சவால்முரசு முன்றில்: மறக்க முடியாத அந்த நாள்

சவால்முரசு முன்றில்: மறக்க முடியாத அந்த நாள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மே 18 2022 புதன்கிழமை, காலை 11 மணி. கோடை விடுமுறைக்காக -பூவிருந்தவல்லியிலிருந்து புதுக்கோட்டை கிளம்பிக்கொண்டிருந்தேன். மொபைல் நோட்டிஃபிகேஷனில் ஈஸ்பீக் குரலில் எதிரொலித்தது அந்தச் செய்தி. ‘பேரறிவாளன் விடுதலை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!’

மகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான்  இருந்தது.

உபர் ஆட்டோவில் பயணித்தபடியே புதியதலைமுறை லைவ் பார்த்தேன். அண்ணன் குரலும் அம்மாவின் குரலும் மாறிமாறிக் கேட்டுக்கொண்டிருந்தது. இருவரின் வாழ்வின் விலைமதிப்பற்ற அந்தத் தருணத்தைக்கூட மானசீகமாய் அனுபவிக்க இயலாதபடி நிருபர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்களோ எனத் தோன்றியது எனக்கு. உடனே லைவ் பார்ப்பதை நிறுத்தினேன். என் மனச்சக்கரம்  அப்படியே பின்னோக்கிச் சுழன்றோடி ஐந்தாண்டுகளுக்குமுன்பான ஒருநாளில் போய் நின்றது. ‘மறக்க முடியாத நாள்’ எனத் தலைப்பிட்டு நான் அறவழிச்சாலை வாட்ஸ் ஆப் குழுவில் எழுதிய பத்தி நினைவுக்கு வந்தது. அதே பத்தி விழிச்சவால் பிரெயில் மற்றும் மின்பதிப்பிலும் வெளியாகியிருந்தது.

***

23-09-2017 வாழ்நாளின் மறக்க இயலாத நாளாகிவிட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நண்பன் ஒருவனைச் சந்திக்க நானும் எனது மாப்பிள்ளை சசியும் வேலூரிலிருந்து திருப்பத்தூருக்குச் சென்றுகொண்டிருந்தோம். ஜன்னல் இருக்கையில் அமர்ந்தபடி விகடன் இணையத்தைப் படிக்கத் தொடங்கிய எனக்குக் கிடைத்தது அந்த மகிழ்ச்சியான செய்தி. “பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.”

செய்தியை மாப்பிள்ளையிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்போதே ‘ஜோலார்ப்பேட்டை வெளியே வந்துடு’ என்றது நடத்துனரின் குரல். திருப்பத்தூர் தாண்டி ஜோலார்ப்பேட்டை இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். சட்டென்று மனதில் அறிவண்ணனைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. உடனே மாப்பிள்ளையிடம் சொன்னதும், அவனுக்கு ஏக மகிழ்ச்சி. இருவரும் ஜோலார்ப்பேட்டையிலேயே இறங்கிவிட்டோம்.

தானி (ஆட்டோ) ஓட்டுநரிடம் K.K. தங்கவேல் தெரு போகவேண்டும் என்றோம். அப்படியெல்லாம் தெரு கிடையாது என்றார் அவர். ‘அறிவண்ணன் வீடு?’ என்றதும் புரிந்துகொண்டார். வீட்டிற்கு முன்பாக இருந்த காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு எங்களிடமிருந்து விடைபெற்றார். காவல் அதிகாரிகளிடம் பெயர் முகவரிகளோடு எங்கள் செல்பேசியையும் கொடுத்துவிட்டு, வீட்டின் முன் கதவைத் தட்டியதும் கதவு திறக்கப்பட்டது.

பேரறிவாளன் மற்றும் அற்புதம் அம்மாள்

எங்களைப் பற்றி உள்ளே சொன்னதும் விரைந்து வந்து எங்களை அன்போடு தழுவிக்கொண்டார் அற்புதம் அம்மா. ஏழு உயிர்களை மரணத்திலிருந்து மீட்டெடுத்திருக்கிற தெய்வத்தாயின் காலில் விழுந்தால் என்ன எனத் தோன்றிய நிமிடத்திலேயே அவர் காலில் விழுந்தேன். சில வினாடிகளில் அறிவண்ணன் வந்தார். எங்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். வெறும் குரல்வழியாக மட்டுமின்றி அவர் எங்களை ஆரத்தழுவிக்கொண்டதன் மூலம் வினாடியில் அவரின் அகம் புறம் அறிய எங்களுக்கு வாய்ப்பளித்தார் என்றே கருதுகிறேன்.

