“அன்பான இதயமே!
நேற்று நாம் ஒன்றாகக் கழித்த கணங்களுக்குப் பிறகு உன்னிடம் “விடைபெறுகிறேன்” என்று சொன்னதற்கு மிகவும் வருந்தினேன்.
உன் அருகில் நான் இருக்கும்போதெல்லாம், சிறிதும் எனக்கு நடுக்கம் இல்லை. நீ என்னைப் பிரிந்து செல்கையில், மரணத்தின் ஆத்மா தன் சிறகுகளால் என்னை மூடுவதாக உணர்கிறேன். ஆனால், மறுகணமே என்மீதான உன் அன்பு குறித்த எண்ணங்கள், வாழ்வின் வேகத்தை என் இதயத்துள் கொண்டுவந்து சேர்க்கிறது.
இந்த உலகிலேயே மிகவும் அன்பான என் ஹெலன் இருந்தபோதும், சில மாதங்களுக்கு முன்புவரை, நான் அடைந்த வீடு எனக்கு மிகவும் வெறுமையாகத் தோன்றியது.
அந்த மாலை மிகவும் அழகாக இருந்தது. நான், திருமதி. ஃபெரு மற்றும் ஹெலன் மூவரும் கெனுவில் பயணித்தபடி இருந்தோம். அவர்கள் பேசியதை நான் எண்ணிக்கொண்டேன். அவர்கள் தூங்கிவிட்டதற்குப் பின்னர், பைன் மரத்தின் அடியில் நறுமணமும் அழகும் கொண்டு மிகவும் அமைதியாக உரைகிற உலகிற்கு இரவு வணக்கம் சொல்லிவிடலாம் என்றெண்ணி, நான் தாழ்வாரத்தை அடைந்தேன். அங்கே அந்த அமைதியை உடைப்பதாக தனது தூக்கத்தில் முனகிக்கொண்டிருந்த ஒரே ஒரு பறவையின் ஒலி இருந்தது.
முந்தைய மாலைப்பொழுதில், மனம் மயக்குவதாகவும், வெண்ணிறத்தில் அந்தியில் சாந்தமாகவும் தெரிந்த ஏரி தனது பளபளப்பை இழந்துவிட்டிருந்தது. என்னுடைய இதயம் தகித்தபடி, பொறுமை இழந்திருந்தபோதிலும், அந்த இரவின் அழகான அமைதியில் எனக்குப் பரிவு உண்டானது. ஏனெனில், நான் திரும்பிப் பார்க்கையில் என்னுடைய வாழ்க்கை ஒரு நூற்றாண்டு தொலைவாகத் தெரிவதோடு, வாழ்நாளின் அடக்குமுறை மற்றும் சுய செயல்திறன் அதன் உணர்வெழுச்சியைத் தூண்டி, அமைதியிழக்கச் செய்யவில்லை.
நான் உன்மீதான யோசனைகளிலேயே வெகுநேரமாக அமர்ந்திருந்ததோடு, என்மீதான உன்னுடைய காதலுக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்துக்கொண்டிருந்தேன். காதல்தான் எத்தனை அருமையானதும், புரிந்துகொள்ளக் கடினமானதுமாக இருக்கிறது!
காதல் மட்டுமே வாழ்க்கையின் சாரமாக இருக்கிறது. தர்க்கத்துக்கு காதலில் இடம் இல்லை. காதல் எல்லாவற்றையும்விட மேலானதும், வலிமையுடையதாகவும் இருக்கிறது. ஒரு நீடித்த கணத்திற்காக, அந்த மகிழ்ச்சியின் உச்சத்திற்கு நான் என்னை ஒப்புக்கொடுத்தேன். விதியின் மேலாதிக்கம் அற்ற காதலின் உறுதிப்பாடு மிகவும் வலிமையானது. அத்தோடு, அந்த கணத்தில், வாழ்க்கையின் அனைத்து நிழல்களும் அழகான எதார்த்தங்களாக மாறின. பிறகு, நான் துலாவிக்கொண்டும், தடுமாறியபடியும் என் வழி மீண்டு, உண்மையானவை எப்போதாவது அழகாகத் தெரிகிற, மந்தமான மற்றும் தட்டையான பூமிக்கு மீண்டும் வந்தேன்.
