தமிழகத் தேர்தல் 2021: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் யார் பக்கம் ஓர் அலசல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
மின்னணு வாக்கு இயந்திரம்
மின்னணு வாக்கு இயந்திரம்

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் யார் பக்கம் என்று யோசித்தால், கலவையான முடிவுகளையே ஊகிக்க வேண்டியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் முக்கியக் கோரிக்கைகளைக்கூட கவனப்படுத்தாத தேர்தல் அறிக்கையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை இருக்கிறது என உருக்கமாக அறிக்கை விடுத்தார் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் அவர்கள். ஆனாலும் டிசம்பர் 3 இயக்கம் திமுக தலைமையிலான கூட்டணியையே ஆதரிப்பது என முடிவெடுத்திருக்கிறது.

உதயசூரியன்
திமுகவின் சின்னம்

அதுமட்டுமல்ல, திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அம்சங்களில் பலருக்கும் ஆட்சேபனை இருந்தாலும், திமுகவிடம் எளிதில் உரையாட வாய்ப்பிருப்பதாகப் பல மாற்றுத்திறனாளி சங்கங்களும் நம்புகிறார்கள். அத்தோடு, கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களைப் பொருட்படுத்தாமல் ஆளும் அதிமுக அரசு பாராமுகமாக இருந்தது என்கிற ஆழமான கோபம் பலரிடம் காணப்படுகிறது. அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் செயல்பட்டுவரும் இடதுசாரி பின்னணி கொண்ட டாராடாக் சங்கமும் திமுக கூட்டணியையே ஆதரிக்கும். திமுக கூட்டணியின் அங்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கப் போராட்டத்திற்குத் தனது வெளிப்படையான ஆதரவை முன்வந்துவழங்கியிருந்தது.  இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டிப் பார்க்கையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளைப் பல்வேறு தளங்களில் இன்னும் சிறப்பாகவும், ஆக்கபூர்வமாகவும் எடுத்துச் செல்ல திமுக கூட்டணி வெற்றிபெறுவது அவசியம் எனப் பல சங்கங்கள் கருதுகின்றன. அத்தோடு, மாற்றுத்திறனாளிகளில் ஒரு தரப்பும் ஆட்சி மாற்றத்தைக் கோரும் தரப்பாக உள்ளது.

இரட்டை இலை
அதிமுகவின் சின்னம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான ஆதரவும் மாற்றுத்திறனாளிகளிடம் கணிசமாகவே காணப்படுகிறது. அதிலும், சில தீவிரமான பார்வையற்ற சங்கவாதிகள் வெளிப்படையான அதிமுக சார்புடனேயே காலங்காலமாகச் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். திமுகமீது தொடர்ச்சியாகச் சொல்லப்படும் வாரிசு அரசியல், நில அபகரிப்பு, கடந்த 2006 2011 ஆட்சிக் காலத்தின் கசப்பான செயல்பாடுகள் என சாமானியர்களைப் போன்றே மாற்றுத்திறனாளிகளி்ல் கணிசமானவர்களும் அதிமுகமீதான தங்களின் கரிசனத்திற்கு திமுகமீதான இதுபோன்ற வெறுப்பையே காரணமாகச் சொல்கிறார்கள். ஆனால், 2010 ஆண்டிற்குப் பிறகு வாக்களிக்க வந்த பெருவாரியான மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு திமுகமீது இருப்பது வேறு வகையான கோபம். ஈழப்பிரச்சனையும் அன்றைய முதல்வர் கலைஞர்  கடைபிடித்ததாகச் சொல்லப்படும் கனத்த மௌனமும். ஆனால், இதற்காகவெல்லாம் அவர்கள் மூத்தவர்களைப் போல அதிமுகமீது பாசம் கொள்பவர்களாக இல்லை, அல்லது அதற்கான அவகாசத்தை திரு. சீமான் அவர்கள் அவர்களுக்கு வழங்கவில்லை. கூடவே கடந்த 2011-16 ஆட்சியின்போது, பார்வையற்றவர்களிடம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் அரசும் அதன் காவல்த்துறையும் நடந்துகொண்ட முறை இன்னும் இளைஞர்கள் மனதில் ஆறா வடுவாக எஞ்சியுள்ளது. காட்டுக்குள் இறக்கிவிட்டவர்கள் என்று அவர்கள் அந்த நிகழ்வுகளை நினைவுகூர்கிறார்கள். எனவே, திமுக அதிமுக இருதரப்பையுமே அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஒரு மாற்று வேண்டும் என்ற அடிப்படையில் திரு. சீமான் திராவிடக் கட்சிகள்மீது முன்வைக்கும் காத்திரமான விமர்சனங்களைத் தங்களின் உள்ளார்ந்த கேள்விகளாகப் பார்க்கும் சாமானிய இளைஞர்களைப் போலவே, பார்வையற்றோர் உட்பட கணிசமான மாற்றுத்திறனாளிகளுக்கு சீமான்மீது ஒரு பிடிப்பு இருக்கிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளிடையே நாம் தமிழர் கட்சியும் பரவலான அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கிறது.