ஊடகத்தின் சில பேட்டிகள் வாயிலாக அறிந்திருந்த அற்புதம் அம்மாவின் பேச்சும் செயலும் எந்தவித மாற்றமும் இன்றி, மிகுந்த கருணையும் பரிவுடையதுமாக இருந்தது. ‘உங்க மாதிரிப் பார்வையில்லாதவங்களைப் பார்க்கும்போதுதான் எனக்கு வாழ்க்கை மேலேயே இன்னும் நம்பிக்கை அதிகமாகுது’ என்று வாஞ்சையுடன் என் கன்னத்தை அந்தத் தாய் தடவிக்கொடுத்தபோதுதான் புரிந்தது, வாழ்வதற்கும் போராடுவதற்குமான இடைவிடாத உத்வேகம் அறிவண்ணனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்று.

கம்பீரமும் அதேநேரத்தில் மிகுந்த சாந்தமுமான குரல் அறிவண்ணனுடையது. ‘பழச்சாறு குடிங்க, தேனீர் குடிங்க’ என அவர் வார்த்தைகளில் தூயதமிழ் வழக்கமாக மாறியிருந்தது. அரைமணிநேர உரையாடலுக்குப் பிறகு, அம்மாவின் அன்புக்கட்டளையை எங்களால் மீற இயலவில்லை. அதே நேரத்தில் ‘அண்ணனும் எங்களோடு அமர்ந்து சாப்பிடவேண்டும்’ என்கிற எங்களின் கோரிக்கையும் நிறைவேறியது.

சகஜமாக எங்கள் தோள்மீது கைபோட்டு சாப்பிடுவதற்காக மாடிக்கு அழைத்துப்போனதுமுதல், அருகில் அமர்ந்துகொண்டு பரிமாறியதும், உங்கள் எதிரில் இருப்பவர் இவர், பக்கத்தில் இருப்பவர் அவர் என்று தொடர்ச்சியாக எங்களை நிகழ்ச்சூழலுடன் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த அவரின் புரிதல், அவர் ஒரு மனிதப் பற்றாளர் என்பதைத் துல்லியமாக உணர்த்தியது. அவருடைய பரோலை மேலும் ஒருமாதகாலம் நீட்டித்து இருக்கிற தமிழக அரசுக்கு இதயம் கனிந்த நன்றிகளைச் சொல்வதோடு, நிச்சயம் அவர் விடுதலையையும் நமது தமிழக முதல்வர் அவர்கள் வெகுவிரைவில் சாத்தியமாக்குவார் என்கிற நம்பிக்கையோடு அங்கிருந்து விடைபெற்றோம்.

***

அன்று நான் எழுதிய பத்திக்கு இட்ட அதே தலைப்பு இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. உண்மையில் 18 மே 2022 மறக்க முடியாத நாள்தான். அத்தோடு மனதில் ஏதேதோ உணர்ச்சிகளையும், கொந்தளிப்புகளையும் கிளர்த்தியபடியே இருப்பதால் இந்த நாளின் அழுத்தம் மென்மேலும்கூடியபடியே இருக்கிறது.

நான் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தங்களின் குறைகள் துறையால் தீர்க்கப்படாதபோது பணியாளர்கள் நீதிமன்றத்தை அதிகம் நாடுவதைப் பார்க்கிறேன். பல நேரங்களில் தனியாள் ஒருவருக்குச் சாதகமான ஒரு அம்சம், பொது நீதிக்கு எதிராக இருக்கும். எதிர்ப்புகள் கிளம்புகையில் துறைத்தலைவரும் தனியாளுக்குச் சாதகமாகவும், பொதுநீதிக்குப் பாதகமாகவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெற்று ஒரு ஆணை வெளியிடுவார். அந்த ஆணை பொதுவுக்கு வரும் முன்பாகவே, தலைமையகத்தில் இருக்கும் சில மேலான மனிதர்களால் அந்தத் தனியாளின் கைக்குச் சென்றுவிடும். உடனே அந்தத் தனியாள் நீதிமன்றம் சென்று புதிய ஆணைக்குத் தடை வாங்குவார். அவ்வளவுதான் அந்தத் தனியாள் தனக்குச் சாதகமான நிலையினை அந்தத் தடையுத்தரவின் உபயத்தால் மேலும் பல ஆண்டுகள் அனுபவிப்பார்.

