graphic தொடரும் உரிமை ஓட்டம், துணைநிற்க வேண்டியது நம்மவர்கள் கடமை

நன்றி விகடன்.com: கேட்டது ஐ.ஏ.எஸ்… கிடைத்தது ஐ.ஆர்.எஸ்!’ -மதுரை பூர்ணசுந்தரி விவகாரத்தில் என்ன நடந்தது?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஆ.விஜயானந்த்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது மாற்றுத் திறனாளி மாணவி பூர்ணசுந்தரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `என்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கெல்லாம் ஐ.ஏ.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற அவரது வாதம், கல்வியாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மதுரை சிம்மக்கல் அருகில் உள்ள மணிநகரத்தைச் சேர்ந்தவர் எம்.பூரணசுந்தரி (25). இவருக்கு 5 வயதிலேயே பார்வை நரம்பில் பிரச்னை ஏற்பட்டது. அதனை ஒரு குறையாகப் பார்க்காமல் தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்ணைப் பெற்றார். இதனையடுத்து, மதுரை பாத்திமா கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்தார். தொடக்கத்தில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்ததால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானார். கடந்த 2018-ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று, ஊரக வளர்ச்சி வங்கியில் பணியில் சேர்ந்தார். இருப்பினும் ஐ.ஏ.எஸ் கனவை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து நான்காவது முறையாகத் தேர்வு எழுதி கடந்த 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி வெளியான தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் 286-வது இடம் பெற்றார்.
இந்தத் தகவல் பூர்ணசுந்தரியின் பெற்றோர் முருகேசன் – ஆவுடைதேவி தம்பதியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக வங்கிப் பணியில் இருந்து கொண்டே சவால்களை எதிர்கொண்டு, குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றதை அரசியல் கட்சித் தலைவர்களும் கல்வியாளர்களும் வரவேற்றனர். ஆனால், இந்த உற்சாகம் இரண்டு மாதங்கள்கூட நீடிக்கவில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பட்டியலில், பூர்ணசுந்தரிக்கு ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய்ப் பணி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த பூர்ணசுந்தரி, தனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ` ஓ.பி.சி இடஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஐ.ஆர்.எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓ.பி.சி பிரிவில் என்னைவிடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பூர்ணசுந்தரி தரப்பில் வழக்கறிஞர்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிட்டனர். முடிவில் தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில், `2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து செப்டம்பர் 21 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது’ எனத் தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 22-ம் தேதி வரவுள்ளது.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரனிடம் பேசினோம். “ தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியானது. மத்திய அரசு இறுதிப் பட்டியலை வெளியிட்டாலும் தீர்ப்பாயம் என்ன சொல்கிறதோ அதுவே, இறுதியானதாக இருக்கும் என்பதை வரவேற்கிறேன். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பொறுத்தவரையில், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டில் சில வரையறைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் உடல்ரீதியான குறைபாட்டுடன் யாராவது இருந்தால் அவர்களுக்கு ஒதுக்குவார்கள். பூர்ணசுந்தரி விவகாரத்தில் ஓ.பி.சி ஒதுக்கீடும் நிரம்பிவிடும், மாற்றுத்திறனாளி கேட்டகிரியும் சேர்ந்துவிடும்.
அதாவது, ஒதுக்கீட்டுக்குள்ளேயே இன்னொரு ஒதுக்கீடு என்பதாக இதை எடுத்துக் கொள்ளலாம். மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் பூர்ணசுந்தரி பக்கமே நியாயம் உள்ளது. ஐ.ஏ.எஸ் கொடுக்கும்போது, அவர் களத்துக்குச் செல்வதில் உள்ள சிரமங்களை சிலர் முன்வைப்பார்கள். ஆனால், அதையும் இப்போது முன்வைக்க முடியாது. ஏனென்றால், பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணான பிரஞ்சல் பாட்டீல் என்பவருக்கு ஐ.ஏ.எஸ் கொடுத்தனர். அவர் திருவனந்தபுரத்தில் சார் ஆட்சியராகப் பொறுப்பும் ஏற்றார். எனவே, பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு ஐ.ஏ.எஸ் கொடுக்கக்கூடாது என்ற வாதம் எடுபடுவதற்கு வாய்ப்பில்லை. மதுரை மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை தேர்வாணையம்தான் விளக்க வேண்டும்” என்றார்.
அடுத்து, இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “ குடிமைப் பணிக்கான இடங்களை நிரப்புவதில் எதிர்ப்பு வந்தால் அதை சரிசெய்துவிட்டுத்தான் இறுதிப் பட்டியலையே வெளியிட வேண்டும். தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்காகக் காத்திருக்கக் கூடாது. ஒரு தேர்வர், அந்தத் தேர்வுக்காக தன்னை வருத்திக் கொண்டுதான் படிக்கிறார். அரசின் சம்பளத்துக்காக மட்டும் அவர்கள் வேலைக்கு வருவதில்லை. இந்தச் சமூகத்துக்கு எதாவது சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் வருகின்றனர். அரசுப் பணியின் மூலம் சேவையாற்றுவதை கடமையாகக் கொண்டும் சிலர் வருகின்றனர்.
அதிலும், மாற்றுத் திறனாளி என வரும்போது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்கின்றனர். பூர்ணசுந்தரி முன்வைக்கும் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு, அதைத் தெளிவுபடுத்திவிட்டுத்தான் பட்டியலையே வெளியிட வேண்டும். அதுவும், இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல், இவர்களே சரிசெய்வதுதான் நியாயமானதாக இருக்கும். அப்போதுதான் மக்களுக்கு இதுபோன்ற தேர்வுகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்றார் உறுதியாக.

பகிர

1 thought on “நன்றி விகடன்.com: கேட்டது ஐ.ஏ.எஸ்… கிடைத்தது ஐ.ஆர்.எஸ்!’ -மதுரை பூர்ணசுந்தரி விவகாரத்தில் என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *