தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி. டி. தேர்வில் தேர்ச்சிபெற்று, இரண்டு ஆண்டுகளுக்குமுன் இளநிலை உதவியாளராக காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்விரிவாக்க மையத்தில் பணியில் இணைந்த செல்வி. சரண்யா என்னும் ஊனமுற்றவர், அவ்வலுவலகத்தில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்ற காரணத்தால் பணிக்கு செல்ல விருப்பமில்லை என்று பலமுறை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
எனினும், கடின உழைப்பால் கற்று பெற்ற வெற்றி என்பதால், அத்தகைய அசௌகரியத்தையும் பாராது, மழைநாட்களிலும் பணிக்கு சென்றிருக்கிறாள் அந்்தப் பெண். கழிப்பறையினை பயன்படுத்த, அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களின் வீட்டிற்கு செல்லும்வழியில் மழைநீர் அதிகமாக தேங்கியிருந்தமையால் ஓட்டைக்கொண்டு மூடப்பட்டிருந்த எட்டடி கழிவுநீர் தொட்டியில் கால்வைத்து தவறி விழுந்துள்ளார். நீண்டநேரமாக தனது இருக்கையில் இல்லை என்பதால் உடன் பணியாற்றும் பணியாளர்களால் தேடப்பட்டதை தொடர்ந்து, ஊர்மக்களால் மீட்கப்பட்டு, மூன்று சக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்.
செல்வி. சரண்யாவின் மரணம் முழுக்க முழுக்க அரசு அலுவலர்களின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்துவிட்ட ஒரு கொடுமை எனவும், சரண்யாவின் இறப்பிற்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், “ஊனமுற்றோருக்கான பணிச்சூழலில் அவர்களுக்கான உகந்த தடையற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும்” என்ற ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 20.2 சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனமாகச் செயல்பட்டு, ஒரு உயிரிழப்பிற்குக் காரணமான வேளாண் துறையின் உயர் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மாநிலத்தில் முழுமையாகவும், வலிமையாகவும் அமல்ப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஊனமுற்றோருக்கான பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்திட வேண்டும் எனவும் வலியிறுத்தப்பட்டுள்ளது.
Be the first to leave a comment