ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளைச் சமூகத்தின் சாபம் என்றே பல்வேறு சமூகங்கள் பாவித்தன. சிகாகோவின் ‘அசிங்கச் சட்டம்’ (Ugly law) மாற்றுத்திறனாளிகள் நகருக்குள் நடமாடத் தடை விதித்திருந்தது. 1930-களில் அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கருத்தடை செய்யும் சட்டம் நடைமுறையில் இருந்தது. மாற்றுத்திறனாளிகளின் குழந்தையும் கொல்லப்பட வேண்டும் என்பது நாஜிக்களின் நடைமுறையாக ஜெர்மனியில் இருந்தது. இந்த இழிநிலை ஒரே இரவில் மாறிவிடவில்லை.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உலகம் முழுவதும் ஏராளமான படை வீரர்களை ஊனமாக்கியிருந்தன. போருக்குப் பின் நாடு திரும்பிய அவர்களுக்குப் புதிய வாழ்க்கை தேவைப்பட்டது. மறுவாழ்வுக்கான கோரிக்கைகள் எழுந்தன. அவை அரசுகளால் மறுக்கப்பட்டபோது, போராட்டங்களாக மாறின. நாடு காத்த தியாகிகளாகப் போற்றப்பட்ட இவர்களது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகியது. ஊனம் என்பது தனிமனிதப் பிரச்சினையாகக் கருதப்பட்ட நிலை மாறி, அது சமூகப் பிரச்சினையாக உருவெடுத்தது.
அதே காலகட்டத்தில் சமூகத்தின் பல அரங்குகளில் ஊனமுற்றவர்கள் பெரும் சாதனை செய்தனர். ஹெலன் கெல்லர், ஃபிராங்ளின் டி. ரூஸ்வெல்ட், ஸ்டீவன் ஹாக்கிங் போன்றோரது நிகரற்ற பங்களிப்பு மாற்றுத்திறனாளிகள் பற்றிய சமூகத்தின் எண்ணத்தை மாற்றியமைத்தது. மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களால் 1948-ல் தொடங்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் ‘பாராலிம்பிக்’ (Paralympic) என உருப்பெற்று, உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளிடம் உறைந்து கிடந்த பன்முக ஆற்றலை வெளிச்சம்போட்டுக் காட்டின. எனினும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வையும், சம வாய்ப்பையும் உறுதிப்படுத்தும் சட்டம் எதுவும் வடிவம் பெறவில்லை.
அமெரிக்காவில் நடந்த தொடர் போராட்டங்களின் காரணமாக 1973-ல் நிறைவேற்றப்பட்ட மறுவாழ்வுச் சட்டமே மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான முதல் சட்டம். அடுத்து, பல பத்தாண்டுப் போராட்டங்களுக்குப் பின்னர் 1990-ல் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க மாற்றுத்திறனாளிகள் சட்டமே முழுமையான சட்ட உரிமையை வழங்கியது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐ.நா. அறிவித்தபோது, மாற்றுத்திறனாளிகளின்பால் உலகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது. பின்னர், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3, உலக மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று 1992-ல் ஐ.நா. அறிவித்தது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளின் மீது பெரும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தது.
இந்திய அரசமைப்பு அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பையும் அடிப்படை உரிமைகளையும் வகுத்திருந்தாலும்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எனக் குறிப்பான எந்தச் சட்டப் பாதுகாப்பையும் வழங்கவில்லை. 1992-ல் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கான பத்தாண்டுகள் (1993-2002) என அறிவிக்கும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ‘மாற்றுத்திறனாளிகளின் முழு பங்கேற்பும் சமத்துவமும்’ என்ற அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டது.
இதுவே, இந்தியாவின் மாற்றுத்திறனாளிகளின் மீதான முதல் கவனப் பதிவு. இந்த அறிக்கையின்படி, 1995-ல் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம்’ (PWD Act 1995) இயற்றப்பட்டது. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையம் வெவ்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது.
