சென்னை மாநகரின் முன்னால் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டைத் தொகுதி எமெல்ஏவுமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். மாற்றுத்திறனாளியான அவருக்கு வயது 34.
மா. சுப்பிரமணியன் காஞ்சனா இணையருக்கு இளஞ்செழியன், அன்பழகன் என்ற இரு மகன்களுல் அன்பழகன் இளையவர். கரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருந்த அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு புதியதலைமுறை நெறிப்படுத்திய ‘அவரும் நானும்’ என்ற தொடரில் தன் மகன் அன்பழகனைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள், “எங்களின் அறுபது வயதிலும், ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நல்வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது, அவனுக்கு நாங்கள்தான் உலகம்” என்றார்.
“எதுவும் பேசமாட்டான், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அறியாதவன் என்றாலும், ரஜினிகாந்த் திரைப்படங்களை டீவியில் பார்த்தால் தானாகவே தலைகோதிக்கொள்வான்” என்றார் உருக்கமாக.
மகனை இழந்து தவிக்கும் ஐயா மா. சுப்பிரமணியன் காஞ்சனா தம்பதிக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது சவால்முரசு.
Be the first to leave a comment