டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள் 1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற பார்வையற்றோர் சேர்ந்து பல்வேறு பயிற்சிகளைப் பெற்று தங்கள் நிலையை உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் வளர்ச்சியை முக்கிய குறிக்கோளாகக்கொண்டு இதுபோன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இரு நிறுவனங்களையும் மூடுவதால், தற்போது பல்வேறு பயிற்சிகளில் இணைந்து பயின்றுவரும் மாணவர்கள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். அத்தோடு, பார்வையற்றோருக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, அரசின் இலவசத் திட்டத்தின் மூலமாக நாடு முழுதும் உள்ள பார்வையற்றோருக்குக் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் வினியோகிக்கிற நடவடிக்கையும் நின்றுவிடும்.
இந்த நிறுவனங்களை மூடுதல் என்ற நடவடிக்கையை தனித்துப் பார்ப்பதைவிட, இது புதிய தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். தற்போது நடுவண் அரசால் அமல்ப்படுத்தப்பட உள்ள கல்விக்கொள்கையானது, கல்வியை வணிகமையப்படுத்துவது மற்றும் மாநில அரசின் உரிமையைப் பறிப்பது என்ற நோக்கத்தைப் பெரிதாகக் கொண்டுள்ளது. கல்வி வணிகமயமாக்கப்பட்டால், அதனால் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
புனித உடல்கொண்டோர் என்று சொல்வது, ஊனமுற்றோருக்கான வளர்ச்சி குறித்து வர்ணனை நிறைந்த வரையறைகளைக் கொடுக்கிற அரசின் செயல்பாடுகளோ அதற்கு நேர் எதிராக இருக்கிறது.
தொடர்புடைய மண்டல மையங்களை மூடும் திட்டத்தை நடுவண் அரசு கைவிட வேண்டுமென ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கேட்டுக்கொள்கிறது. அரசு அதற்கு முன்வராத பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் செயல்படும் எமது அமைப்பினர் வலுவான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be the first to leave a comment