இருட்டை விரட்டும் அரட்டை (5) மகளிர்தின சிறப்புத்தொடர்

இருட்டை விரட்டும் அரட்டை (5) மகளிர்தின சிறப்புத்தொடர்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

முந்தைய பகுதிகளைப் படிக்க

இருட்டை விரட்டும் அரட்டை (5) மகளிர்தின சிறப்புத்தொடர்
உரையாடலில் பங்கேற்ற ஐந்து பெண்களின் புகைப்படங்கள்

சித்ரா: நாம் உரையாடலின் இறுதிப் பகுதியில் இருக்கிறோம். பார்வையற்ற பெண்கள் தொடர்பாக வேறு ஏதேனும் கருத்துகள் இருக்கின்றனவா?

முத்துச்செல்வி: பார்வையற்ற பெண்களைப் பொருத்தவரை, குழந்தையிலிருந்தே அவர்களுக்கு பிறரைத் தொடர்புகொள்வதில் (communication skill) ;நாம் பயிற்சி அளிக்க வேண்டும். நான் மொழி சார்ந்து சொல்லவில்லை. பிறரிடம் தைரியமாகப் பேசுவது, தயக்கமின்றி உடனுக்குடன் பதில் தருவது போன்றவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில், நாம் தயங்கிப் பேசினால் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும்.

சித்ரா: கண்டிப்பாக. நமது விருப்பம் என்ன, நமது சிந்தனை என்ன என்பதை தைரியமாக வெளிப்படுத்துவதில் ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள். நானும் நிறையப் பார்த்திருக்கிறேன். எங்களது இணையப் பயிற்சியில் சேர சில கல்லூரி வயது பார்வையற்ற பெண்கள் போன் செய்வார்கள். அப்படியே தயங்கித் தயங்கிப் பேசுவார்கள். அவர்கள் பெயரையோ, ஊரையோ சொல்வதில்லை. நேரடியாக “என்னை இதில் சேர்த்துவிடுங்க” என்பார்கள். எதில் என்றுகூட சொல்வதில்லை.

நாம் ஏதாவது விவரம் கேட்டாலும் ரொம்பவே தயங்கித் தயங்கியே பேசுவார்கள். அதுவும் நம்மிடமே இப்படிப் பேசுகிறார்கள் என்றால், எப்படிப் பொதுச்சமூகத்துடன் அவர்களால் உரையாட முடியும்?

முத்துச்செல்வி: இன்னொன்றும் சொல்ல வேண்டும். இது சரியா தவறா எனத் தெரியவில்லை. கல்லூரி படிக்கும் பார்வையற்ற பெண்கள் பார்வையற்ற பெண்களுக்கான விடுதிகளைத் தவிர்த்துவிட்டு பொதுவான பெண்களுக்கான விடுதிகளில் (main stream hostels) தங்கலாம். இன்றைய சூழலில் ஹெல்ப் தி ப்லைண்ட் போன்ற நிறைய உதவித்தொகைகள் கிடைக்கின்றன. நான் ஐந்தாண்டுகள் பொதுவான விடுதியில்தான் தங்கிப் படித்தேன்.

தொடக்கத்தில் ஒருங்கிணைவதில் (inclusion) நிறைய சிக்கல்கள் இருந்தன. பிறகு மெல்ல மெல்ல சக பெண்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்த முடிந்தது. அத்தகைய சூழலில் தங்கிப் பழகியதால், இனி எங்கேயும் நம்மால் இணங்கிப் போய்விட முடியும் என்ற தைரியம் வந்திருக்கிறது.

இன்று பார்வையற்ற பெண்களுக்கென்றே நிறைய விடுதிகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலான விடுதிகள் பெண்களுக்கான பிரத்யேக வசதிகள் இன்றி செயல்படுகின்றன.

சித்ரா: நீங்கள் சொல்வது உண்மைதான். பொதுச்சமூகத்தோடு ஒருங்கிணைதல் என்பது முக்கியமான ஒன்று. சிறப்புக்கல்வியின் தேவை குறித்துப் பேசும் சிறப்புப்பள்ளி ஆசிரியர்களாகிய நாங்களும் இதையேதான் வலியுறுத்துகிறோம்.

எட்டாம்வகுப்பு அல்லது பத்தாம் வகுப்புவரை பார்வையற்றவர்கள் சிறப்புப்பள்ளிகளில் படித்தால் போதுமானது. பதினொன்றாம் வகுப்பிலிருந்தே அவர்கள் பொதுப்பள்ளிகளுக்குச் சென்றுவிடலாம். அதற்கான அடிப்படைப் பயிற்சிகள் சிறப்புப் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டும்.

