மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் படி, மாநில மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரியம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்தியில் கடந்த நவம்பர் 08 2017 அன்று அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நடுவண் ஆலோசனை வாரியம் இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை என்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர்கள்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட வாரியத்தின் பதவிக்காலம் கடந்த 2020 நவம்பர் மாதத்தோடு முடிந்துவிட்ட நிலையில், இப்போதும் மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சில பெயர் வெளியிட விரும்பாத துறை அதிகாரிகள் சொல்கிறார்கள் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதுபற்றி ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் (NPRD) பொதுச்செயலாளர் திரு. முரலிதரன் அவர்கள், “this Government has been high on rhetoric, less on deliver” என மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடுவண் அரசின் நிலைப்பாடு குறித்துத் தனது அவதானிப்பை சுவையாக முன்வைக்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முன்னெடுப்புகளில் எப்போதுமே தமிழகம் ஒரு அடி முன்னே சென்றுகொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்வும்கூட உறுதிப்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியம் மற்றும் ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் நடந்த செறிவான, மாற்றுத்திறனாளிகள் மேம்பாடுகள் தொடர்பான பல அறிவிப்புகளை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கை விவாதத்தைத் தொடக்கப் புள்ளியாகக்கொண்டு யோசித்தால், எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நல மானியக்கோரிக்கை விவாதத்தில்தான் சிறப்புப்பள்ளிகள் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிறப்புப்பள்ளி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான சோப்பு, எண்ணெய் செலவீனங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளின் தரம் உயர்வு அறிவிப்பிற்கான உரிய அரசாணைகளும் வெளிவரவிருக்கின்றன.
சட்டமன்றத்தில் அறிவித்ததுபோலவே, மாண்புமிகு முதல்வர் அவர்களும் துறை அமைச்சர் என்ற வகையில், துறையின் தலைமை அலுவலகத்துக்கே சென்று, ஆய்வுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான முதல்வரின் உரையில், முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தன என்பதை நல்ல தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
“மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில், குழந்தைகள் நலன், சுகாதாரம் மற்றும் கல்வித்துறை போன்றவை ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்” என அவர் ஆற்றிய உரையின் இறுதிப்பகுதி முக்கியமானது. உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் எனக் கடந்தகாலங்கள் போல் அரசு தனது சிந்தனையை மேம்போக்காகச் செலுத்தாமல், தற்போது அது மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டை வேரிலிருந்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் உரையாடும் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் பொதுக்கல்வி குறித்துச் சிந்தித்திருக்கிற அரசின் பார்வை மெல்ல தன் கட்டுப்பாட்டில் இயங்குகிற சிறப்புப்பள்ளிகள் மற்றும் சிறப்புக்கல்வி குறித்தும் திரும்ப வேண்டும். சிறப்புப்பள்ளிகளைத் தரம் உயர்த்துவது, விடுதி மாணவர்களுக்கான உணவு மானியம், சோப்பு எண்ணெய் செலவீனத்தை உயர்த்துவது போன்றவற்றைத் தாண்டி, சிறப்புக்கல்வி தொடர்பாகவும்மாநிலத்திற்கென்று ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கைகள் மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலாய் சுருங்காமல், ஒவ்வொரு இயலாமையும் கோருகிற கற்றல் கற்பித்தல் தேவையின் அடிப்படையில் அமைதல் வேண்டும்.
இவை குறித்தெல்லாம் அரசோடு உரையாடும் வகையில், மாவட்ட மறுவாழ்வு அலுவலராகவோ, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் உதவி இயக்குநராகவோ, நல வாரியத்தின் அல்லது ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவோ என எல்லா நிலைகளிலும் சிறப்புப்பள்ளிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத இன்றைய சூழலில் மாண்புமிகு முதல்வர் மட்டுமே சிறப்புக்கல்வி எழுச்சிக்கான ஒற்றை நம்பிக்கையாக இருக்கிறார்.
‘கல்வி’ எனச் சொல்லி அவர் தொடங்கிவைத்திருக்கிற உரையாடல் களத்தைத் தக்கவைத்து, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முதன்மைப் பொறுப்பும் கடமையிம் சிறப்புக்கல்வி மேம்பாட்டில் அக்கறைகொண்ட நம் ஒவ்வொருவரின் கடமை.
***ப. சரவணமணிகண்டன்
Be the first to leave a comment