இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் 286ஆவது இடம் பிடித்தும், பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணான பூரணசுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்படாததற்கு எதிர்க்கட்சி தலைவரான திரு. மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பூரணசுந்தரியின் நீதிப் போராட்டத்தில் திமுக அவருக்குத் துணைநிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணான பூரணசுந்தரி, கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி வெளியிடப்பட்ட இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகளில் நாட்டிலேயே 286ஆவது இடம்பிடித்து சாதனைபடைத்தார். இந்நிலையில், தன்னைவிட குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு ஐ.ஆர்.எஸ் பணி ஒதுக்கப்படுவதை ஏற்க முடியாது எனக் கருதி, நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் நடுவண் அரசுப் பணியாளர்த் தேர்வாணையத்தின் முடிவை எதிர்த்து மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தனக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ் பணி வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
செல்வி. பூரணசுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கப்படாதது கண்டிக்கத் தக்கது எனக் குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், பூரணசுந்தரியின் நீதிப் போராட்டத்திற்கு திமுக துணைநிற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
2 thoughts on ““பூரணசுந்தரியின் நீதிப் போராட்டத்தில் திமுக துணைநிற்கும்” ஸ்டாலின் அறிவிப்பு”