அன்பே! இது நான் உனக்கு எழுதியிருக்கிற முதல் கடிதம். இதில் நான் சொல்லியிருக்கும் விஷயங்களை நீ விரும்ப மாட்டாயோ என அஞ்சுகிறேன். “துக்கங்களை மீட்டி, நமது நிகழ்கால மகிழ்ச்சியை ஓய்வெடுக்கச் செய்ய நமக்கு உரிமையில்லை” என்று நீ சொல்வாய். அது அப்படித்தான், ஏனெனில், என் மீதான உன் அன்பு என்பது, நீ நேசிக்கிற உன் எல்லாக் கணவுகளுக்கும் மேலானது. நான் நமக்கிடையே வருடங்கள் ஏற்படுத்தியிருக்கிற தடைகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறேன். ஆனால், குறைந்தபட்சம், ஒரு நீண்ட காலத்திற்கேனும் நீ என்னை நேசிப்பதை விட்டுவிடமாட்டாய்.
சனிக்கிழமை மாலை உனக்கு ஏதேனும் வேலைகள் இருக்கின்றனவா? ஏனென்றால், நானும் ஹெலனும் 14 கூலிட்ஜ் அவென்யுவில் அன்றையஇரவைக் கழிக்கவிருக்கிறோம். நீ எங்களை அழைத்துப் பேசினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். நாங்கள் உன்னிடமிருந்து அழைப்பை எதிர்பார்க்கலாமா என எனக்குத் தெரியப்படுத்து.
நாம் ஏன் கேம்பிரிட்ஜ் போகிறோம் என்பதை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன். திரு. ஃபியரின் அவர்களின் படகு ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு வருவதோடு, அவர் காலை 8.15 மணிக்கு, ரெந்தமுக்கு டிராம் பிடிக்க வேண்டும். ஒருநாள் முழுக்க பாஸ்டனில் என்பது, மிகவும் வெறுப்பானது. எனவே, நாம் அவரை காலை 10 மணிக்கு பார்க்கர் இல்லத்தில் சந்தித்து, காலை உணவை அங்கேயே முடிப்போம் என யோசித்தேன். பிறகு, ட்ராலியை ரெந்தமுக்குக் கொண்டுசெல்வோம். அந்தநாள் அவருக்கு இனிமையாக அமைந்தால், அவர் தன் பயணத்தை நாடு முழுவதும் மகிழ்வோடு மேற்கொள்வார்.
இதற்கெல்லாம் மேலாக, இந்த ஏற்பாடு நான் எதிர்பார்த்ததைவிட முன்னமே உன்னை நான் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குகிறது. வழக்கத்தைவிடவும், உன்னைப் பார்ப்பதற்கான தேவையைக் கொண்டிருப்பவளாக என்னை நான் உணர்கிறேன்.
என்னுடைய ஜான் உன்னை முத்தமிடுகிறேன்.
‘I kiss you my own John and I love, you. I love, you. I love you.’”
***
தமிழில், G. சுவேதா
இது, ஹெலன்கெல்லரின் ஆசிரியரான ஆன் சலிவன் ஜான் ஆல்பர்ட் மேசிக்கு எழுதிய காதல் கடிதங்களில் ஒன்று. இலக்கிய விமர்சகரான ஜான் ஆல்பர்ட் மேசியை ராட்க்லிஃப் கல்லூரியில் சந்தித்த சலிவன் மெல்ல அவர்மீது காதல்கொள்ளத் தொடங்குகிறார். தன்னைவிடப் பதினோரு வருடங்கள் வயதில் மூத்தவரான சலிவனின் காதலை ஜானும் ஏற்க, இருவரும் 1905 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். புத்தகங்களைப் பதிப்பிப்பதில் ஹெலன்கெல்லருக்கு உறுதுணையாக இருந்தார் ஜான். ஆனால், ஜான் சலிவன் மண வாழ்க்கை, விவகாரத்து இன்றியே சில ஆண்டுகளில் முறிந்துபோனது.
எவ்வளவு இறுகிப் போன பாறையின் இடுக்கிலும் ஒரு சிறுவிதை முளைவிடுவதுபோல, காதல் புகாத மனம் என்பது ஏது? உலகில், உயர்ந்த நோக்கங்களில் ஒருமைகொண்டு முழுமைகொண்டோரின் காதல் கதைகளைப் படிக்கும்போதேல்லாம், சட்டென்று மனதில் தோன்றுவது இதுதான்.
“தியாகத்திற்கும் ஏக்கம் உண்டு”.
Be the first to leave a comment