ப்ரெஷர் குக்கர்
அமமுகவின் சின்னம்

அப்படியானால், தேமுதிக, அமமுக, கமல் அவர்களின் மக்கள் நீதி மையத்திற்கு மாற்றுத்திறனாளிகளிடம் வரவேற்பு இல்லையா என்றால், மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். அமமுக தனது தேர்தல் அறிக்கையால் மாற்றுத்திறனாளிகளைக் கவர்ந்துள்ளது. அத்தோடு, மாற்றுத்திறனாளிகளின் தொடர்ச்சியான போராட்டங்களை தனது அறிக்கையின் வாயிலாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றவர் தினகரன் எனவும் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள். ஆனால், அவையெல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது ஐயமே. திருமதி. சசிகலாவை எதிர்கால அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவராகக் கணிக்கும் ரத்தத்தின் ரத்தங்களே இன்றைய அமமுகவினர் என்பதால், பழைய அதிமுக அனுதாபிகளாக இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தொகுதி சார்ந்தும், அங்கு போட்டியிடும் வேட்பாளர் சார்ந்தும் அமமுகவிற்கு வாக்களிக்க முடிவெடுப்பார்கள் என்று தோன்றுகிறது.

விஜயகாந்த் களத்தில்இறங்கிப் பணியாற்றியவரை, அனைவரைப்போலவே மாற்றுத்திறனாளிகளும் அவரை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்தான் பார்த்தார்கள். அத்தோடு, மாற்றுத்திறனாளிகளுக்காக தனது கட்சியில் தனி அமைப்பை முதன்முதலில் உருவாக்கியவர் திரு. விஜயகாந்த். ஆனால், அதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பான கதை. இன்று பொதுத்தளத்திலேயே தேமுதிக தளர்வடைந்திருக்கிறது. அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிலரின் முதிர்ச்சியற்ற பேச்சுகளும் செயல்பாடுகளும் மாற்றுத்திறனாளிகளிடம் அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத மாற்றம் வேண்டும், ஒரு மாறுதலுக்காக என்றெல்லாம் ஒற்றைச் சிந்தனையுடன் வாக்களிக்கும் மிகச்சில மாற்றுத்திறனாளிகள் மநீமவைத் தங்கள் தெரிவாகக் கொள்ளக்கூடும். ஆனால், பரந்துபட்ட அளவில் மநீமவிற்கு மாற்றுத்திறனாளிகளிடம் செல்வாக்கைப் பார்க்க முடியவில்லை.

அரசியல் சார்ந்து ஒருசாரார் சிந்தித்து முடிவெடுத்தாலும், இன்றைய மாற்றுத்திறனாளி இளைஞர்களில் ஒரு பகுதியினர் குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஐபிஎல், புதிதாக வெளியாகும் நடிகர்களின் திரைப்படம், வெற்று அரட்டைகளைக் களமாகக் கொண்ட வாட்ஸ் ஆப், முகநூல் தளங்கள் என பொழுது கழிக்கிறார்கள். அரசியல் என்றாலே ஊழல் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள்.

வாக்களிப்பதில் பொதுச்சமூகத்தில் நிலவும் பெரும்பாலான காரணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்திப் போகின்றன. ஆனாலும், ஒரு குறிப்பிட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் வாக்களிக்கும் சுதந்திரம் என்பது அவர்களின் குடும்பத்தாரையே சார்ந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரக் கணக்கின்படி, ஏறத்தாழ நான்கரை லட்சம் மாற்றுத்திறனாளிகள் இந்தமுறை வாக்களிக்கவிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் கணக்கில்கொண்டால், பத்து அல்லது பதினோரு லட்சம் வாக்குகள் மாற்றுத்திறனாளிகள் சார்ந்ததாக இருக்கலாம். எனவே, ஒரு திடமான வாக்குவங்கியாக அவர்கள் இல்லை என்றாலும், மாற்றுத்திறனாளிகளையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்த முனைப்ப்உகொண்டுள்ள ஒரு தலைவரே (inclusive leader) முதல்வராக அமர்வது கட்டாயம். யார் அந்த முதல்வர்? மே 2ல் விடை தெரியும்.

***

சாமானியன்

தொடர்புக்கு: naansamaniyan@gmail.com

***

தமிழகத் தேர்தல் 2021: திமுக தேர்தல் அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் அரசியல் பங்கேற்பு பற்றி பேச்சே இல்லை

2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: மனங்களைப் பிரதிபளிக்கும் தேர்தல் அறிக்கை

அறிவாலயத்தின் வாசலில்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை?

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *