ஜூலை 6
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்
அமைச்சராகப் பணியாற்றிய திரு. தவார் சந்த் கெகலோட்
அவர்கள் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்தே துறையின் அடுத்த அமைச்சர் யார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கியது. மறுநாள் வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பட்டியலில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு புதிய அமைச்சர் மாண்புமிகு திரு. வீரேந்திரக்குமார் காட்டிக்
அவர்களோடு, மூவர் இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டு்ளனர்.
யார் இந்த வீரேந்திரக்குமார்? புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று இணையமைச்சர்களின் பின்னணி என்ன? அலசத் தொடங்கியதில் சிக்கிய சில சுவாரசியத் தகவல்கள் இதோ.
பஜாஜ் ஸ்கூட்டர் பவனி
67 வயதாகும் அமைச்சர் வீரேந்தர் குமாரின் சொந்த மாநிலம் மத்தியப்பிரதேசம். மாநிலத்தின் சாகர் மக்களவைத் தொகுதியிலிருந்து 4 முறையும், தற்போதைய டிக்கம்கார் தொகுதியிலிருந்து 3 முறையும் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2017 மோடி அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத்துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். பட்டியலினத்தைச் சார்ந்த இவர், பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
சாகர் நகரில் தன் தந்தை வைத்திருக்கும்் மிதிவண்டி பஞ்சர் கடையில் அவருக்கு உதவியாளராக இருந்த வீரேந்தர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊழியர். மறைந்த திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் இயக்கத்தில் பங்கேற்று, 1975ல் அமல்ப்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலகட்டத்தில் 16 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.
இன்றும் தன்னுடைய டிக்கம்கார் மக்களவைத் தொகுதியில் பழைய பஜாஜ் ஸ்கூட்டரில் மிக எளிமையாக வளம்வரும் அமைச்சர், மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ராம்தாஸ் அத்வாலே இணையமைச்சர்
கடந்த 2016 முதல் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சராக இருக்கும் மாண்புமிகு ராம்தாஸ் அத்வாலே அவர்கள் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். இந்தியக் குடியரசுக் கட்சியிலிருந்து பிரிந்த இந்தியக் குடியரசு (A) என்ற கட்சியின் தலைவர். தனது சர்ச்சைக் கருத்துகளால் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் இவர், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முன்னால் சமூகநலத்துறை அமைச்சர், நடிகர், பூமிகா வார இதழின் ஆசிரியர் எனப் பலமுகங்கள் இவருக்கு உண்டு என்றாலும், தன் அதிரடிப் பேச்சுகளால் மட்டுமே அதிகம் அறியப்படுபவர் இவர். கடந்த 2020 பிப்பரவரி மாதத்தில் சில துறவிகளோடு சேர்ந்துகொண்டு, கரோனாவை விரட்டுவதாக திரு. ராம்தாஸ் அத்வாலே
ஒருங்கிணைத்த வழிபாட்டுக் கூட்டம் தொடர்பான
காணொளி சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.
“ராகுல் காந்தி ஒரு தலித் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும், இட ஒதுக்கீட்டை 50லிருந்து 75 விழுக்காடாக உயர்த்தி, எல்லாப் பிரிவினரையும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக அறிவிக்க வேண்டும், தலித்துகளின் மீதான ஒடுக்குமுறையை எதிர்கொள்ள தலித்துகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும்.” இப்படி அன்னார் உதிர்த்த வார்த்தைகளெல்லாம் அதிரடி ரகம்தான்.
தனது கட்சியில் குழந்தைகளுக்கான கிளை அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகத் தன்னுடைய 12 வயது மகனை நியமித்ததன் மூலம், தமிழ்நாட்டு முன்னணி அரசியல்வாதிகளுக்கே முன்னோடியாகத் திகழும் பெருமைக்குச் சொந்தக்காரர்.
அபய நாராயணசாமி இணையமைச்சர்
நாராயணசாமி என்ற பெயரை அமைச்சரவைப் பட்டியலில் பார்த்ததுமே, காங்கிரஸைச் சேர்ந்த புதுவையின் முன்னால் முதல்வர் எப்போது பாஜகவில் சேர்ந்தார் என்ற ஐயம் எழுந்துவிட்டதைத் தவிர்க்க முடியவில்லை. தற்போதைய கலவரமான நிலவரங்களில் எதுவும் சம்பவிக்கலாம்தானே.
ஆனால், இணையமைச்சராக பதவியேற்றுள்ள அபய நாராயணசாமி
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். சித்திர துர்கா மக்களவையிலிருந்து பாஜக சார்பில் 2019 தேர்தலில் வென்றவர். மாநிலத்தின் பட்டியல் இன வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு, இவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கர்நாடக அரசியல் நோக்கர்கள்.
தன் திறமையான பேச்சால் மக்களைக் கவர்ந்திழுக்கும் நாராயணசாமி, கடந்த ஆண்டு தன் சாதியின் பெயரால் தும்கூர் மாவட்டம், பாவ்கடா தாலுகாவின் கோலார்ஹத்தி கிராமத்தில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பது வரலாற்றின் மோசமான தருணம்
பிரதிமா பூமிக் இணையமைச்சர்
52 வயதாகும் திருமதி. பிரதிமா பூமிக்,
பாஜக சார்பில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மேற்கு திரிபுராவிலிருந்து வெற்றி பெற்றவர். 1991ல் திரிபுரா பாஜகவில் சேர்ந்த இவர், திரிபுரா மாநிலத்திலிருந்து ஒன்றிய அமைச்சராகும் முதல் அரசியல்வாதி என்கிற பெருமையைப் பெறுகிறார்.
கரோனா நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விளிம்புநிலை மக்களான ஊனமுற்றோர், திருநங்கைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான துயர் துடைப்பதையே தங்களின் முதன்மையான செயலாகக்கொண்டு களம்புக வேண்டியது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் கடமை.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் சவால்முரசு சார்பில் வாழ்த்துகள்.
***
தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்
Be the first to leave a comment