எனவேதான் எந்த ஒரு அநீதிக்கும் எதிராக முடிந்தவரை குரல் எழுப்புவது, போராடுவது, உயர் அலுவலர்களைச் சந்தித்துப் பேசுவது என்பதாகவே நான் என் வழிமுறைகளை அமைத்துக்கொள்வதுண்டு. நீதிமன்றங்கள்தான் சட்ட ரீதியிலான நிரந்தரத் தீர்வைத்தரும் என்றாலும், அது உட்கொள்ளும் கால அளவு என்னை அதிகம் சோர்வூட்டுவது. இத்தகைய மிகமிகமிகச் சராசரிமனநிலை கொண்ட எனக்கு அண்ணனும் அம்மாவும் நிச்சயம் தெய்வாம்சப் பிறவிகள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இன்று கோடிக்கணக்கான தமிழர்களின் நெடுநாளைய அவாவும் கனவும் நிறைவேறியிருக்கிறது. நீதி வென்றது என்றாலும், அதற்கு அறிவண்ணனும் அம்மாவும் கொடுத்த விலைகள் அதிகம். சட்டத்தின் ஒரு சில சரத்துகளை விளக்கிட ஒரு சாமானியனின் இளமை முழுக்க செலவாகியிருக்கிறது. இந்த 31 ஆண்டுகளில் அவர்கள் சந்தித்த ஏற்ற இறக்கங்கள்தான் எத்தனை எத்தனை? ஆறுதல்கள்/அவச்சொற்கள், கைகொடுத்தல்கள்/மறுதளிப்புகள், பரிவு மொழிகள்/பகட்டாராவாரப்பொழிவுகள், துணைநிற்றல்கள்/நினைத்துக்கூடப் பார்த்திடாத துரோகச் செய்கைகள், மாண்புறு மனிதர்கள்/மனிதக்கீழ்மையில் தோய்ந்த உருப்பிண்டங்கள்.

நமக்கெல்லாம் அவரின் விடுதலை வெற்றிக்களிப்பென்றால், அந்த இருவருக்கோ பெற்ற விழுப்புண்களின் தடங்களில் புதைந்திருக்கிற வரலாற்றை வாழ்நாள் முழுக்க எண்ணியெண்ணி மனதோடு அழுதும் சிரித்தும் சிலாகித்துக்கொள்வதுதான் ஒரே உளநிறைவு. அவரின் விடுதலை சொல்லும் செய்தி ஒன்றுதான். சாமானியனோ, சஞ்சை தத்தோ சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதுதான் அது. ஆனாலும், ஒரு சாமானியனுக்குக் கிடைக்கும் காலந்தாழ்ந்த நீதிக்கு யார் பொறுப்பு? இழந்துவிட்ட இளமைக் காலங்களுக்கு என்ன இழப்பீடு?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம்  பதில் கிடைக்கும் நாள்தான், இந்திய நாட்டில் வாழும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்ட ஒரு சாமானியனுக்கு மறக்க முடியாத நாள்.

***ப. சரவணமணிகண்டன்

***

சவால்முரசின் புதிய பகுதி முன்றில். இந்தப் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பற்ற பிற கட்டுரைகள் வெளியிடப்படும். பொழுதுபோக்கு, இலக்கியம், பெண்கள், சமூகம், வரலாறு, பண்பாடு என உள்ளடக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை வெளியீட்டில் ஒரே நிபந்தனை கட்டுரையாளர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருப்பது அவசியம்.

உங்கள் பொதுவான படைப்புகளை முன்றில் எனக் குறிப்பிட்டு, savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உரிய பரிசீலனைக்குப் பிறகு கட்டுரை பதிவேற்றம் செய்யப்படும்.

குறிப்பு: சவால்முரசில் வெளியிடப்படும் படைப்புகளின் கருத்துகளுக்கு படைப்பாளர்களே பொறுப்பு. சவால்முரசு இணையதளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *