“பணிவிலக்கு வேண்டாம், வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதியுங்கள்” தமிழக முதல்வருக்கு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் கடிதம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சின்னம்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சின்னம்

தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றது.

கோவிட் 19 இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10ஆம் தேதிமுதல் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அவ்வப்போது அது சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என தற்போதுவரை நீடித்துவருகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என கடந்த மே 5ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அந்த ஆணை கடந்த ஜூன் 20ஆம் தேதிவரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தொடங்கியிருக்கிறது. ஆயினும், கோவிட் பரவல் முற்றிலுமாக நீங்காத காரணத்தால், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றிய அரசைப் போலவே, தமிழ்நாடு அரசும் எதிர்வரும் ஜூன் 30 வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்குப் பணிவிலக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பார்வையற்றோர் அச்சக ஊழியர் சங்கம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. இதைப்போலவே, அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கமும் தனது கோரிக்கையினை தமிழ்நாடு அரசிடம் முன்வைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிர்வரும் ஜூன் 30 வரை பணிவிலக்கினை பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தும் நிலையில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (CSGAB) அரசுக்கு மிக முக்கியமான கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், கோவிட் தொற்று முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டில் இயல்புநிலை திரும்பும் வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்காமல், அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், தற்போது கோவிட் பரவல் குறைந்து வருவதால், சில மாவட்டங்களில் ஐம்பது விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஆட்டோ டாக்சி பயணத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கரோனா பரவல் அச்சம் காரணமாக, பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகளை எதிர்கொள்வதில் சில நடைமுறை இடர்பாடுகள் இருப்பதையும், குறிப்பாகப் பார்வை மாற்றுத்திறனாளிகள் அத்தகைய சிக்கல்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடுதலையே தங்களின் இயக்கத்தில் முக்கிய ஆதாரமாகக்கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிக கெடுவாய்ப்பினை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றனர்.  அதன் விளைவாகத்தான், தற்போதைய கோவிட் இரண்டாம் அலையில், சுமார் 25ற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொற்றினால் இறந்திருப்பது குறித்து அந்தக் கடிதத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கணினி மற்றும் செல்பேசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாற்றுத்திறனாளி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி மற்றும் அலுவல்சார் பணிகளைத் திறம்பட நிர்வகித்து வருவது பற்றியும் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவிலக்கு என்பதை மாற்றி, மாநிலத்தில் இயல்புநிலை திரும்பும்வரை அவர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தின் வாயிலாக அழுத்தமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நன்கு ஆராய்ந்து, பல்வேறு தரவுகளையும், சாத்தியங்களையும் முன்வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தின் ஆழத்தை நிச்சயம் அரசு பரிசீலிக்கும் என்றே தோன்றுகிறது.

முழு கடிதத்தையும் படிக்க:

கவிதை: பொம்மை அதிகாரங்கள்

களம்: விளிம்பிலிருந்து மையம் நோக்கி ஒரு வெற்றிப்பயணம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *