முனைவர் கு. முருகானந்தன்
காவல்த்துறையில் பணிபுரிந்த தனது அண்ணன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த லீசம்மா ஜோசப் என்ற ஊனமுற்ற பெண் கருணை அடிப்படையில் 1996-இல் அதே துறையில் தட்டச்சுப் பணியாளராக கேரள அரசால் நியமிக்கப்பட்டார். 1998-இல் பதவி உயர்வுக்கான தேர்வில் தேர்ச்சிபெற்ற லீசம்மா 2001-இல் இளநிலை எழுத்தர் பணிக்கும், பின்னர் 2004-இல் முதுநிலை எழுத்தர், 2015-இல் காசாளர் ஆகிய பணிகளுக்கும் பதவி உயர்வு பெற்று, தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
லீசம்மா போலியோவாள் பாதிக்கப்பட்டு, 55 விழுக்காடு ஊனமுற்றவர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வு மறுக்கப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு இணையாகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஊனமுற்றோருக்கான முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தால், ஜூலை 2002-இல் முதுநிலை கணக்காளர், மே 2012-இல் காசாளர், பின்னர் இளநிலை கண்காணிப்பாளர் ஆகிய பதவி உயறுகளைப் பெற்றிருக்க வேண்டும். தனக்கு ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப் படாததை லீசம்மா கேரள பணியாளர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். ஆனால், 1995 ஊனமுற்றோர் சம வாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு, முழுப் பங்கேர்ப்புச் சட்டம் (PWD Act of 1995) பணி வாய்ப்பில் வழங்க வேண்டிய இட ஒதுக்கீடு பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளது, அச்சட்டம் பதவி உயர்வுக்குப் பொருந்தாது என்று கூறி அவரது முறையீட்டைத் தள்ளுபடி செய்தது தீர்ப்பாயம்.
அம்முடிவை எதிர்த்து கேரள உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தார் லீசம்மா. கேரள உயர்நீதிமன்றம் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயறு பெறுவதற்கு லீசம்மா தகுதியானவர் என்று தீர்ப்பளித்து, அவ்வாறு முறையாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய பணப் பலன்களை கணக்கிட்டு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இத்தீர்ப்பினை எதிர்த்து கேரள அரசு செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தும், பதவி உயர்வுகளில் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்தும் கடந்த 28.ஜூன்.2021 அன்று மற்றுமொரு சிறப்பான தீர்ப்பினை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். ஊனமுற்றோர் உரிமைப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பினை வழங்கியுள்ள சஞ்சை கீஷன் கௌல், சுபாஷ் ரெட்டி அமர்வும், நீதிமன்ற உதவியாளராகச் செயல்பட்ட கௌரவ் அகர்வால், அவருக்கு ஆலோசனைகள் வழங்கிய சந்தோஷ்குமார் ருங்க்தா, அர்ச்சித் வர்மா ஆகியோரும் நிச்சையம் பாராட்டுக்கு உரியவர்கள்.
ஏன் பதவி உயர்வில் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டை லீஸம்மாவுக்கு வழங்க முடியாது என்பதற்கு கேரள அரசு இரு காரணங்களைத் தெரிவித்திருந்தது:
(1) 1995 சட்டம் 33 பணி நியமனங்களில் ஊனமுற்றோருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளதே அன்றி பதவி உயர்வில் அவ்வகை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டுமென்று கூறவில்லை;
(2) தனது சகோதரர் இறந்ததால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற லீசம்மா ஜோசப் 1995 ஊனமுற்றோர் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் கோர முடியாது. இவ்விரு வாதங்களையும் நிராகரித்துள்ள கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்சநீதி மன்றம், இவை தொடர்பான கூடுதல் விளக்கங்களையும் அளித்துள்ளது. இது தொடர்பாக நீதி அரசர்களால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர் (Amicus Curiae) கௌரவ் அகர்வால் அளித்த விளக்கங்களைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், 1995 ஊனமுற்றோர் சட்டத்தின் பிரிவு 32 (பணிகளை (அடையாளம் காணுதல்), பிரிவு 33 (வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு) ஆகியவை அதே சட்டத்தின் பிரிவு 47, உட்பிரிவு இரண்டு கூறியுள்ளபடி அரசுகள் ஊனமுற்றோருக்கு பதவி உயர்வுகளில் எந்தவிதத்திலும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற அம்ஸத்தோடு சேர்த்தே புரிந்துகொள்ளப் படவேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஒருவர் பதவி உயர்வு அல்லது பிற உரிமைகளைக் கோரும்போது ஊனமுற்றுள்ளாரா என்பதை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும் என்றும், அவர் எந்த விதத்தில் பணி நியமனம் பெற்றார் என்பது குறித்த பரிசீலனை அவசியமற்றது என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறி இப்படி ஒரு காரணத்தை இனி எந்தச் சூழலிலும் ஊனமுற்றோருக்கு எதிராக அரசுகள் அல்லது அரசு நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதற்கு முன்பே, கடந்த 14 மற்றும் 15 ஜனவரி 2021 தேதிகளில் ரோகிண்டன் நாரிமன், அனிருதா போஸ், ராம சுப்ரமணியன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு ஊனமுற்றோருக்கு பதவி உயர்வில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியிருந்தது. தற்போதைய தீர்ப்பு அதனை உறுதி செய்வதாகவும், ஒருவகையில் அத்தீர்ப்புக்குச் செயல்வடிவம் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.
