“வேதனைப் பதிவு
திமுக வின் தேர்தல் அறிக்கை மாற்றுத்திறனாளிகளுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிலிருந்து வேதனையில் உழல்கிறோம் உதாரணமாக “புதிய ஸ்மார்ட் கார்டு” ஏன்? ஏற்கனவே ஓரு ஸ்மார்ட் கார்டு உள்ளதே! அதை என்ன செய்வது? உடலில் உள்ள ஓரு ஊனத்திற்கு எத்தனை எத்தனை அட்டைகள்!! இன்னொரு ஸ்மார்ட் கார்டு வாங்க வைப்பதால், நாங்கள் எங்கள் இயலாமை மற்றொரு முறை நிரூபிக்க வைக்கப்படுகிறோம, இல்லையா? இயலாமையை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வைப்பது எங்கள் மீது ஒருவிதமான தாக்குதலாகாதா?
இருப்பது ஒரு ஊனம் ,அதற்கு ஏன் ஓராயிரம் அட்டைகள்?
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ,காலாவதியான 1995 ஊனமுற்றோர் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்வதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை !
நவீனகால சமூக நீதி கோட்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் வருகிறதே! அவ்வாறு இருக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளாட்சி இட ஒதுக்கீடு என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லாத்து ஏற்க முடியவில்லை
எத்தனையோ கூட்டங்கள் போட்டு பேசி எங்கள் கோரிக்கைகளை வடிவமைத்து தந்தோம் ,ஆனால் அது முழுமையாக புறந்தள்ளப்பட்டுள்ளது எங்களுக்கு மனவலியை தந்திருக்கிறது!
கலைஞர் அவர்கள் “நானும் உங்களை போன்று ஊனமுற்றவன் தான் ” என்று கண்களில் நீர்வடிய எங்களை ஆரத்தழுவினாரே ,அதை இப்போது நினைத்து பார்க்கிறேன், இன்னும் நாங்கள் எத்தனைக்காலம், “உடையார் முன் இல்லாதோர் போல் நிற்க வேண்டும் என்று எண்ணி எண்ணி உடைகிறோம் …..உடைந்து கொண்டே இருக்கிறோம்
பேராசிரியர் தீபக்”
**
இது டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் அவர்கள் தன் கீச்சகத்தில் எழுதிய குறிப்பு. ஒவ்வொருவரியும் வலி நிறைந்தது. திரு. தீபக் அவர்கள் திராவிட சிந்தனையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைசார் கோரிக்கைகள் குறித்து திராவிடர்க்கழக மேடைகளில் தொடர்ந்து பேசிவருபவர்.
எதிர்வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் உரிமை சார்ந்து பல கோரிக்கைகளை ஓடியோடி, ஒன்றுதிரட்டி அவற்றை அனைத்து அரசியல் கட்சித் தலைமையிடங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தார். அதிலும் பெருவிறுப்பும் நம்பிக்கையும் கொண்டு, அவர் திமுக தலைவர் திரு. ஸ்டாலின்அவர்களைச் சந்தித்து தான் தொகுத்திருந்த மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வாழ்வாதாரக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தார். அவற்றுள் முக்கியமானது, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு.
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற வைத்த கட்சி திமுக என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் அதே அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று அவர் மட்டும் அல்ல, அனைவருமே நம்பினோம். ஆனால், தேர்தல் அறிக்கை அத்தனை நம்பிக்கைகளையும் நொறுக்கியது மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் நலன் என்பது திமுகவால் ஒப்புக்காகச் சொல்லப்பட்ட ஒரு பத்தியளவிலான விடயம் என்பதையும் தெளிவாக்கிவிட்டது.
சமூகத்தின் அத்தனை பிரதிநிதிகளுடன் உரையாடியவர்கள் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்களைக்கூடப் படித்துப் பார்த்திருக்கவில்லை என்பது அவர்களின் தேர்தல் அறிக்கை மூலம் வெளிச்சமானது. மாற்றுத்திறனாளிகளை கருணைத் தளத்திலிருந்து உரிமைத் தளத்திற்கு நகர்த்த விரும்பிய மறைந்த தலைவர் கலைஞரின் எண்ணம் இன்றிருப்பவர்களிடம் இல்லையோ என்ற வருத்தம் மேலிடுகிறது. உண்மையில் சொல்லத் தெரியாத வேதனை மனதை ஆட்கொள்கிறது. நெருக்கடி காலகட்டத்தில் தலைவர் கலைஞர் செய்ததுபோலவே, அவர் மார்ச் 1 2010 அன்று முரசொலியில் தன் உடன்பிறப்புகளுக்கு எழுதிய்ய ஒரு
பல படிகள் எடுத்து, அண்ணா அறிவாலய வாசலிலேயே வருவோர்க்கும் போவோர்க்கும் வினியோகிக்கலாமா என்று தோன்றுகிறது.
***
ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
***
தொடர்புடைய பதிவுகள்:
தமிழகத் தேர்தல் 2021: திமுக தேர்தல் அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் அரசியல் பங்கேற்பு பற்றி பேச்சே இல்லை
2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: மனங்களைப் பிரதிபளிக்கும் தேர்தல் அறிக்கை
3 thoughts on “அறிவாலயத்தின் வாசலில்”