ஆசிய-பசிபிக் பகுதிகளுக்கான சமூகப் பொருளாதார ஆணையம் (ESCAP), தென்கொரியாவின் இன்சன் நகரில் 2012-ல் அரசுகளுக்கு இடையிலான ஓர் உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டியது. இக்கூட்டத்தின் விளைவாக 10 இலக்குகள் முன்வைக்கப்பட்டன. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டது. இந்த 10 இலக்குகளில் ஒன்று அந்தந்த அரசுகள் உரிமைகளை உண்மையாக்குவதற்கான தகுந்த சட்ட வடிவங்களை உருவாக்குவது. ஆனால், இந்தியா அதை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டியது.
பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2016-ல் அப்போது நடைமுறையில் இருந்த மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்குப் பதிலாக (PWD Act 1995) மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPWD-2016) என்ற புதிய சட்டத்தை இந்திய அரசு இயற்றியது. இச்சட்டம் நீர்த்துப்போன ஒன்று, இன்சன் நோக்கத்தை ஈடேற்றப் போதுமானதல்ல என்பதே சமூகநல அமைப்புக்களின் கருத்து. இன்சன் உத்தியின் மிக முக்கிய இலக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது. ஆனால், இந்திய அரசு இதற்காகச் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை.
உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் உரிமை பற்றிய பல நூறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, இருப்பது மத்திய அரசே என்பது அரசு மாற்றுத் திறனாளிகளை எப்படி அணுகுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.68 கோடிப் பேர் மாற்றுத் திறனாளிகள், இது மொத்த மக்கள்தொகையில் 2.21%. இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.42 லட்சம். இன்றைய நவீன மருத்துவ முறையில், பல்வேறு உடற்குறைபாடுகள் எளிதில் தடுக்கப்படவும் முன்கூட்டியே கண்டறிந்து களையப்படவும் இயலும் என்ற நிலையில், உடற்குறைபாடுள்ள குழந்தைகளின் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.
மாற்றுத்திறனாளிகளில் 5% பேரே பட்டதாரிகள் என்பது இது தொடர்பில் நாம் வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது. கடும் முயற்சிக்குப் பின், அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்கப் பெற்றவர்களின் பணிச் சூழல்கூட மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. பொருளாதாரத் தற்சார்புதான் மாற்றுத்திறனாளிகளுக்கு மானமிகு வாழ்வை உறுதிசெய்யும். அதற்குக் கல்வியும் வேலைவாய்ப்புமே நிலையான தீர்வு. அரசுத் துறையில் வேலைவாய்ப்புகள் அருகிவரும் நிலையில், தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
தனது ஒரு பகுதியினரைப் புறந்தள்ளிவிட்டு, சமூகம் முன்னேறிவிட முடியாது. ஒருங்கிணைந்த வளர்ச்சியே நீடித்து நிலைக்கும். மாற்றுத்திறனாளிகளின் சிக்கல், ஒரு சமூகச் சிக்கலாக உணரப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு விரிவான இயக்கமாய் மாற்றப்பட வேண்டும். இன்சன் உத்தியின் இரண்டாம் இலக்காய் இருக்கும் அரசியல் அதிகாரம் அளித்தல், இதற்குப் பெரும் துணையாக இருக்கும். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களுக்கான உறுப்பினர்கள் எழுப்பும் குரலே உண்மையான உரிமைக் குரலாக இருக்கும்.
- கி.வே.கிருட்டிணமூர்த்தி, முன்னாள் பொதுச்செயலாளர், அகில இந்திய பார்வைக் குறை வங்கி ஊழியர்கள் நலச் சங்கம்
- தொடர்புக்கு: kiveyki@yahoo.co.in
குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இக்கட்டுரையானது வாட்ஸ் ஆப் தளம் வாயிலாகப் பகிரப்பட்டது. கட்டுரையின் செறிவு மற்றும் ஆழம் கருதி அது ஒரு முக்கிய ஆவணம் என்ற வகையில் சவால்முரசு தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்டுரையைப் பதிப்பித்தவர்களுக்கோ, அதனை எழுதியவருக்கோ ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அவை தெரிவிக்கப்படும் நிலையில் தளத்தில்லிருந்து கட்டுரை நீக்கப்படும்.
***ஆசிரியர்க்குழு
Be the first to leave a comment