முத்துச்செல்வி: அமைப்புகள், சங்கங்களில் பார்வையற்ற பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அவர்கள் முன்வருவதில்லை என்று பார்வையற்ற ஆண்கள் மேடைகளில் குறைபட்டுக்கொள்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு பெண் முன்வந்தால் உண்மையில் அவளை முழுமையாகச் செயல்பட அனுமதிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. என்னைப் பற்றிகூட என் கணவரிடம் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். “அந்தப் பெண்ணா? அது டெல்லிக்கெல்லாம் போகுமே! எப்போ பார்த்தாலும் உரிமை உரிமைனு பேசுமே! அதையா கல்யாணம் பண்ணிக்கப் போற? வேண்டாம். அதெல்லாம் ஃபேம்லிக்கு செட்டாகாது” என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

“டெல்லிக்கெல்ல்ஆம் எப்படித் தனியாக அனுப்புறீங்க?” என இப்போது்ம் கேட்கிறார்கள். அதாவது, பார்வையற்ற பெண்கள் உண்மையான செயல்பாட்டாளராக இருக்கக்கூடாது, தனியாகப் பயணம் செய்யக்கூடாது, அப்படிப்பட்ட பெண்கள் குடும்பம் நடத்த தகுதியற்றவர்கள் என்ற பொதுவான ஆண்களின் மனப்பான்மையே பெரும்பாலான பார்வையற்ற ஆண்களிடமும் இருக்கிறது. ஆனால், மேடைகளில் பார்வையற்ற பெண்கள் தலைவர்களாக வரவேண்டும், செயல்பாட்டாளராக மிளிர வேண்டும் என்று பேசுகிறார்கள்.

சித்ரா:  ஆமாம். வீடு, சமுதாயம் என இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பார்வயற்ற பெண்களும் செயல்பாட்டாளராவதில் முனைப்பு காட்டுவதில்லை. இன்றும்கூட வனஜா, அருணாதேவி, முத்துச்செல்வி என விரல்விட்டு எண்ணும் அளவிலேயே பார்வையற்ற பெண் செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்.

முத்துச்செல்வி: அரசியலில்கூடப் பார்த்தால், உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான பெண்களின் கணவர்களும் உறவினர்களும் பெண்களை பினாமிகளாகத்தான் வைத்திருக்கிறார்கள். பதவியில் பெண்கள் இருந்தாலும் செயல்படும் இடத்தில் ஆண்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்.

சித்ரா: பொதுச்சமூகத்தின் மனநிலை இதுதான். உதாரணமாக, ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும்தான் வெளியே போய் வருவோம். வந்தபிறகு, கணவன் ஓய்வாக சோஃபாவில் அமல்ந்துகொண்டு மனைவியை டீப்போடச் சொல்வார். இதில் பார்வையற்ற தம்பதிகளும் விதிவிலக்கில்லை.

செலின்மேரி: கண்டிப்பாக அக்கா இருக்கிறதுதான். வரும்போதே “டீப் போட்டாச்சா?” என்று கேட்டுக்கொண்டுதான் நுழைவார்கள்.

முத்துச்செல்வி: நான் ஒரு இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தேன். சித்ராக்காவும் இருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், ஒரு பார்வையற்ற ஆண் “அப்புறம் எப்படியும் முத்துச்செல்வி மேடம் காஃபி போடப்போறதில்லை” எனக் கேட்டார். இப்போதும் என்னிடம் அந்தப் பதிவ்உ இருக்கிறது. “நான்தான் காஃபி போடணுமா?” என்று நான் பதில் சொன்னேன்.

இன்னமும் அந்த ஆணாதிக்கச் சிந்தனை ஊறியவர்களாகவே ஆண்கள் இருக்கிறார்கள்.

எனக்கென்ன தோன்றுகிறது என்றால், இந்த 2022ல் இனி ஆண்களைக் குறை சொல்வதிலோ, அவர்களை மாற்ற நினைப்பதிலோ எந்த ஒரு பயனும் இல்லை. உரிமை சார்ந்தும், சமூகத்தின் போக்கு குறித்தும் நாம் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இனி ஆண்கள் மாறுவார்கள் என நம்புவதைவிட, பெண் பிள்ளைகளுக்கு இவை குறித்தெல்லாம் சிறுவயதிலிருந்தே கற்பித்து மாற்றத்தை அவர்களிடம் நிகழ்த்திட வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்த பொன்மொழி ஒன்று, சொன்னது யார் என நினைவுக்கு வரவில்லை. ‘nobody can feel inferior without your permission’ அதாவது ‘உன்னுடைய அனுமதி இல்லாமல் உன்னை யாரும் இழிவுபடுத்த முடியாது’ இதைத்தான் பெண் குழந்தைகளுக்கு நாம் சிறுவயதிலிருந்தே கற்பிக்க வேண்டும்.

