2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் நாள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. மே 2 ஆம் நாள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகம் 125 தொகுதிகளையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 4 தொகுதிகளையும் வென்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்கு நாடு முன்னேற்ற கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் திமுக கூட்டணியில், சிபிஎம் மற்றும் சிபிஐ தலா இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அஇஅதிமுக 65 இடங்களிலும், புரட்சி பாரதம் கட்சி ஒரு இடத்திலும், பாரதிய ஜனதா கட்சி 4 இடங்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலனிற்கு மிகவும் அணுக்கமான தேர்தல் அறிக்கையினை வழங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. பிற கட்சிகளான மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் போன்றவையும் தங்கள் தேர்தல் வெற்றியைத் தொடங்க இயலவில்லை.
கலைஞர் திரு. மு. கருணாநிதி மற்றும்செல்வி. ஜெ. ஜெயலலிதா என்கிற இரு ஆளுமைகள் இல்லாத இந்தத் தேர்தலில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்வரும் மே 7ஆம் தேதி முதல்வராகப் பதவி ஏற்கும் திரு. ஸ்டாலின் அவர்களின் முன்னால் கரோனா பெருந்தொற்று காலம் என்னும் பெரும் சவால் விரிந்து கிடக்கிறது.
180 இடங்கள் என்ற திமுகவின் எதிர்பார்ப்பை மக்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள் என்றாலும், மக்கள் தந்திருக்கும் இந்த தீர்ப்பு பல்வேறு நிறங்கள் கொண்ட கட்சிகள், அவற்றின் குரல்கள் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது ஜனநாயக விழுமியங்கள் பண்படுவதற்குப் பெரிதும் உதவும்.
180, 190 தொகுதிகளை ஒரு கட்சிக்கோ, அல்லது அதன் கூட்டணிக்கோ வழங்கி கேள்விகள் அற்ற ஒற்றைப்படையான ஆட்சி வராமல் மக்களின் தீர்ப்பு தடுத்திருப்பதோடு, எதிர்கட்சிக்கும் கணிசமான இடங்களை வழங்கியிருக்கிறது. நெகிழ்வு தேசியம் கொண்ட காங்கிரஸின் குரல், ஒற்றைத்துவம் என ஒலிக்கும் பாஜகவின் குரல் அவையின் இருதுருவங்கள் என மோதி முழங்கப் போகின்றன.
இதுவரை பற்றி எரியும் முரண்களோடே பயணித்துவரும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்ற எதிரெதிர் துருவங்கள் ஆக்கபூர்வமாக அமர்ந்து பேசும் அவையாகப் பரிணமிக்கப் போகிறது தமிழக சட்டமன்றம். மக்களின் வாழ்வாதாரக் குரல்களாக தொழர்கள் முழங்குவார்கள். சிறுபான்மையினரின் அபிலாஷைகளை உரத்துப் பேச மனிதநேய மக்கள் கட்சியும் அவைக்குள் நுழைகிறது.
மாநிலத்தின் வேறெந்தத் தேர்தலையும்விட இந்தத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளாகிய நம்முடைய கோரிக்கைகளை மிகக் கூர்மையான புரிதலோடு அவையில் முன்வைக்கச் சில குரல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவர்களுள் கம்னியூஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் முக்கியமானவர்கள். இனி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைச் சங்கமான டாராஎடாக்கின் கோரிக்கைகளை அப்படியே இரு கம்னியூஸ்ட் கட்சிகளும் அவையில் எதிரொலிக்கும்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைக் குரல்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மன்றத்தில் முழங்கும். அதிலும், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆலூர் ஷானவாஸ் அவர்கள் சங்கம் நடத்திய பயிலரங்கில் இந்த வாக்குறுதியை நேரில் வந்து வழங்கிச் சென்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது. திமுக மற்றும் திராவிடர் கழகத்தின் வழியே டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் அவர்களின் குரலும் மிக எளிதாக அவையின் கவனம் பெறும்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான சட்டமன்றம், சுயமரியாதை, முற்போக்கு, தமிழர்நலன், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி, சிறுபான்மையினர் வேண்டி நிற்கும் சமத்துவம், மத இனப் பிரிவினைகள் அற்ற கூட்டாட்சி என எல்லாக் குரல்களின் விளைநிலமாய், பல்வேறு நிறங்கள் தோன்றி, ஒன்றுடன் மற்றொன்று கலந்து, வண்ணமயமான வானமாய் விரியப் போகிறது. இந்த நிறங்களின் மன்றத்தில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் மேலும் புத்தொளி பெறும் என்பதில் ஐயமில்லை.
***
ப.ச
தொடர்புடைய பதிவுகள்:
Be the first to leave a comment