ஒவ்வொரு பொதுத்தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் போலவே மாற்றுத்திறனாளிகளும் தங்கள் நலன் சார்ந்த ஏதேனும் அறிவிப்புகள் இடம்பெறுமா என ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருப்பார்கள். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. இதுவரை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிமையம் ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து ஓரிரு அம்சங்களைப் போகிற போக்கில் சொல்லியிருந்தன. இந்நிலையில், இன்று வெளியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் கொள்கை என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களுமே மாற்றுத்திறனாளிகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கான கொள்கை:
மாற்றுத் திறனாளிகளுக்காக ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் , அவர்களின் அடிப்படையான அவசியமான பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 15 வலியுறுத்தும் அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை என்ற அடிப்படையே இதன் மூலம் அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவுகள் 15 மற்றும் 16 ல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளின் நீண்டகால கோரிக்கையான உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு என்ற விஷயத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அர்த்தமுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்லும்.
* பொதுக்கல்வி துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி உள்ளிட்ட கல்வியை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் அளிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தபட்சம் நான்கு சிறப்பு பள்ளிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களாக அறிவித்து , அரசின் நலத்திட்டங்கள் வேறு நிபந்தனைகள் ஏதுமின்றி அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இலவச சிகிச்சை செய்வது உறுதி செய்யப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் வகையில் கொள்கை முடிவு எடுக்கப்படும்.
* மத்திய , மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க மாற்றுத்திறனாளிகளையும் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்பை நிரப்பும் விஷயத்தில் ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
* தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த அர்த்தமுள்ள வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கு வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி அதிகமாக வழங்கப்படுவதைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க ஐந்து லட்சம் வரை ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். * மாற்றுத்திறனாளிகள் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1500 லிருந்து ரூபாய் 2000ஆக உயர்த்தப்படும்.
* அதிக உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்ள அளிக்கப்படும் தொகை ரூபாய் 1000 லிருந்து 1500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளுமே மாற்றுத்திறனாளிகள்ள் தொடர்ச்சியாக அரசிடம் வைத்துக்கொண்டிருக்கும் நீண்டநாள் கோரிக்கைகள் என்பதால், அமமுகவின் தேர்தல் அறிக்கையினை அனைத்துத் தரப்பு மாற்றுத்திறனாளிகளும் பெரிதும் வரவேற்று வியந்து பாராட்டி வருகின்றனர்.
5 thoughts on “2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: மனங்களைப் பிரதிபளிக்கும் தேர்தல் அறிக்கை”