சித்ரா: கல்வி, திருமணம், பொருளாதாரச் சுதந்திரம் என நிறைய விஷயங்களை மிகவும் சுவையாகவும் சுவாரசியமாகவும் நாம் பேசியிருக்கிறோம். இவை அத்தனை பிரச்சனைக்கும் ஒரே தீர்வு விழிப்புணர்வுதான். பார்வையற்ற பெண்கள் சிறுவயதிலிருந்தே சுயமாக வாழப் பழக வேண்டும். இது தொடர்பில் பெற்றோரின் மனப்பான்மையும் மாற வேண்டும். இதற்கெல்லாம் சிறப்புப்பள்ளிகளில் உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

சியாமலா: பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பார்வையற்ற ஒவ்வொருவருமே நம் தேவைகள் குறித்து நாமே முன்வந்து அவர்களுக்குக் கற்பிக்க (self-advocacy) வேண்டும். பொருட்களை கையாள்வது போன்ற சின்னச்சின்ன விஷயங்களிலிருந்தே நாம் தொடங்க வேண்டும். எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வையுங்கள் என்பதாகட்டும், இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என அவர்கள் சொல்லும்போது பக்கம் சொல்லாமல் வலது இடது என சொல்ல அவர்களைப் பழக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நாம்தான் அவர்களுக்குச் சொல்லித் தந்து பழக்க வேண்டும். தொடர்ச்சியாக நாம் அப்படி செய்யும்போது நம்மைக் கையாள்வதில் நமது பெற்றோரின் புரிதல் மேம்படும். வீட்டில் இத்தகைய அணுகத்தக்க சூழலை நாம் கட்டமைத்துவிட்டால், அதனால் நாம் மட்டுமல்ல, நம்மைத் திருமணம் செய்துகொள்ளும் பார்வையற்றவர்களும் நம் வீட்டுச் சூழலைத் தனக்கு உகந்ததாகக்கருதி மகிழ்வார்கள்.

சித்ரா: நாம் சுயமாக வாழப் பழகி, நாம் மகிழ்ச்சியாக இருப்பதோடு, நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உரையாடல் இத்தோடு முடிவதல்ல, பார்வையற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு குறித்து நாம் மேற்கொள்ளும் அடுத்தடுத்த முன்னெடுப்புகளிலும் நீங்கள் எல்லோருமே கைகோர்த்து அதைச் செயல்படுத்த வேண்டும். எங்கேனும் ஏதேனும் ஒரு பார்வயற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள், வழிகாட்டல்கள் தேவைப்படும் பட்சத்தில் அதில் தானாக முன்வந்து உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அத்தோடு, உங்களைப் போன்றே பார்வையற்ற பெண்களின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பெண்களை நீங்கள் அடையாளம் கண்டு அவர்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என உரையாடலில் பங்கேற்ற உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை சவால்முரசு சார்பில் அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள்.

***நிறைந்தது.

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்

பகிர

1 thought on “இருட்டை விரட்டும் அரட்டை (5) மகளிர்தின சிறப்புத்தொடர்

  1. மகளிர் தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி சமுதாயத்திற்கு பார்வையற்ற பெண்களை குறித்த விழிப்புணர்வை மிகச்சிறப்பாக கொண்டு சேர்த்துள்ள சவால் முரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இருட்டை விரட்டும் அரட்டை என்ற தலைப்பு மிக இயல்பாக இருக்கிறது மேலும் இந்த கலந்துரையாடலை எழுத்தாக்கம் செய்தது கூடுதல் சிறப்பு அந்தப் பணியை மிக நேர்த்தியாக செய்து வாசகர்களை தன் எழுத்தால் ஈர்த்து கட்டுக்குள் வைத்திருக்கும் சரவணன் மணிகண்டன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கலந்துரையாடலை அருமையாக கொண்டுசென்று ஏறக்குறைய அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி பார்வையற்ற பெண்களின் சவால் மிகுந்த வாழ்வை அதனை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தெளிவுபட எடுத்துரைத்த அந்த ஐவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஐந்து பாகங்களையும் தொகுத்து ஒரு சிறு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒரு அரிய படைப்பை கொண்டு வந்தமைக்காக அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *