கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், சிறந்த மாற்றுத்திறனாளிப் பணியாளர் விருதினை அன்பு நண்பரும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்புத் தலைவருமான திரு. அரங்கராஜா அவர்கள் முதல்வரிடமிருந்து பெற்றிருக்கிறார். பார்வையற்றோரின் அன்றாட இடர்களில் துணைநிற்பவர். இன்றைய நிலையில் பார்வையற்றோருக்காகப் பொது ஊடகத்தளத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே குரலுக்குச் சொந்தக்காரர்.
பட்டதாரிகள் சங்கம், தாய்க்கரங்கள் அறக்கட்டளை, தனிப்பட்ட உதவிகள், எழுத்து, முக்கிய பயிற்சிப் பட்டறைகளில் பார்வையற்றோர் குறித்த உரைகள் வழங்குவது என இவர் பார்வையற்றோர் தொடர்பான பல்வேறு தளங்களில் தொடர்ந்து அயராது இயங்கி வருகிறார். மேலும், எந்த அரசானாலும், அதிகாரிகளானாலும் தனக்கு மனதில்பட்டதை மிகத் துணிச்சலான முறையில் முன்வைக்கத் தயங்காதவர்.
சங்கத்தின் பொறுப்புத் தலைவர் என்பதால், இன்றைக்கும் கணிசமான பார்வையற்றோரின் விமர்சனங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் அதிகம் எதிர்கொள்பவர் நண்பர் ராஜா. ஆயினும் தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்துத் தொடர்ந்து ஒரு போராளியாக அவர் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் விருது அவருக்கு ஒரு புதிய உற்சாகத்தைவழங்கும் என நம்புகிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் மாநில அரசு வழங்கும் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தாலும் அந்தப் பெயர்கள்கூட அதிகம் அறிந்திராத, அதனால் அந்த நிமிடமே மறந்து போகிற ஒன்றாகத்தான் நான் உணர்ந்திருக்கிறேன். மேலும் விருது பெறுபவர்களில் வெகு சிலரைத்தவிர பலர் அரசின் நிலைய வித்வான்களாகச் செயல்பட்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால், நண்பரின் குரல் பல நேரங்களில் ஒரு சாமானியப் பார்வையற்றவரின் குரலைப் பிரதிபளிப்பதாக, அல்லது சாமானிய தளத்தின் குரல்களை அது அரசுக்கு எதிரானதாக இருந்தாலும் அதனைப் பொதுத்தளத்தில் முழங்கச் செய்வதாகவுமே இருந்திருக்கிறது. ஆகவே அது என்னுடைய குரலும்தான் என்பதால், மாநில அரசின் இந்த விருது எனக்கு மனதிற்கு நெருக்கமான ஒன்றாகப்படுகிறது.
நண்பர் திரு. அரங்கராஜாவுக்கு சவால்முரசு சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
***ப. சரவணமணிகண்டன்
வாழ்த்துகள் திரு. ராஜா
Be the first to leave a comment