“சரிதான்… கல்வியிலும் இட ஒதுக்கீடு, பணி வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, இப்போது பதவி உயர்வீலும் இட ஒதுக்கீடா?” என்ற அயர்ச்சியும் மிரட்சியும் சிலருக்குத் தோன்றக் கூடும். ஆனால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஊனமுற்றோர் எல்லாப் பிரிவு பணிகளிலும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதை சாத்தியப் படுத்த முடியும். எல்லாவகை ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் இந்த தர்க்கம் பொருந்தும் என்பதே எனது கருத்து. அதாவது, நேரடி நியமனம் இன்றி, பதவி உயர்வின் மூலம் மட்டுமே நிரப்பப்படும் ஏ மற்றும் பி பிரிவு அரசுப் பணிகள் பல உள்ளன.
ஊனமுற்றோருக்கான 1996 சட்டமாயினும் சரி, 2016 உரிமைச் சட்டமாயினும் சரி, முறையே 3 மற்றும் 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைப் பின்பற்றுவதற்கு பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படும் பணிகளிலும் இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகிறது. ஏ பிரிவில் 100 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படுவதாகக் கொள்வோம். 2016 ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தின்படி அவற்றுள் 4 பணியிடங்கள் பல்வகை ஊனமுற்றோருக்கு உரிய பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் வழங்கப்படவேண்டும். இச்சூழலில் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்றி, பதவி உயர்வுக்குத் தகுதியான 4 ஊனமுற்றோருக்கு முன்னுரிமை வழங்கினால் மட்டுமே அவ்வாறு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதிசெய்ய முடியும். இல்லை எனில், பொதுப் பிரிவினரோடு ஒன்றாக பதவி உயர்வு கிடைக்கும்வரை ஏ பிறிவீல் ஊனமுற்றோர் பிரதிநிதித்துவம் இருக்காது.
மேலும், இட ஒதுக்கீடு என்ற கட்டாயத்திற்காக அன்றி, எந்தவித ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியைச் சார்ந்தவர்களையும் பணியில் தனக்கு இணையாக நியமித்துக்கொள்ள பெரும்பாலான அதிகாரிகளும் நிறுவனங்களும் விரும்புவதில்லை என்பதே உண்மை. மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் 19-ஆம் பத்தி ஊனமுற்றோரை சமமாகக் கருதும் சமூக மனநிலை உருவாக வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும், அவ்வாறான மனநிலை இன்னூம் உருவாகாததன் விளைவாகவே சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுப்பதற்கு அதே சட்டத்தின் பிரிவுகள் பயன்படுத்தப் படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளதற்குக் காரணம், ஏ மற்றும் பி பிரிவுகளில் பல்வேறு பணியிடங்கள் ஊனமுற்றோர் பணியாற்றுவதற்கு உரியனவாக அடையாளம் காணப்படவில்லை என்பதைக் காரணம் காட்டீயே, 1995 சட்டத்தின் பிரிவு 32-இன் படி பெரும்பாலான பதவி உயர்வுகளில் ஊனமுற்றோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். “சட்டங்கள் நிறைவேற்றப் பட்டதற்கான நோக்கங்களையே முறியடிக்கும் வகையில் எவ்வாறு சமூக மனநிலை செயல்படுகிறது என்பதற்கு 1995 சட்டத்தின் பிரிவு 32 திரிக்கப்படுவதை மிகச் சிறந்த உதாரணமாகக் (Classic Example) கொள்ளலாம்” என்று சாடியுள்ளது நீதிமன்றம்.
ஜனவரி 14-15 தேதிகளில் வழங்கப்பட்ட தீர்ப்பும், இத்தீர்ப்பும் சேர்ந்து ஊனமுற்றோருக்கான பணிச் சமத்துவத்தையும் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும், அதிகாரப் பரவலாக்கத்தையும் உறுதிசெய்வதில் நீண்டகாலப் பங்காற்றும் என்பதில் ஐய்யமில்லை. ஊனமுற்றோருக்கு உரிமைகளை உறுதிசெய்வதிலும் சமூகநீதியை நிலைநாட்டுவதிலும் இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாகத் திகழும் தமிழ் நாட்டில், ஊனமுற்றோருக்கு பதவி உயர்வுகளில் உரிய இட ஒதுக்கீட்டினை உறுதிசெய்து மீண்டும் ஒரு முன்மாதிரியைப் படைக்கவேண்டும் தமிழக அரசு!
***
கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார், இவர் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவன உறுப்பினர்.
தொடர்புக்கு: send2kmn@gmail.com
Be the first to leave a comment