளர்கள் உள்ளிட்ட விடுதிப் பணியாளர்களின் பங்கேற்பு, உடனடியாகப் பேருந்து வசதி வழங்கிய மத்திய ரிசர்வ் படைப்பிரிவின் ஆதரவு, புகைப்பட வெளிச்சத்துக்கு அல்லாமல், மாணவர்களின் பாதை வெளிச்சம்பெறத் தன்னை ஒப்புவித்து, காலை முதல் மாலைவரை எங்களோடு இருந்து எங்களை வழிநடத்திய தன்னார்வ வாசிப்பாளர் அக்கா வளர்மதி மற்றும் வானோலி ஊழியர் பார்த்திபனின் அர்ப்பணிப்பு, இதுபோன்ற முன்னெடுப்புகளைச் சாத்தியமாக்கும் வகையில் எங்கள் பள்ளி முதல்வர் ஆசிரியர்களாகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கும் சுதந்திரம் என இன்னும் எத்தனையோ நன்றிக்குரிய விடயங்கள் இதன் பின்னே இருக்கின்றன.
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, கர்ணவித்யா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்கள், தங்களது திருஷ்டி அமைப்பின் நிர்வாகிகள் பதவி ஏற்புக் கூடுகையில் எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் இதற்கு காரண கர்த்தாவாக இருந்த அகில இந்திய வானொலி நிலையத்தின் திருமதி. எலிசபெத் அவர்களையும் அழைத்துச் சிறப்பு செய்தார். இந்த நிகழ்விலும் எங்கள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் திரு. சந்திரசேகர் மற்றும் விடுதிப்பணியாளர் திரு. தேவதாசுடன் உற்சாகமாகப் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
ஒலிப்புத்தகங்கள் (audiobooks), மின் புத்தகங்கள் (e-books) ஆகிய சாதனங்கள் ஒரு பார்வையற்றவருக்கு அறிவை இறக்குமதி செய்யப் பயன்படலாம். ஆனால், தனக்குத்தானே சிந்தனையை உற்பத்தி செய்துகொள்ளவும், அதை அகிலத்துக்கே தங்குதடையின்றி பகிர்ந்தளிக்கவும் பார்வையற்றவர்களுக்கு உதவும் ஒரே தொழில்நுட்பம் பிரெயில்தான். உணவைப் பகுத்துண்டால் மண்ணுயிர் வாழ்ந்திடும். அறிவைப் பகுத்துண்டால் தன்னுயிர் மேம்படும்.
கட்டுரையை முடிக்கத் திணறி இப்படி ஏதேதோ சிந்தித்துக்கொண்டிருந்தாலும், உள்ளத்தின் குரல் ஒரு ஓரமாய் இருவேறு செய்திகளை மாற்றி மாற்றி வாசித்துக்கொண்டே இருக்கிறது.
செய்தி ஒன்று (ஏக்க தொனி): “அன்றைக்கு மட்டும் ஒரு எலிசபெத் மேடம் எனக்கு வாய்த்திருந்தால், நானும் ஒரு சரோஜ் நாராயண் சாமியாய், ஒரு பாஸ்கரனாய் பந்தா காட்டியிருப்பேன்.”
செய்தி இரண்டு (பெருமித தொனி): “எனக்குக் கிடைக்காத வாய்ப்பு என் பிள்ளைகளுக்காவது கிடைத்ததே!”
“சாப்பிடல, கடைக்குப் போகல, காலைல இருந்து ஒரே இடத்தில உட்கார்ந்துகிட்டு அப்படி என்னதான் எழுதுறீங்களோ!”
மனைவியின் குரலில் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ ஒலிச்சித்திரம் ஆரம்பமாகிவிட்டதால்,
இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன.
***ப. சரவணமணிகண்டன்
Be the first to leave a comment