லிம்கா கின்னஸ் சாதனை நாயகனும், ராகப்பிரியா இசைக்குழுவின் நிறுவனருமான ஆட்டோகிராஃப் புகழ் திரு. கோமகன் (49) அவர்கள் கரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தினார். தனக்கிருந்த இசைஞானம் ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1991ல் கோமகனின் ராகப்பிரியா என்ற இசைக்குழுவை நிறுவி, உலகெங்கும் சுமார் 3000க்கும் மேற்ப்பட்ட இன்னிசைக் கச்சேரிகளை நடத்தியவர். இயக்குநர் திரு. சேரன் இயக்கிய வெற்றிப்படமான ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடலில் தோன்றிய அவர், பசுபதி மேபா ராசக்கபாளையம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி,’ என்ற பாடலிலும் தோன்றினார்.
இயக்குநர் திரு. பெஞ்சமின் இயக்கத்தில் முதன்முதலாய் என்ற திரைப்படத்திற்குப் பாடல் மற்றும் பின்னணி இசை வழங்கியிருக்கிறார். இவரது குழுவில் பிரபல தமிழ்த்திரையிசைப் பின்னணி பாடகர்களான மறைந்த பாடும் நிலா திரு. S.P.B. பாலசுப்பிரமணியம்,திரு. மனோ, திருமதி. S. ஜானகி, திருமதி. L.R.ஈஸ்வரி எனப் பலரும் பாடியிருக்கிறார்கள்.
682 பாடல்களைப் பாடி, தொடர்ந்து ஐம்பது மணிநேரம் இசைக்கச்சேரி நடத்தி, 48 மணிநேரம் தொடர்ந்து இசைக்கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்திருந்த ஹங்கேரி இசைக்குழுவின் சாதனையை, இவரது இசைக்குழு முறியடித்தது. இந்தக் கச்சேரியில் பாடப்பட்ட அனைத்து பாடல்களும் திரும்பப் பாடப்படாமல், நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
Be the first to leave a comment