இந்திய மறுவாழ்வு கவுன்சில் நடத்திடும் வகுப்புகள் சிலவற்றிற்கு, விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு அனுமதியளித்திடாமல் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு, அநீதியைக் களைந்திட வேண்டும் என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் முரளிதரன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகத்தின் கீழ் இயங்கிடும் ஊனமுற்றோருக்கு அதிகாரமளித்திடும் துறை, செயலாளருக்கு முரளிதரன் நவம்பர் 13 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய மறுவாழ்வு கவுன்சில் நடத்திடும் பல்வேறு வகுப்புகளுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான சேர்க்கையில் விண்ணப்பித்தருந்த ஊனமுற்ற மாணவர்களில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டிருப்பதை நிறுத்துவதற்குத் தங்கள் உடனடித் தலையீட்டைக் கோரி இக்கடிதம் எழுதப்படுகிறது.
இந்திய மறுவாழ்வு கவுன்சில், 2020-21ஆம் கல்வியாண்டுக்கான சில பட்டய அளவிலான பாடப்பிரிவுகளுக்கு, சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகக் கோரியிருந்ததைத் தாங்கள் அறிந்திருக்கலாம். இதற்கு ஊனமுற்ற மாணவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தார்கள்.
எனினும், பொது மாணவர்கள் மற்றும் தலித்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ஊனமுற்ற மாணவர்கள் ஆகியவர்களின் சேர்க்கைக்கான தேசிய தகுதிப் பட்டியல் (National Merit List) நவம்பர் 5 அன்று ஓர் அறிவிக்கையின் மூலமாக அறிவிக்கப்பட்டதைப் பார்த்த ஊனமுற்ற மாணவர்கள் பயங்கர அதிர்ச்சி அடைந்தனர்.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஊனமுற்ற மாணவர்கள் பெயர்கள் தகுதிப் பட்டியலில் காணப்படவில்லை. அவர்களைவிடக் குறைவாக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
பல நிறுவனங்களில் ஊனமுற்ற மாணவர்களில் இருவர் மட்டுமே தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள், அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதிலும், பரிசீலிக்கப்படவில்லை. (இதில் பல பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 51 சதவீதம் ஆகும்).
இதில் மேலும் அதிர்ச்சியளித்த அம்சம் என்னவெனில், இந்திய சைகை மொழி போதனைப் பட்டயம் (DTISL-Diploma inTeaching Indian Sign Language) பாடப்பிரிவிற்கு காது கேட்காத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கே தகுதி படைத்தவர்கள் என்ற நிலை இருக்கையில், பொதுப்பட்டியலில் உள்ள ஊனமில்லாத மாணவர்கள் அந்தப் பாடப்பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகும். அவர்கள் இந்தப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
ஊனமுற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருக்கையில், அவர்கள் பொது மாணவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்றிருந்தார்களானால் அவர்களை பொது மாணவர்களுக்குப் பரிசிலனை செய்யக்கூடிய தகுதியின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்திட வேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்காமல் அவர்களுக்கு இடங்கள் அளிக்க மறுப்பது இயற்கை நீதிக் கொள்கைகளுக்கு எதிரானதாகும். நாட்டின் சட்டங்கள் மற்றும் மத்திய மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் அனைத்திற்கும் எதிரானதுமாகும்.
இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற அமர்வு, இந்திரா சாஹ்னி (எதிர்) மத்திய அரசு (1992) வழக்கில் தெளிவாகத் தீர்ப்பினை அளித்திருக்கிறது. இந்தத் தீர்வறிக்கையை ஒட்டி வேறுபல தீர்ப்புரைகளும் ஏராளமாக உண்டு.
இத்தகைய சூழ்நிலைகளில், இந்திய மறுவாழ்வு கவுன்சில் வெளியிட்டுள்ள தகுதிப் பட்டியலை ரத்து செய்திட வேண்டும் என்றும், இந்தத் தவறுகளைக் களைந்து புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான நடைமுறை தொடங்கியிருப்பதாலும், அவை நவம்பர் 16 முடிவதாலும், தங்கள் உடனடிக் கவனத்தை இதில் கோருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதி கோரி நீதிமன்றத்தை நோக்கிச் செல்வதைத் தவிர்த்திடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு முரளிதரன் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
1 thought on “இந்திய மறுவாழ்வு கவுன்சில் நடத்திடும் வகுப்புகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகம் தலையிட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கோரிக்கை”