சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டிஇஎல்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. எபிநேசர் என்கிற புஷ்பநாதன் நேற்று மாலை இயற்கை எய்தினார். கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், அவர் உடல்நலிவுற்றமை குறித்தும், அவருக்கு உதவிகள் செய்திட முன்வருமாறும் சவால்முரசு வலைதளத்தில் ஒரு பதிவினை எழுதியிருந்தேன். தொடர்ச்சியாக அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சூழலில் எதுவும் கைகூடாமல் போனது வருத்தமாய் இருக்கிறது. எனினும், பதிவினைப் படித்த்உவிட்டு, பள்ளியின் முன்னால் ஆசிரியர்களான மறைந்த திரு. போஸ் மற்றும் மறைந்த திருமதி. கல்பனா அவர்களின் மூத்த மகள் திருமதி. நேசமணி சோன்யா அவர்கள் திரு. புஷ்பநாதன் அவர்களின் வீட்டாரைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்திருக்கிறார்.
அன்னாரின்நினைவைப் போற்றும் வகையில் அவரைப் பற்றிய விவரங்களை இணைத்து, அவரின் உருவப்படம் பள்ளியின் சார்பாகத் திறக்கப்பட்டால், அதுவே அவருக்கான சிறந்த அஞ்சலியாக அமையும். அதுவும் அவர் பெரிதும் வீட்டிருந்த ஆடிட்டோரியம் என்றால் வெகு பொருத்தமாய் இருக்கும்.
இதே நடைமுறையினை இதுவரை இயற்கை எய்திய பிற ஆசிரியர்களுக்கும் அவர்களது நினைவுதினத்தில் செய்தால், அது அவர்களின் செயலுக்கு ஒரு நன்றிக்கடனாய் மட்டுமின்றி, ஒரு காலகட்டத்து பார்வையற்றோர் கல்வி வரலாற்றின் சான்றாவணமாக எக்காலத்திற்கும் எஞ்சும்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
***
ப. சரவணமணிகண்டன்
Be the first to leave a comment